வெள்ளி, 8 நவம்பர், 2019

திருவெம்பாவை

மாணிக்கவாசகரின்  திருவெம்பாவை

மணிவாசகப் பெருமான் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு, திருவண்ணாமலை அடைந்தார். இம்மலைதான் அன்று அனல் வடிவமாய் அண்ண முடியாததாய் இருந்தது, ஆனால் இன்று பெருவாழ்வு பெற்று காட்சி அளிக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து நகரினுள் புகுகிறார். ஆலயத்தைக் காண்கிறார். இறைவனை எண்ணி வாழ்த்துகிறார்.

அடிகளார்  திருவண்ணாமலையை அடைந்த காலம் மார்கழி மாதம் திருவாதிரைக்கு முந்திய பத்து நாளாக இருக்கலாம். பெண்டிர் பலரும், விடியற்காலையில் எழுந்து, வீட்டையும் முற்றத்தையும் கூடி மெழுகிக் கோலமிட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குளத்திற்கு நீராடச் செல்கின்றனர். அவர்கள் நீராடச் செல்லும்போது அரன் புகழைப் பாடிக்கொண்டு செல்லும் காட்சியைக் காண்கிறார் நம் அடிகள். அந்நிகழ்ச்சிகளையே இங்கு திருவெம்பாவையாகப் பாடி நமக்கு அருளினார்.

‘எம்பாவாய்’ என்னும் தொடர் இப்பாடல்களின் இறுதியில் அமைவதால் இப்பதிகம் ‘திருவெம்பாவை’ எனப் பெயர்பெற்றது. . இதே போன்று மகளிர் விளையாட்டுகளைக் குறிக்கும் மற்ற திருவாசகப் பதிகங்களுக்கு, அப்பாடல்களின் இறுதித் தொடரே பெயராக வழங்கப்பட்டுள்ளது. திரு என்ற மங்கல மொழி சேர்க்கப்பட்டு திருவெம்பாவை என்று பெயர் கொண்டது. ஆகவே தெய்வத் தன்மையுடைய எம்பாவை என்று பொருள்படும்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையும், திருவெம்பாவையும் பாவைப் பாட்டுகள் என்று முன்னர் உரை கண்டவர்கள் உரைத்தனர். அது சரியான விளக்கமல்ல என்பதற்கு சில குறிப்புகள் கீழே காணலாம்.
1.  
     திருப்பாவை மார்கழி 30 நாட்களும் நிலவும் நோன்பு. திருவெம்பாவை திருவாதிரை முடிய பத்து நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப் படுகிறது.சைவர்கள் இதனை ஆதிரை விழா என்று கொண்டாடுவர். திருவாதவூரடிகள் புராணத்தில் இது கீழ்க்கண்டவாறு குறிக்கப் படுகிறது.

“மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரைமுன் ஈரைந்தே ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான
போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்.”
 
ஆயர்பாடி மங்கையர் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பி பாடினர். இந்த நோக்கத்துடன் மார்கழித் திங்கள் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து, நீராடி, மணலால் உமையம்மையின் பாவை நிறுவி, வழிபட்டு, கண்ணனைத் தாங்கள் மணக்கவேண்டும் என வேண்டினர். மாறாக திருவெம்பாவையில், சிவனடிமைத் திறம் மிக்க ஒருவனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள்தான் காணப்படுகிறது.

  இறைவனைக் கணவனாகப் பெற்று தழுவி இன்புறுதல் வைணவ நெறியில் காணப்படும் ஒன்று. சிவநெறிக்கு இது ஏற்புடையதன்று. 
  
இறை இன்பம் இவ்வுடம்பு இல்லாவிடினும் ஒளியுடம்பாய் வேறோர் உடம்பு கொண்டு நுகரப்படுகிறது என்பது அவர்கள் கொள்கை. ஆனால் சைவநெறியில் உயிர் இடையீடு ஏதுமின்றி இறைநிறைவில் ஒன்றாய்க் கலந்து அவ்வின்பத்தில் அழுந்தி நிற்பதே வீடு என்று பெறப்படும்.
  
பாவைப் பாடல்கள் நான்குசீர் கொண்ட அடிகள் 5 முதல் பத்து வரை உள்ள பாடல்கள். அடிகளார் இப்பதிகத்தை 8 அடிகள் கொண்ட பாடல்களாக அமைத்துள்ளார்.

