ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தாண்டகச் சதுரர்



தாண்டக வேந்தர்

அரியானை அந்தணர்தம்  சிந்தையானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறைப் பதிகங்கள் அனைத்தும் பண் அமைப்பு உடையன. இசைத்தமிழ் பாடல்களாக 10 பண்கள் நான்காம் திருமுறையில் காணப் படுகின்றன. ஐந்தாம் திருமுறை குறுந்தொகை என்ற அமைப்பிலும் ஆறாம் திருமுறை தாண்டகம் என்ற யாப்பு அமைப்பிலும் அமைந்துள்ளன. எனவே நான்காம் திருமுறை இசைத்தமிழ் எனவும் ஐந்து, ஆறாம் திருமுறைகள் இயற்றமிழ் எனவும் குறிக்கப்பட்டன. ஐந்தாம் திருமுறை பாடல்களை, நாதநாமக்கிரியை, மாயாமாளவகௌளை ஆகிய ராகங்களில் ஓதுவா மூர்த்திகள் பாடிவருகின்றனர். ஆறாம் திருமுறையான தாண்டகப் பாடல்களை சுத்தாந்தமாகப் பாடி வருகின்றனர்.

தாண்டக யாப்பு என்றால் என்ன? மிக எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு அடியிலும் ஆறு சொற்கள் அல்லது 8 சொற்கள் அமைவதே தாண்டகத்தின் இலக்கணம். ஆறுசீர்களில் அமையும் தாண்டகம் குறுந்தாண்டகம் என்றும் 8 சீர்கள் கொண்டது நெடுந்தாண்டகம் என்றும் கூறப்படுகிறது. எண்சீராக வருகின்ற தாண்டகப் பாடலில் அடிதோறும் மூன்று, நான்கு, ஏழு, எட்டு சீர்களை நீக்கி, மற்ற சீர்களை இணைத்து நோக்கினால், கொச்சகக்கலிப்பா யாப்புருவில் பாடல் அமைவதைக் காணலாம். (கற்பகம் பல்கலைகழக ஆறாம் திருமுறை வெளியீடு)

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
   
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
   
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
   
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
   
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே      (6-9-1)

வண்ணங்கள் தாம்பாடி வலிசெய்து வளைகவர்ந்தார்
கண்ணம்பால் நின்றெய்து  கடியதோர் விடையேறிக்
சுண்ணங்கள் தாங்கொண்டு  தோலுடுத்து நூல்பூண்டு
அண்ணலார் போகின்றார் அழகியரே ஆமாத்தூர் .

இலக்கண முறையில் இன்னும் பல விளக்கங்கள் கூறப் படுகின்றன. எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன குறிப்பைப் பயன் படுத்தலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக தாண்டக யாப்பில் பாடல்களை அருளியவர் அப்பர் சுவாமிகள். அதனால் அவரை தாண்டகச் சதுரர் என்று சேக்கிழார் சுவாமிகள் போற்றுகின்றார். "தலைவரான பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகு அலர்  புகழ் அழைப்புகள் அரசும் கூட அங்கு எழுந்து  அருளக் கண்டு" என்பது சேக்கிழாரின் பெரியபுராணம். திருக்கடவூரில் குங்கிலியக்கலயரின் திருமடத்தில் அப்பரும் சம்பந்தரும் எழுந்து அருளிய போது இதைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார். பின்பு வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் நால்வர் நான்மணி மாலையில் தாண்டக வேந்தர் என்று அப்பரைப் போற்றுகிறார். இத் தாண்டகப் பதிகத்தில்தான் (6-23) தமிழை முதன் முதலாக முத்தமிழ் என்றும், தமிழரைத் தமிழன் என்றும் அடையாளம் கண்டவர்  நாவுக்கரசுப் பெருமான்.

ஆறாம் திருமுறையில்  99 திருத்தாண்டகப் பதிகங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நெடுந்தாண்டகம் அமைப்பை சேர்ந்தது. சிவ சம்பந்தப் பட்டதால் திரு என்று இணைத்து திருத்தாண்டகம் என்று வழங்கப்படுகிறது

ஆறாம் திருமுறையில் முதல் இரண்டு திருப்பதிகங்கள் தில்லையில் அருளப்பட்டன. முதல் திருப்பதிகத்தை பெரிய திருத்தாண்டகம் என்றும் இரண்டாவதை ‘புக்க திருத்தாண்டகம்’ என்றும் சான்றோர் குறித்துள்ளனர்.

தொடர்ந்து வரும் ஐந்து திருப்பதிகங்களும் திருவதிகையில் பாடப் பெற்றன. மூன்றாவதாக உள்ளது ஏழைத் திருத்தாண்டகம் என்றும் நான்காவது அடையாள திருத்தாண்டகம் என்றும், ஐந்தாவது போற்றித் திருத்தாண்டகம் என்றும் ஆறாவது திருவடி திருத்தாண்டகம் என்றும் ஏழாவது காப்புத் திருத்தாண்டகம் என்றும் சொல்லப் படுகிறது. மற்ற பதிகங்களுக்கு இது போன்ற சிறப்புப் பெயர் கொடுக்கப் படவில்லை. இறுதியில் வரும் எட்டு திருப்பதிகங்கள்   சிறப்புப் பெயர் பெற்ற தாண்டகப் பதிகங்கள்.

இதன் பெயர்கள் முறையே ஷேத்திரக் கோவை திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித்திருத்தாண்டகம், திருவினா திருத்தாண்டகம், மறுமாற்றுத் திருத்தாண்டகம் என்பதாக 15 பதிகங்கள் ஆறாம் திருமுறையில் சிறப்புப் பெயர் பெற்ற தாண்டகப் பாடல்கள்.

இவைகளன்றி திருவாரூர் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும், திருக்கைலாய திருத்தாண்டகப் பதிகங்கள் 3 ஆக நான்கு பதிகங்கள் போற்றித் திருத்தாண்டகம் என்ற பிரிவில் அமைந்துள்ளன. ஆகமொத்தம் 19 பதிகங்கள் சிறப்புத் தலைப்புடைய தாண்டகப் பதிகங்கள்.

நாம் இப்பொழுது சிறப்புப் பெயர் பெற்ற இந்தப்பதிகங்களைப் பற்றிய சில குறிப்புகளைக் காணலாம்.

பெரிய திருத்தாண்டகம்:

முன்பே குறிப்பிட்டபடி முதல் பதிகம் பெரிய திருத்தாண்டகம் என்று கூறப்படுகின்றது. முதல் பாடலில் பெரியானை என்றும் பெரும்பற்றப் புலியூரானை என்றும் பின்னர் பெருமானை, பெருந்தகையை, பெரும் துணையை, பெரும்பொருளை,பெரும்பயனை,பேரொளியை என்றெல்லாம் அப்பர் சுவாமிகள் குறிப்பதால் இப்பெயர் பெற்றது என நாம் உணரலாம். அது மட்டுமன்றி உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரியவன் ஆகையினால் இந்தப் பதிகம் பெரிய திருத்தாண்டகம் என்று குறித்தனர்.

புக்க திருத்தாண்டகம்:

ஒவ்வொரு பாடலிலும் ‘புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே’ என்று அமைத்துப் பாடியதால் இது இவ்வாறு அழைக்கப் படுகின்றது. மேலும் இறை நெறி கலைகள் அனைத்தும் அர்த்தஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாக குறிப்பிடப் படுவதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறலாம்‘ புக்க’ என்றால் புகுந்தது என்று பொருள்.

ஏழைத் திருத்தாண்டகம்:

மூன்றாவது பதிகம் இவ்வாறு அழைக்கப் படுகிறது. ஏழை என்பது செல்வமின்மை, வலிமை இன்மை, அறிவின்மை முதலியவற்றைக் குறிக்கும். இங்கு அப்பர்  பெருமான் அறிவில் ஏழையாகவே தம்மைக் குறிப்பிகிறார். சமண சமயம் சார்ந்து இருந்தபோது, அறிவு தெளிவின்றி இருந்தமையால் இப்பாடல்கள் அனைத்தும் ‘ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே’ என்று முடிகிறது. ஆகவே இந்தப் பதிகம் இவ்வாறு பெயரிடப் பட்டது.


வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை
    வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
   
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
   
அதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
   
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே

அடையாள திருத்தாண்டகம்:

இப்பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் இறைவனிடத்தில் உள்ள சந்திரன், கங்கை, சடாமகுடம் முதலிய இறை அடையாளங்களைப் பற்றியே குறிப்பிடுவதால் இவ்வாறு பெயரிடப் பட்டது. “உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல்லடை யாளங்கள் பேசினார் என்ற சேக்கிழாரது விளக்கத்தினைக் காண்க . ( தி .12 திருஞான . 825)

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
   
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
   
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
   
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
   
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே

போற்றித் திருத்தாண்டகம்:

பெருமானின் புகழை பதிகம் முழுவதும் போற்றி போற்றி என்று பல முறை கூறியதால் போற்றித் திருத்தாண்டகம் என இப்பதிகம் பெயர் பெற்றது. இத்திருப்பதிகத்தில்  82 போற்றிகள் வருகின்றன.

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

திருவடித் திருத்தாண்டகம்:

இறைவன் திருவடியே எல்லாவற்றையும் இயக்குகிறது என்ற குறிப்பில் அவன் திருவடிச் சிறப்பை பாடல் தோறும் பலவாறாகக் குறிப்பிட்டு இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. பின்னால் வந்த திருவடிப் புகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது இந்த தாண்டகப் பதிகமே என்பது குறிப்பிடத் தக்கது. அகத்தியர் தேவாரத்திரட்டில் திருவடி பெருமைக்கு இப்பதிகமே எடுத்தாளப்பட்டது.

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
    அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
    சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
    பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி
.
காப்புத் திருத்தாண்டகம்:

இவை இறைவனுடைய காப்புக்கள் (இடங்கள்) என்றே எல்லாப் பாடல்களும் முடிவதால் இவ்வாறு பெயர் பெற்றது. இறைவன் நீங்காது உறையும் இடங்களை உணர்த்திய திருத்தாண்டகம் இது என்பதாகும். இப்பாடல்களில் முதற்கண் வீரட்டானத்து இறைவரை வணங்கி, பின் மற்ற தலங்களையும் நினைவு கூர்ந்து வணங்கும் பாங்கு மகிழத்தக்கது.


செல்வப் புனற்கெடில வீரட்டமும்
   
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
   
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
   
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
   
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே

இறுதியில் வரும் 70, 71, 93, 94, 95, 96, 97, 98  ஆகிய எட்டு திருப்பதிகங்களும் சிறப்புப் பெயர் பெற்ற திருப்பதிகங்கள் ஆகும். இவை முறையே சேத்திரக்கோவை திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருவினா திருத்தாண்டகம், மறுமாற்றுத் திருத்தாண்டகம், என்று அழைக்கப் படுகின்றன.

சேத்திரத் திருத்தாண்டகம்:
 
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவாயினும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் ஒருவனே, அவன் கைலாய நாதனே என்று அப்பர் அருளிய பதிகம் இவ்வாறு பெயர் பெற்றது. சிவ தலங்களை நினைத்தலும், அவைகளின் திருப் பெயரைச் சொல்லுவதும் பெரும் பயன் தரக்கூடியவை என்று இத் திருப்பதிகத்தில் அவற்றை எடுத்துத் தொகுத்து ஓதியருளினார். பாவநாசத் திருப்பதிகத்தில் (4-15) இவ்வாறு அனைத்து தலங்களையும் குறிப்பிட்டுப் பாடியதைக் காணலாம். ‘மன்றுறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகம்’ என்பது சேக்கிழார் வாக்கு.

தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
   
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
   
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
   
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
   
கயிலாய நாதனையே காண லாமே
.
அடைவுத் திருத்தாண்டகம்:

அடைவு, முறைமை என்பன ஒரு பொருள் சொற்கள். முறைமை என்பது ஒரே தன்மை கொண்ட பொருள்களை தொடர்ந்து வரச் செய்தல். பள்ளி என வரும் தலங்களையும், வீரட்டானம், காடு, துறை, குடி, கோயில், என்று பெயர் ஒற்றுமையால் வகைப் படுத்தி  அருளிய பதிகங்கள் இவை. ஆகையால் இப்பதிகம் அடைவுத் திருத்தாண்டகம் என பெயர்  பெற்றது. அடைவு – புகலாக அடையும் இடங்கள். பிறவி வேதனைக்கு அஞ்சி உயிர்கள் வந்து அடையும் இடங்கள் சிவாலயங்கள். அத்திருத்தலங்கள் தொகுத்து இங்கே வழங்கப் படுகின்றன.


பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
   
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
   
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
   
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
   
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே
.

பலவகைத் திருத்தாண்டகம்:

பூந்துருத்தி, நெய்த்தானம், ஐயாறு, சோற்றுத்துறை, திருப்பழனம் முதலாய பல தலங்களின் பெயர்களைச் சொன்னால் பழவினை தீர்ந்து போகும், துயரங்கள் நீங்கும் என பல தலங்களின் வழி பாட்டுப் பயனைக் கூறுவதால் இது பலவகைத் திருத்தாண்டகம் என்று பெயர் பெற்றது.


நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
          நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
          படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
          தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
         பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

நின்ற திருத்தாண்டகம்:

பதிகப் பாடல்கள் பத்தும் ‘நின்றவாறே” என்று முடியும் தன்மை உடையன.பெருமான் எப்படி யெல்லாம் நின்று அருள் செய்கிறார் என்று அவர் நின்ற தன்மைகளைப் பாடுவதாக அமைந்துள்ளது. ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்கும் நிலைகளில் இப்பதிகம் ஒன்றாய் நிற்கும் நிலையை விளக்குகிறது. ஆகையால் இப்பதிகம்  இவ்வாறு பெயர் பெற்றது. வேதத்தில்  திரு உருத்திரம் இவ்வாறு அமைந்துள்ளது.

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
   
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
   
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
   
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
   
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே


தனித் திருத்தாண்டகம்:

95,96வது பதிகங்கள் இவ்வாறு பெயரிடப் பட்டன. ‘அப்பன் நீ அம்மை நீ’ எனத் தொடங்குவது சிவபெருமானை முழுமுதல் தன்மையாகிய தனித் தன்மை பேசப் படுவதால் இப்பெயர் பெற்றது. அப்பர் பெருமான் தன்னை எவ்வாறெல்லாம் இறைவன் ஆட்கொண்டான் என்பதை விளக்கும் பாடல்கள் கொண்டது இப்பதிகம். சூலைதீர்த்து, சமண்தீர்த்து, உடலுறு நோய் தீர்த்து, வெந்துயரம் தீர்த்து என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த ஒரு தலத்தையும் பற்றாமல் தனியே நிற்கும் பதிகம் என்பதாலும் இப்பெயர் நிலைத்தது.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

திருவினா திருத்தாண்டகம்:

‘அண்டம் கடந்த சுவடும் உண்டோ’ என்று ஐந்து பாடல்களில் வினா எழுப்புகிறார். மற்ற ஆறு பாடல்களிலும் பெருமானின் பெருமைகளைக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அறியான் வினாவும் , ஐய வினாவும் , அறிபொருள் வினாவும் ` என்னும் மூவகை வினாவுள் இஃது அறிபொருள் வினா .

அண்டங் கடந்த சுவடு முண்டோ
   
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
   
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
   
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
   
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

மறுமாற்றுத் திருத்தாண்டகம்:

நாவுக்கரசு சாமிகள் சமணத்திலிருந்து சைவம் சார்ந்த போது சமணர்களின் அறிவுரைப்படி மன்னன் அவரைத் தண்டிக்க வேண்டும் என்று பலரை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னான். அந்த சமயத்தில் பாடிய பதிகம் இவ்வாறு பெயர் பெற்றது. மன்னனை எதிர்த்து மறுமொழியாக சொன்னதே இப்பதிகப் பாடல்கள் என்பதால் பெயர்க் காரணம் கொண்டது. இப்பதிகத்தில்  சிவனடியார்களது பெருமை விளங்கப் பெறும்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
   
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
   
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
   
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
   
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
.
மேலேசொன்ன 15 பதிகங்கள் மட்டும் அல்லாமல் ‘கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி’ என்று தொடங்கும் திருவாரூர்த் திருத்தாண்டகம், ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’என்றுதொடங்கும் 3 பதிகங்கள், ஆக நான்கு பதிகங்கள் போற்றித் திருத்தாண்டகம் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. ஆக 19 தாண்டகப் பதிகங்கள் சிறப்புத் தலைப்பை உடையன என்று அறிந்துக் கொள்ளலாம்.