நாவுக்கரசர்
– ஞானசம்பந்தர் முதல் சந்திப்பு
இது ஒரு பெரியபுராணச் சிந்தனை.
நாவுக்கரசுப் பெருமான் தில்லை அம்பலவனைத்
தொழும் வண்ணமாக தில்லையை அணைந்தார். “பத்தனாய் பாட மாட்டேன்” என்ற பதிகம் பாடி சிற்றம்பலத்து
ஈசனை மனம் உருகு வேண்டி நிற்கின்றார். அந்நேரம் அவருக்கு ஒரு செய்தி கிடைக்கின்றது.
சீகாழிப் பதியில் ஒரு சிறு குழந்தை அம்மைஅப்பரிடம் அமுதப் பால் உண்டு அவரைப் போற்றித் தொழுது பதிகங்களால் ஓதுகின்றார்
என்று. அக்குழந்தையை தரிசிக்க வேண்டும் என்னும் அவா எழுகிறது நாவுக்கரசுப் பெருமானுக்கு.
உடன் கழுமலம் நோக்கி பயணிக்கிறார். இந்த இரு பெரும் அருளாளர்கள் சந்திப்பு எவ்வாறு
நிகழ்ந்தது என்பதை சேக்கிழார் பெருமான் மிகவும் கருத்துச் செறிவோடும், அவருக்கே உண்டான
நயத்துடன் பதிவும் செய்கிறார்.
தொண்டர் குழாத்திடையே சென்று.
பழுதில் பெருங்காதலுடன் அடிபணியப் பணிந்தவர்
தம் கரங்கள் பற்றி
எழுதரிய மலர்க் கையால் எடுத்து இறைஞ்சி
விடையின் மேல் வருவார் தம்மை
அழுது அழைத்துக் கொண்டவர் தாம் அப்பரே என
அவரும் அடியேன் என்றார். (பாடல் 182- நாயனார் புராணம்)
நாயனார் தம் கைகளைத் தன் சிரசின்மேல் தூக்கிக் கொண்டு, சிவபெருமானை வணங்குவதுபோல், (ஞானசம்பந்தப் பெருமானைக் காண்பதற்கு முன்னரே) குழுமியிருந்த தொண்டர்களிடயே புகுந்து சென்றார். மனதில் பெருகும் அன்பினோடு உள்ளுருகி அளவிடற்கரிய காதலோடு பிள்ளையார் திருவடிகளைப் பணிந்தார், அவ்வாறு வீழ்ந்து அடி பணிந்த நாயனாரின் கரங்களை தம்முடைய எழுதற்கரிய மலர் போன்ற கரங்களைப் பற்றி எதிர் பணிந்து , ‘அப்பரே ‘என்றார்.
தம்மைப் பணிந்த நாயனாரின் கைகளைப் பற்றியது, உழவாரப் பணி செய்யும் கரங்கள் திருவடிக்கும் மேலானவை என்று பிள்ளையார் கருத்தினால் என்று தெளிய வேண்டும். தொழுத கரத்தோடு சென்றார் ஆகையால், எதிர்சென்ற பிள்ளையாரும் எதிர் தொழுது அணைந்தார்.
ஞானசம்பந்தர் புராணத்தில் இச்சந்திப்பை ஆசிரியர் பெருமான்,
தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே
அண்டரும் போற்ற அணைந்த அங்கு அரசும் எதிர் வந்து இறைஞ்ச
மண்டிய ஆர்வம் பெருக மதுர மொழி அருள் செய்தார்…… ( பாடல் 271)
என்று பதிவிடுகிறார். கருத்தில் பரவுகின்ற
உண்மை அன்புப் பெருக்கின் இடமாகிய தொண்டர்
திருவேடம் நேரே வந்து தோன்றியது என்று கொண்டு தொழுதாராம் கவுணியக் கன்று.
ஞானசம்பந்தப் பெருமானுடைய கரங்களை ஒப்புமை
கூற இயலாது எண்ணுவதற்கோ, எழுதுவதற்கோ இயலாத
பெருமையுடைய கரங்கள், அவை என்று “எழுதரிய மலர்க்கரங்கள்” என்றுகூறி முடித்தார். கரங்கள் எவருடையது? பெருமானை அம்மே அப்பா என்று
அழுது அழைத்துக் கொண்டவராகிய ஞானசம்பந்தர் என்றும் அங்கே பதிவு செய்கிறார் சேக்கிழார்
சுவாமிகள்.
அப்பரே என்று நாயனாரை பிள்ளையார் அருமையுடன்
அழைத்து பெருமையுறச் செய்து தன் அன்பின் ஆழத்தை
அவருக்கு வெளிப்படுத்துகிறார். (அப்பர் – ஐயர்,
தலைவர், தந்தை போன்றவர்) அப்பரே என்று ஏகாரம் ஒலிக்க , நீர் அப்பரேயன்றோ, ஆதலால் அடி
பணிதல் தகாது என்று கூறுவதுபோல உரைத்தார் பிள்ளையார். இவர் கொடுத்த இப்பெயர் பின்பு மிகவும் வழக்கமான ஒன்றாக
ஆகியது.
நாவுக்கரசுப் பெருமான், இதற்கு பதில்
கூறும் விதமாக, “அடியேன்” என்றார். அப்பராம் தன்மையில் வைத்து எனக்கு அருள் செய்தாலும்,
நான் என்றும் உமது அடியவன்தான், ஆகவே யான்
அடி பணிதலே சிறப்பு என்று கூறுவதாக இந்த சொற்றொடர் அமைந்தது. நாவுக்கரசுப் பெருமானின்
பணிவு எத்தகையது என்பதை இங்கே சேக்கிழார் சுவாமிகள் நமக்கு உணர்த்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக