வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

இந்தக் கட்டுரை,மார்ச் 2017 'பாம்பன் சுவாமிகள் ' மாத இதழில் வெளிவந்தது

சிவாயநம
நாவுக்கரசரின் தில்லை திருநடனக் காட்சி

திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
 திருநாவுக் கரையன்தன் அடியார்க்கும் அடியேன்


நம்  திருமுறைகளில் முதல் ஏழு திருமுறைகள் பொதுவாக தேவாரம் என்று அழைக்கப்பட்டாலும்தேவாரம் என்ற சொல் நாவுக்கரசு நாயனார் அருளிய 4,5,6 திருமுறைகளை  மட்டுமே குறித்தது. காலப்போக்கில், திருக்கடைக்காப்பு, திருப்பாட்டு என்று பிரித்துப் பார்க்கும் வழக்கம் மறைந்து தேவாரம் என்ற சொல்லே முதல் ஏழு திருமுறைகளையும்  குறிக்கும் சொல்லாக உருப்பெற்றது. நாவுக்கரசு”  என்று பெருமானால் பெயர் சூட்டப்பட்டு, “அப்பரேஎன்று சிவக்குமாரராகிய ஞானசம்பந்தப் பெருமானால் அழைக்கப்பட்ட நாயனாரின் பதிகப் பெருமையை பறைசாற்றும் விதமாகவே இது அமைந்துள்ளது.

திலகவதியாரின் அருள் வாக்கோடு, சமணைத் துறந்து, சிவ பரம்பொருளை அடைய, தொண்டு நெறியை வழிக்கொண்டு வாழப்புகுந்தார் நாயனார். தமிழ் மொழித்தொண்டு, இறைத்தொண்டு, உழவாரப் பணி என்ற கைத்தொண்டு என்ற தொண்டு நெறிகளைப் பற்றிய கருத்துக்கள் நாயனாரின் பதிகங்களில் புதைந்து கிடப்பதை காணலாம். இவ்வாறு தொண்டு நெறியைக் கைக்கொண்டு சிவ பரம்பொருளைச் சிந்தையில் கண்டு இன்பமுற்றிருந்த  அப்பரடிகள், பெருமான் வீற்றிருந்த தலங்கள் பலவற்றினும் சென்று  இறைவனைக் கண்ணாரக் கண்டு களித்து, தமிழ்ப் பாமாலைகள் சூட்டி வந்தார். தலங்கள் பல சென்று வரும் நாட்களில்தில்லைஅம்பலவனின் திருநடனத்தைக் காண பெரும் ஆசை உண்டாயிற்று. சைவத் திருமரபில் தில்லையிற்சென்று சேர்தல் தனிச் சிறப்புடையது என்னும் கருத்தை மனதில் கொண்டு, பெண்ணாகடம், நெல்வாயில் அரத்துறை, திருமுதுகுன்றம் ஆகிய தலங்களில் வீற்றுள்ள பரமனைப் பாடிய வண்ணம்,பெருமகிழ்வெய்து, தில்லையை நோக்கி, நிவாநதிக்கரை (வெள்ளாறு) வழியே செல்லுகிறார்.
நாவுக்கரசு நாயனார் தில்லையை அடையும் காட்சியையும், தில்லைக்கூத்தனின் திருநடனத்தை கண்டு ஆனந்தம் மேலிடும் காட்சியையும்  சேக்கிழார் பெருமான்  நயமுடன் உரைக்கும்  தகைமை  பேரழகும் பெருஞ்சிறப்பும் கொண்டது.
திருஎல்லை என்பது தில்லை நகருக்கு ஒரு காத தூரத்தில் நாற்புரமும் உள்ள அமைப்பு. திருவெல்லையை அடைந்தவுடன் திருமேனி நிலம் பொருந்த வீழ்ந்து வணங்குகிறார். தில்லை நகரை அணுக அணுக உட்சென்று ஆனந்த நடனத்தை காணும் ஆசை பெருகுகிறதாம். இதையே சேக்கிழார் பெருமான் – “
 நாவுக்கரசர் இருவருக்கும் அரியவர் நடமாடிய திரு எல்லைபால், மேவித் தலம் உற மெய்யில் தொழுத பின் மேல் மேல் எழு தரும் விரைவோடும்…………” (பெ.பு 1422).  
என்று அழகுற  பதிவு செய்கிறார்.

நகரின் பல அமைப்புகளைக் கடந்து, நாயனார் பணிவுடனே தொழுதுக்கொண்டே அங்கு சேர்கிறார். இவர் திருவடிவினைக்கண்டு, அங்கு மரக்கிளைகளின் மேல் அமர்ந்துள்ள கிளிகள், இது அதிசயம் என்று சொல்லி, தில்லையை அடைந்து வணங்கும் எண்ணற்ற அடியார்கள் சொல்லக் கேட்ட பழக்கத்தால், கிளிகளும்அரகரஎன்று சிவமொழி முழக்கின. இந்த திருவடிவுடைய அடியவரைக் காணும் பேறு கிடைத்தமையால் அவை பெருமிதம் உற்று இது ஓர் அதிசயம் என்று கூறியதாம். அரகர என்று கிளிகளும் கூறியது சிவ மந்திரங்கள் ஆகும் என்று, அவை சிவ மொழிகளைச் சொல்லியதால், சிவனடியார் ஆகும் தகுதி பெற்றுவிட்டன என்று நாயனார் அவைகளையும் தொழுதார்.

நாவுக்கரசர், கோபுரத்தைக் கண்டு வணங்கி, கண்ணீர் மல்க, கோயிலின் மேலை வாயில் வழியாக உட்புகுந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் புடைசூழ ஆலயத்திற்குள் எழுந்தருளுகிறார்.
  
வளர்பொற் கனமணி திருமா ளிகையினை
              வலம்வந் தலமரும் வரைநில்லா
அளவிற் பெருகிய ஆர்வத் திடையெழும்
             அன்பின் கடல்நிறை உடலெங்கும்
புளகச் செறிநிரை விரவத் திருமலி
             பொற்கோ புரமது புகுவார்முன்
களனிற் பொலிவிடம் உடையார் நடநவில்
             கனகப் பொதுஎதிர் கண்ணுற்றார். (பெ.பு 1430)

வலம் வருவதற்கு முன்னமே, பேராவல் பெருகி, திருமேனி புளகாங்கிதப்பட்டு, மயிர்க்கூச்சுப் பரவ, திருநடனம் நிகழும் கனகசபையாகிய பொன்னம்பலத்தை தம் கண்களால் தரிசித்தார்கோயில் வலத்தை எப்போது முடித்து உள்ளே புகுவோம் என்ற மன நிலையில் பேராவல் பெருக நின்றாராம் நாவுக்கரசுப் பெருமான்.

கையும்  தலைமிசை புனை அஞ்சலியன
கண்ணும் பொழி மழை ஒழியாதே
பெய்யும் தகையன கரணங்களும் உடன்
உருகும் பரிவின  பேறு எய்தும்
மெய்யும் தரைமிசை விழுமுன் எழுதரும்
மின்தாழ் சடையொடு நின்றாடும்
ஐய்யன் திருநடம் எதிர் கும்பிடும் அவர்
ஆர்வம் பெருகுதல் அளவு இன்று ஆல். (பெ.பு. 1432)

தில்லை அம்பலவனின் திருநடனத்தை தரிசிக்கும்போது, அவருடைய கைகள் தலையின் மேல் அஞ்சலியாக கும்பிட்டுக்கொண்டிருந்தன. விழிகளில் மழையைப் போல இடைவிடாது கண்ணீர் பொழிந்துக் கொண்டிருந்தது. கூத்தப் பெருமானின் பாத கிண்கிணிகள் பரதமாட, அரவணிந்த அழகிய வெண்ணீறு அணிந்து விளங்கும் மலர்க்கரங்கள் அபினயத்தோடு தெரிவது கண்டார். அகக்கரணங்களும், புறக்கரணங்களாகிய திருமேனி உறுப்புகளும் ஒருசேர பேராவல் பெருகி எழ, அன்பினால் உருகி  கீழே விழுந்து வணங்குவார். இந்த வணக்கம் முற்றுப் பெறுவதற்கு முன்பே  மீண்டும் விழுந்து வணங்க முற்படுகிறார்.. நாயனாரின் ஆர்வம் மிகப் பெருகி, அளவு கடந்து நின்றதனால் இவ்வாறு நிகழ்ந்தது எங்கிறார் சேக்கிழார் பெருமான்.

இவ்வாறு பலமுறையும் தொழுது எழும்போது, இறைவனுடைய திருமுகக்  குறிப்பு ஒன்று தோன்றுகிறது நாயனாருக்கு. “என்றெய்தினை என்”  என்பது இறைவனின் திருமுக க் குறிப்பாக நாயனாருக்குத் தோன்றுகிறது. “என்று வந்தாய், வருக” என்று இறைவன் அவருடைய வருகையை ஏற்றுக் கொண்டார் என்பது சேக்கிழார் பெருமானின் வாக்கு.

இத்தன்மையர் பலமுறையும் தொழுது எழ
என்று எய்தினை என மன்று ஆடும்
அத்தன் திருவருள் பொழியும் கருணையின்
அருள் பெற்றிட வரும் ஆனந்த
மெய்த்தன்மையினில் விருத்தத் திருமொழி
பாடிப் பின்னையும் மேன்மேலும்
சித்தம் பெருகிய பரிவால் இன்புறு
திருநேரிசை மொழி பகர்கின்றார்.       (பெ.பு. 1433)

இவ்வாறு மூர்த்திகளின் திருஉருவை வணங்குபவர்கள்  தங்களை பக்குவப் படுத்தித் தகுதியை ஏற்படுத்திக் கொண்டால் இறைவனுடைய திருக்குறிப்பு  தோன்றும் ; அவற்றை உணரவும் முடியும், என்பதே இங்கு பொதிந்துள்ள உண்மை.

ஒன்றியிருந்து நின்று தொழுதலால் இறைவரது தன்மை அவருக்கு விளங்கிற்று. அவ்வாறு மெய்மறந்து நின்ற நிலையில்  “ பத்தனாய் பாட மாட்டேன்” என்று தொடங்கும்  இனிய தமிழ் மாலையைச் சூட்டுகிரார்.

ஒன்றி யிருந்து நினைமின்க ளுந்தமக் கூனமில்லை
கன்றிய காலனைக் காலாற் கடிந்தா னடியவற்காச்
சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்றுவந் தாயென்னு மெம்பெரு மான்றன் றிருக்குறிப்பே. (4-81-2)

என்று நாவுக்கரசுப் பெருமான் இறைவனுடைய திருக்குறிப்புப் பெற்றதை இங்கு பதிவு செய்கிறார்.  தான் பெற்ற திருக்குறிப்பை நீங்களும், ஒன்றியிருந்து தொழுவீர்களேயானால் பெறலாம் என்று உலக உயிர்களுக்கும் எடுத்து உரைக்கின்றார்.

மற்றும் இப் பதிகப் பாடல்களில் தான் கண்ட சிற்றம்பலக்காட்சியை பலவாறு தெளிவு படுத்தி, உலகவர் உய்யவும் வழி வகுக்கிறார்.
“……………………………..றில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
பொன்மலை யில்வெள்ளிக் குன்றது போலப் பொலிந்திலங்கி
என்மன மேயொன்றிப் புக்கனன் போந்த சுவடில்லையே.

 குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

என்று திருநட்ட நிலையைக் கண்டு தன் உள்ளம் பறிகொடுத்தார்.

முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்
துடிகொண்ட கையுந் துதைந்த வெண்ணீறுஞ் சுரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற் 
குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.

தீவினையை ஈட்டிய என்னுடைய உள்ளத்தில் கூத்தப்பிரானின் திருஉருவம் நிலையாக இடம் பெற்றுவிட்டது என்று தன் அனுபவத்தை எடுத்துச் சொல்லுகிறார். எழு பிறப்புகளில் எந்தப் பிறப்பு எடுத்தாலும் அப்பிறப்பிற்கேற்ப உனக்கு தொண்டு செய்கிறேன். நீ என்னை விலக்கினாலும் நான் உன்னை விட்டு அகலேன் என்று பலவாரும் தொழுது அழுது புலம்புகிறார் தில்லைக் கூத்தனின் முன்னின்று.

தில்லை அம்பலவனின் அருள் உணர்ந்ததனால்  மகிழ்ச்சி பொங்க “அன்னம் பாலிக்கும்” என்னும் திருக்குருந்தொகை சூட்டி மகிழ்ந்தார். தில்லைக் கூத்தன் திருக்கோயிலை வலம் வந்தால் அன்பு ஆலிக்கச் செய்யும். அதைக் கண்டு இன்புற இப்பூமிசை இன்னம் இப்பிறவியை பாலிக்குமோ என்று வியந்து வேண்டுகிறார். தில்லையில் சிலகாலம் தங்கியிருந்து உழவாரப் பணிகள் பல புரிந்து பின் தன் தல யாத்திரையைத் தொடர்ந்தார் நாவுக்கரசு நாயனார்.



திருச்சிற்றம்பலம்


புதன், 10 மே, 2017

நம்பி ஆரூரரின் தில்லைக்காட்சி


நான் எழுதிய  கீழ்க்கண்ட  கட்டுரை "பாம்பன் சுவாமிகள்" என்ற மாத இதழில், ஏப்ரல் மாதத்தில் வெளியாகியது.
சிவாயநம
நம்பி ஆரூரரின் தில்லைத் திருக்காட்சி
மூவர் முதலிகளில் ஒருவராகிய  சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொகையை மூல நூலாகக் கொண்டு, அடியார்கள் பெருமை சொல்லும் பெரியபுராணத்தை உருவாக்கம் செய்தார் சேக்கிழார் சுவாமிகள். இன்னூலை  காப்பிய வடிவிலே கொடுத்தார். காப்பியத் தலைவனாக சுந்தரமூர்த்தி சுவாமிகளையும். தலைவியர்களாக சங்கிலியாரையும், பரவையாரையும் கொண்டார்.  இவரின் வரலாறு அறுபதின்மருடைய கதைகளினூடே  இயைந்து எழுதப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே காப்பிய இலக்கணம்  காக்கப்படுகிறது.
சுந்தரமூர்த்தி சுவாமிகள் இப்பூஉலகில் தோன்றக் காரணம் இறைவனின் ஆணையாகும்.
திருமலையில்  அனிந்திதை, கமலினி என்ற இரு சேடியர் மலர் கொய்ய வந்தபோது, அவர்கள்பால் மனம் வைத்ததால்தென்புவி மீது தோன்றி அம் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய்என்றது இறைவன் இட்ட ஆணையாகும். இது தூல காரணம். தென்திசை வாழவும், அடியார்களின் பெருமையைச் சொல்ல திருத்தொண்டத்தொகை அருளவும் அவர் மாதர் இருவரின் மேல் மனம் போக்கினார் என்பது சூக்கும காரணம்.
அவருக்குத் திருமணம் செய்ய இருந்த சடங்கவியார், இவர்கள் இருவரின் வேறானவர் ஆகையால் இறைவன் அவரைத் தடுத்தாட்கொண்டார். பின் திருவெண்ணெய்நல்லுர் சென்று இறைவன் அருள் பெற்றுபித்தாஎன்று தொடக்கம் பெற்று பதிகங்கள் பாடினார். பின் திருநாவலூர் சென்றார். திருத்துறையூர் இறைவரை வணங்கி தமக்கு தவநெறி வேண்டிப் பாடி பெற்றார். அங்கிருந்து தில்லைக் கூத்தனின் ஆனந்த நடனத்தைக் கண்டு மகிழும் ஆசையினாலே தில்லையை நோக்கிச் செல்கிறார்.
திருவதிகை,திருமாணிக்குழி,திருத்தினை நகர் ஆகிய தலங்களை தரிசித்து, நம்பி ஆரூரர்  தில்லை அம்பலவனை தரிசிக்க பேராவல் கொண்டு தில்லையம்பதியை நொக்கிச் செல்கிறார்.
தில்லையின்  எல்லையைப் பணிந்து எழுகிறார். எல்லையை வணங்கி எழுவதைக் குறிக்கும்போது சேக்கிழார் சுவாமிகள், தில்லையினுடைய எல்லையே தன்னைத் தொழுவார்க்கு இருளகற்றி முத்தி தர வல்லது என்று .
“………தன்ம ருங்குதொழு வார்கள்தம் மும்மை 
மாம லங்களற வீடருள் தில்லை 
மல்ல லம்பதியி னெல்லை வணங்கி.      என்று சிறப்பித்துக் கூறுகிறார்.
பின்  இறைவன் பூசனைக்குப் பயன்படும் பல வகையான மரங்கள் அடர்ந்த பகுதியைக் கடந்து தில்லையின் உள் புகுகிறார். பூசனைக்கு உரிய  பூக்களை அளிக்கும் செழுமையான நந்தவனங்களைக் கடந்து வீதியில் நுழைகின்றார்.  புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டுஎன்ற சொல்லின்படி, மிகப் புனிதமான உயிர்களே, சிவபூசைக்குறிய மரம், செடி கொடிகளாக நின்றுக்கொண்டிருப்பதால், அவை சிவபுண்ணியப் பொருள்களாகும். ஆகையினாலே அவற்றையும் வணங்கிப் பணிந்து செல்கிறாராம் நம் நம்பி.
கோயிலின் நான்கு புறங்களையும் சூழ்ந்துள்ள கடல் போன்ற அகழிகளையும் கண்டு மகிழ்ந்து மேலே செல்கிறார். விசேட நாட்களில் அடியவர்கள் சூழ, கடல் தீர்த்தத்திற்கு  எழுந்தருளும்போது, அந்த அடியவர்களை வணங்கும் பேறு தமக்கு எந்நாளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டே செல்கிறார்.
ஆழமான அகழியிலிருக்கும் தாழம்பூ விலுள்ள மகரந்தப் பொடியில் வீழ்ந்து எழுந்த வண்டுகள் தாமரை மலர்களை நோக்கிச் செல்வது, ஒளி மிகுந்த திருநீறு அணிந்துக் கொண்டு அடியவர்கள் இறைவனிடம் சென்று போற்றி மகிழ்வது போன்று இருந்ததாம். நம்பி ஆரூரரும் அன்போடும், பக்தியோடும் அவைகளைக் கண்டு செல்கிறாராம்.
நம்பி ஆருரருக்கு தில்லைக் காட்சிகள் தென்படுகின்றன. அங்கே வேதகோஷங்கள் முழங்குகின்றன, வெண்மையான கொடிகள் அசைந்து, அவற்றால் ஏற்படும் மணியின் ஓசைகள் நான்கு திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன, மாலைகள் அணிந்த அகன்ற மார்பை உடைய பிரம்மதேவனின் அழகிய நான்கு முகங்கள் போன்று அமைந்துள்ள கோயிலின் நான்கு வாயில்களில் ஒன்றான வடக்கு வாயிலில் வந்து நிற்கிறார் சுந்தரர்.
சுந்தரரின்  வரவு கேட்ட அடியார்கள் அனைவரும் அன்பின் மிகுதியால் வடக்கு வாயிலில் திரண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் வணங்கிய முறையை சேக்கிழார் பெருமான், “……….முன்பு இறைஞ்சினர் யாவரென்று அறியா முறைமையால் எதிர் வணங்கி மகிழ்ந்து, பின்பு கும்பிடும் விருப்பின் நிறைந்து.  என்று குறிப்பிடுகிறார். அடியார்களும், நம்பி ஆரூரரும், ஒரே நேரத்தில்  ஒருவரை ஒருவர் வணங்கினார்கள். இவர்களில் எவர் முன்னே வணங்கினார்கள் என்பது அறியப்படவில்லை. இதுவே ஒரு அடியவரைக் காணும்போது வணங்கும் முறை என்பதாகும் என்று விளக்குகிறார்.
திருவீதி புகுதலை சேக்கிழார் பெருமான், “. .பொருவிறந்த திருவீதி புகுந்தார் என்று ஒரு தனிச் செய்தியாக எடுத்துக் கூறுகிறார். ஒப்பற்ற திருவீதிகள் என்பது ஆசிரியரின் கூற்று. ஞானசம்பந்த பெருமான் தில்லை சென்று திருவீதிகளைத் தொழுது, பின் அங்கே தங்கியிருக்க அஞ்சி, திருவேட்களம் சென்று தங்கியதாக பெரியபுராணத்தின் வாயிலாக நாம் அறியலாம்.
செல்வத் திருமுன்றில்  தாழ்ந்தெழுந்து தேவர்குழாம்
மல்குந் திருவாயில் வந்திறைஞ்சி மாதவங்கள்
நல்குந் திருவீதி  நான்குந் தொழுதங்கண்
அல்குந் திறம்அஞ்சு வார்சண்பை ஆண்டகையார்” – (பெ.பு. 2063)

வீதிகள் சிவமே நிலவிய திருவீதிகள். ஆகையால், தவத்தின் பயனை அவைகளே நல்குவதாலும் மாதவங்கள் நல்கும் திருவீதி என்றார்.

“…….அப்பொழுதே அம்பலத்துள் ஆடுகின்ற 
   
கழல்வணங்கி அருள்முன் பெற்றுப் 
பொய்ப்பிறவிப் பிணியோட்டுந் திருவீதி 
   
புரண்டுவலங் கொண்டு போந்தே……. (பெ.பு. 1444)

பொய்யான இம்மானிடப்பிறவியாகிய நோயைப் போக்கும் அழகிய திருவீதி என்று, அத்திருவீதியில் புரண்டு எழுந்தாராம் நாவுக்கரசு பெருமான்.

சிவந்த பொன்னாலாகிய பொன்னம்பலத்தையும், ஒளி பொருந்திய பேரம் பலத்தையும் வலம் செய்து வணங்கிய பின்பு, உட்சென்று வணங்குதற்காக, பேரழகுடன் ஒளி சூழ்ந்த திருச் சிற்றம்பலத்தின் முன்னுள்ள திருஅணுக்கன் என்னும் முதல் திருவாயிலை அடைந்தார் நம் சுந்தரர்.

வையகம் பொலிய மறைச்சிலம் பார்ப்ப 
             மன்றுளே மாலயன் தேட
ஐயர்தாம் வெளியே யாடுகின் றாரை 
            அஞ்சலி மலர்த்திமுன் குவித்த
கைகளோ திளைத்த கண்களோ அந்தக் 
             கரணமோ கலந்தவன் புந்தச்
செய்தவம் பெரியோன் சென்றுதாழ்ந் தெழுந்தான்
            திருக்களிற் றுப்படி மருங்கு.                       (பெ.பு 251)

என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு.  இறை வழிபாடு செய்ய முதலில் அன்பு பெருகுகிறது, பின் மனம்  விழைகிறது, கண்கள் காண்கின்றன, பின் கைகள் குவிகின்றன. இதுவே ஒரு முறையாக செய்யப்படும் செயல்கள். ஆனால் இங்கோ, முன் செய்த  தவத்தால் பெரியோனாக விளங்கும் ஆரூரருக்கு, எது முன் நிகழ்ந்தது என்று அறியாதவாறு எல்லாம் ஒருங்கே நிகழ்ந்தது என்று கைகளோ, கண்களோ, கரணமோ என்று நயமுடன் உரை செய்கிறார் சேக்கிழார் சுவாமிகள். இவ்வாறு திருக்களிற்றுப்படியின் அருகிலே சென்று தாழ்ந்து வணங்கி எழுந்தார்.

 கனகசபையிலிருந்து சிற்சபை செல்லுவதற்கு ஐந்து படிகள் அமைந்துள்ளன. இந்த படிகள் பஞ்சாட்சர படிகள் என வழங்கப்படும். இப்படிகளின் இருபுறத்தும், இவற்றைத் தாங்கும் விதமாக கைகள் போன்று துதிக்கை உடைய யானைகள் அமைந்துள்ளன. ஆகையால் இதனை திருக்களிற்றுப்படி என்று வழங்குவது சைவ மரபாகும். களிற்றுக்கை பிரணவத்தையும், ஐந்து படிகள் திருஐந்தெழுத்தையும் குறிக்கும். திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார், திரு உந்தியாரின் வழிநூலாக தான் இயற்றிய நூலை இப்படியில் வைத்தபோது, இப்படியில் அமைந்த களிறுகள், இந்நூலை எடுத்து கூத்தப் பெருமான் திருவடியில் வைத்ததாகவும், அந்நூல் இதனால் திருக்களிற்றுப்படியார் எனப் பெயர் பெற்றதாகவும் வரலாற்றுச் செய்தி ஒன்று உள்ளது.

சந்திரன் வாழ்வடைவதற்கு ஏற்ற சடையினைத் தாங்கிய நடராஜப்பெருமான்  ஆடும் ஆனந்தக் கூத்தை தரிசித்து பேரானந்தத்தில் மூழ்குகிறார், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இந்தக் காட்சியை சேக்கிழார் பெருமான் அரும் பெரும் பொருள் கொண்டு  உரைக்கும் பாடல்  தில்லைகூத்தன் வழிபாடு எவ்வாறு நிகழ வேண்டும் என்று நமக்கெல்லாம் விளக்குகிறது.

ஐந்துபே ரறிவுங் கண்களே கொள்ள 
        அளப்பருங் கரணங்கள் நான்கும்
சிந்தையே யாகக் குணமொரு மூன்றும் 
        திருந்துசாத் துவிகமே யாக
இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த 
        வெல்லையில் தனிப்பெருங் கூத்தின்
வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து 
        மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.     (பெ.பு.252)

மெய்,வாய்,கண்கள்,மூக்கு,செவிகள் என்ற ஐம்புலன்களும் ஒன்றுபட்டு, தம் கண்கள் மட்டுமே பற்றிக்கொண்டு, கூத்தனை தரிசனம் செய்ய,
அளத்தற்கு அறியதாகிய மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நான்கு உட்கருவிகளில் (அந்தக்கரணங்கள்) சித்தம் ஒன்றே செயல்பட்டு நிற்க,
சத்துவம், ராஜசம், தாமதம் என்னும் மூன்று குணங்களில் மற்ற இரண்டும் சாத்துவிகத்துள் அடங்கி நிற்க, 
 பேரானந்த, தாண்டவத்தை தரிசித்து, ஒப்பற்ற மகிழ்ச்சியில் திளைத்து மலர்ச்சியைப் பெற்றார் என்று ஆரூரர் பெற்ற அருள் காட்சியை நம் கண் முன்னே கொண்டு வருகிறார் சேக்கிழார் சுவாமிகள்.
 சுந்தரர்  கனகசபைக்குள்ளே எழுந்தருளும்போது, ஐம்புலன்களாகிய மெய்வாய்,கண்,மூக்கு,செவிகள், தத்தம் தொழிலைச் செய்துக்க்கொண்டிருக்கின்றன. நடராஜப் பெருமானை தரிசிக்க விழையும்போது, கண்களைத் தவிர மற்ற புலன்கள் தம் பணி மறந்து, கண்களுடன் ஒன்றின. பின் அகக்கண் கொண்டு ஆனந்தக் கூத்தனைத் தரிசிக்கிறார். அப்போது  மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றும், சித்தம் ஒன்றையே பற்றிக்கொள்ள, சித்தம் ஒன்றே செயல்படுகிறது. அப்போது அவர் சித்தம் நடராஜப் பெருமானுடைய திருஉருவக் காட்சியில் நிலைத்து நின்றது. அந்த நேரத்தில் இராஜசம்,தாமதம் என்ற இரண்டு குணங்களும் சத்துவத்தில் ஒடுங்கி, சத்துவம் ஒன்றே இயங்கியது.

இவ்வாறு நடராஜப் பெருமானுடைய ஆனந்த தாண்டவத்தை தரிசித்து, பேரானந்த சாகரத்தில் முழுகித் தம்மை முற்றிலும் இழந்து, அந்த ஆனந்த அனுபவத்தில் இரண்டறக் கலந்து விளங்கினார் என்பதை சேக்கிழார் பெருமானின் வாயிலாக நாம் முற்றிலும் உணர முடிகிறது.

இந்தப் பாடலுக்கு மற்றொரு முக்கியத்துவம் உண்டு. குமரகுருபரர், முருகப் பெருமானை தன் ஞானகுருவை அடையாளம் காட்டுமாறு வேண்டினார். முருகப் பெருமான்உன் வாக்கு வன்மை எவர் முன்பு தடைபடுகிறதோ அங்கே உன் குருவைக் காணலாம்என்றார். திருத் தருமபுரம் நா ன்காவது குருமூர்த்தியாகிய ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த குருமூர்த்திகளை குமருகுருபரர் தரிசனம் செய்தபோது, மேற்சொன்ன பாடலைக் கூறி அகப்பொருள் உரைக்கக் கூறினார்கள். அப்போது குமர குருபரர் வாக்கு தடை பட்டமையால்  அவருடைய குரு அடையாளம் காட்டப் பெற்றார் என்பது வரலாறு.

இவ்வாறு சுந்தரமூர்த்தியின் தில்லைக் கூத்தன் தரிசனம் செய்தமையை விளக்கிய சேக்கிழார் சுவாமிகள், திருவடி ஞானமாகிய சிவபோகத்தை அறிகின்ற ஐம்பொறி அறிவு பேரறிவாகும் என்று நமக்கெல்லாம் உணர்த்தி உய்யும் வழியைப் புலப்படுத்துகிறார். அவ்வழி சென்று நாமும் கூத்தன் அருள் பெறுவோமாக.


திருச்சிற்றம்பலம்