ஆண்டாள் பாடல்களில் இறைவனைக் கண்டு காதலித்தது காணப்படுகிறது. காரைக்கலம்மையார்  தன் தசைபொதி உடம்பை சுமந்து நின்றது தன் கணவனுக்காக என்பதும், அவ்வுடம்பு கணவனுக்கு ஆகாது என்பதால் வேண்டிப் பேயுருவம் பெற்றதும் வரலாறு. சேக்கிழார் பெருமான் இப்பகுதியை மிக நயமுடன் அமைத்துள்ளார்.


ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பையெல்லாம் உதறி எற்புடம்பேயாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவமானார்.

இதன் நுண்பொருள் – இறையின்பத்தை நுகர்தற்கு இவ்வுடம்பு வேண்டப்படுவது அன்று, மற்றும் அவ்வுடம்பு அதற்குத் தடையாக நிற்கும் என்பதே.

இறையின்பம் உடம்பு கொண்டே நுகரப்படுவது என்றும், இறைவன் சிறப்புடைய ஓர் ஆடவன் (புருடோத்தமன்) என்பதால் அவன் இன்பத்தை நுகரும் அடியார்களில் பெண்களே மிகவும் தகுதி உடையவர் என்பர் மாயோன் நெறியினர். சிவநெறியில் அக்கொள்கையில்லை. ஆடவர், பெண்டிர் என்பது உடற்கூறு பற்றியது, உயிரின் கண் இல்லை என்பதும், இறையின்பத்தை நுகரும் அடியார்களிடத்து ஆடவர் மகளிர் என்ற இருபாலாரும் ஒப்ப உயர்ந்தவர் என்பது சிவ நெறி. ஆகையினால்தான் நாயகன் நாயகி பாவம் சிவநெறியில் இல்லை. ஞானத்தை நாயகி பாவம் என்று கூறாது, சன்மார்க்கம் என்றே குறிக்கப் பட்டது.

இறைவனைப் பாடி பணிந்து ஏத்துவதையே திருவெம்பாவை முழுதும் காணலாம். பக்தி செய்வதே முழுநோக்கம் என்று கொள்ளப்படுகிறது. அதற்கு எந்தவித சட்ட திட்டங்களும் வரன் முறைகளும் கூறப்படவில்லை. ஆனால் திருப்பாவையில் நோன்பும் அதற்குண்டான வரன்முறைகளும் கூறப்பட்டுள்ளது. ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்’ என்ற திருப்பாவைப் பதிவைக் காண்க.

தேவர்களுக்கு எடுக்கும் விழாக்கள் நிறைமதி நாளை ஒட்டி வருவன. சிவனுக்கு உரிய திருவாதிரை நாளோடு கூடிவருவது மார்கழி மாதத்தில் ஆகும். அரசனுக்குரிய விழா நாடு பூராவிற்கும் என்பதுபோல, முழுமுதல் தலைவனான சிவனுக்கு உரிய விழாத் திங்கள் மார்கழி ஆகையால், இம்மாதம் சிறந்ததாயிற்று. தேவர்கள் அனைவருக்கும் உரியதாயிற்று. தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவாதிரை விழாவைச் சிறக்கச் செய்வர் என்பதை கீழ்க்கண்ட சேந்தனார் திருப்பல்லாண்டு விளக்கும்

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.

ஆகவே திருவெம்பாவையின் அடிப்படைக் கருத்து இளமகளிர் நீராடுதல். முதல் 8 பாடல்கள் மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லாருமாகச் சேர்ந்து இறைவன் புகழைப்பாடிக் கொண்டு நீராடச் செல்வதைக் குறிக்கும். 11ஆம் பாடல் முதல் 20ஆம் பாடல் வரை நீராடுதல் கூறப்படுகிறது.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

தாண்டகச் சதுரர்



தாண்டக வேந்தர்

அரியானை அந்தணர்தம்  சிந்தையானை
    அருமறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
    திகழொளியைத் தேவர்கள்தங் கோனை மற்றைக்
கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
    கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற
பெரியானைப் பெரும்பற்றப் புலியூரானைப்
    பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

திருநாவுக்கரசர் அருளிய நான்காம் திருமுறைப் பதிகங்கள் அனைத்தும் பண் அமைப்பு உடையன. இசைத்தமிழ் பாடல்களாக 10 பண்கள் நான்காம் திருமுறையில் காணப் படுகின்றன. ஐந்தாம் திருமுறை குறுந்தொகை என்ற அமைப்பிலும் ஆறாம் திருமுறை தாண்டகம் என்ற யாப்பு அமைப்பிலும் அமைந்துள்ளன. எனவே நான்காம் திருமுறை இசைத்தமிழ் எனவும் ஐந்து, ஆறாம் திருமுறைகள் இயற்றமிழ் எனவும் குறிக்கப்பட்டன. ஐந்தாம் திருமுறை பாடல்களை, நாதநாமக்கிரியை, மாயாமாளவகௌளை ஆகிய ராகங்களில் ஓதுவா மூர்த்திகள் பாடிவருகின்றனர். ஆறாம் திருமுறையான தாண்டகப் பாடல்களை சுத்தாந்தமாகப் பாடி வருகின்றனர்.

தாண்டக யாப்பு என்றால் என்ன? மிக எளிதாக சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு அடியிலும் ஆறு சொற்கள் அல்லது 8 சொற்கள் அமைவதே தாண்டகத்தின் இலக்கணம். ஆறுசீர்களில் அமையும் தாண்டகம் குறுந்தாண்டகம் என்றும் 8 சீர்கள் கொண்டது நெடுந்தாண்டகம் என்றும் கூறப்படுகிறது. எண்சீராக வருகின்ற தாண்டகப் பாடலில் அடிதோறும் மூன்று, நான்கு, ஏழு, எட்டு சீர்களை நீக்கி, மற்ற சீர்களை இணைத்து நோக்கினால், கொச்சகக்கலிப்பா யாப்புருவில் பாடல் அமைவதைக் காணலாம். (கற்பகம் பல்கலைகழக ஆறாம் திருமுறை வெளியீடு)

வண்ணங்கள் தாம்பாடி வந்து நின்று
   
வலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மைக்
கண்ணம்பால் நின்றெய்து கனலப் பேசிக்
   
கடியதோர் விடையேறிக் காபா லியார்
சுண்ணங்கள் தாங்கொண்டு துதையப் பூசித்
   
தோலுடுத்து நூல்பூண்டு தோன்றத் தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர்
   
அழகியரே ஆமாத்தூர் ஐய னாரே      (6-9-1)

வண்ணங்கள் தாம்பாடி வலிசெய்து வளைகவர்ந்தார்
கண்ணம்பால் நின்றெய்து  கடியதோர் விடையேறிக்
சுண்ணங்கள் தாங்கொண்டு  தோலுடுத்து நூல்பூண்டு
அண்ணலார் போகின்றார் அழகியரே ஆமாத்தூர் .

இலக்கண முறையில் இன்னும் பல விளக்கங்கள் கூறப் படுகின்றன. எளிதாகப் புரிந்து கொள்வதற்கு மேற்சொன்ன குறிப்பைப் பயன் படுத்தலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன் முதலாக தாண்டக யாப்பில் பாடல்களை அருளியவர் அப்பர் சுவாமிகள். அதனால் அவரை தாண்டகச் சதுரர் என்று சேக்கிழார் சுவாமிகள் போற்றுகின்றார். "தலைவரான பிள்ளையாரும் தாண்டகச் சதுரராகு அலர்  புகழ் அழைப்புகள் அரசும் கூட அங்கு எழுந்து  அருளக் கண்டு" என்பது சேக்கிழாரின் பெரியபுராணம். திருக்கடவூரில் குங்கிலியக்கலயரின் திருமடத்தில் அப்பரும் சம்பந்தரும் எழுந்து அருளிய போது இதைச் சேக்கிழார் பெருமான் குறிப்பிட்டுள்ளார். பின்பு வந்த கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் நால்வர் நான்மணி மாலையில் தாண்டக வேந்தர் என்று அப்பரைப் போற்றுகிறார். இத் தாண்டகப் பதிகத்தில்தான் (6-23) தமிழை முதன் முதலாக முத்தமிழ் என்றும், தமிழரைத் தமிழன் என்றும் அடையாளம் கண்டவர்  நாவுக்கரசுப் பெருமான்.

ஆறாம் திருமுறையில்  99 திருத்தாண்டகப் பதிகங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தும் நெடுந்தாண்டகம் அமைப்பை சேர்ந்தது. சிவ சம்பந்தப் பட்டதால் திரு என்று இணைத்து திருத்தாண்டகம் என்று வழங்கப்படுகிறது

ஆறாம் திருமுறையில் முதல் இரண்டு திருப்பதிகங்கள் தில்லையில் அருளப்பட்டன. முதல் திருப்பதிகத்தை பெரிய திருத்தாண்டகம் என்றும் இரண்டாவதை ‘புக்க திருத்தாண்டகம்’ என்றும் சான்றோர் குறித்துள்ளனர்.

தொடர்ந்து வரும் ஐந்து திருப்பதிகங்களும் திருவதிகையில் பாடப் பெற்றன. மூன்றாவதாக உள்ளது ஏழைத் திருத்தாண்டகம் என்றும் நான்காவது அடையாள திருத்தாண்டகம் என்றும், ஐந்தாவது போற்றித் திருத்தாண்டகம் என்றும் ஆறாவது திருவடி திருத்தாண்டகம் என்றும் ஏழாவது காப்புத் திருத்தாண்டகம் என்றும் சொல்லப் படுகிறது. மற்ற பதிகங்களுக்கு இது போன்ற சிறப்புப் பெயர் கொடுக்கப் படவில்லை. இறுதியில் வரும் எட்டு திருப்பதிகங்கள்   சிறப்புப் பெயர் பெற்ற தாண்டகப் பதிகங்கள்.

இதன் பெயர்கள் முறையே ஷேத்திரக் கோவை திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித்திருத்தாண்டகம், திருவினா திருத்தாண்டகம், மறுமாற்றுத் திருத்தாண்டகம் என்பதாக 15 பதிகங்கள் ஆறாம் திருமுறையில் சிறப்புப் பெயர் பெற்ற தாண்டகப் பாடல்கள்.

இவைகளன்றி திருவாரூர் திருத்தாண்டகப் பதிகம் ஒன்றும், திருக்கைலாய திருத்தாண்டகப் பதிகங்கள் 3 ஆக நான்கு பதிகங்கள் போற்றித் திருத்தாண்டகம் என்ற பிரிவில் அமைந்துள்ளன. ஆகமொத்தம் 19 பதிகங்கள் சிறப்புத் தலைப்புடைய தாண்டகப் பதிகங்கள்.

நாம் இப்பொழுது சிறப்புப் பெயர் பெற்ற இந்தப்பதிகங்களைப் பற்றிய சில குறிப்புகளைக் காணலாம்.

பெரிய திருத்தாண்டகம்:

முன்பே குறிப்பிட்டபடி முதல் பதிகம் பெரிய திருத்தாண்டகம் என்று கூறப்படுகின்றது. முதல் பாடலில் பெரியானை என்றும் பெரும்பற்றப் புலியூரானை என்றும் பின்னர் பெருமானை, பெருந்தகையை, பெரும் துணையை, பெரும்பொருளை,பெரும்பயனை,பேரொளியை என்றெல்லாம் அப்பர் சுவாமிகள் குறிப்பதால் இப்பெயர் பெற்றது என நாம் உணரலாம். அது மட்டுமன்றி உலகம் அனைத்திற்கும் சிவபெருமானே பெரியவன் ஆகையினால் இந்தப் பதிகம் பெரிய திருத்தாண்டகம் என்று குறித்தனர்.

புக்க திருத்தாண்டகம்:

ஒவ்வொரு பாடலிலும் ‘புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே’ என்று அமைத்துப் பாடியதால் இது இவ்வாறு அழைக்கப் படுகின்றது. மேலும் இறை நெறி கலைகள் அனைத்தும் அர்த்தஜாமத்தில் தில்லையில் ஒடுங்குவதாக குறிப்பிடப் படுவதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறலாம்‘ புக்க’ என்றால் புகுந்தது என்று பொருள்.

ஏழைத் திருத்தாண்டகம்:

மூன்றாவது பதிகம் இவ்வாறு அழைக்கப் படுகிறது. ஏழை என்பது செல்வமின்மை, வலிமை இன்மை, அறிவின்மை முதலியவற்றைக் குறிக்கும். இங்கு அப்பர்  பெருமான் அறிவில் ஏழையாகவே தம்மைக் குறிப்பிகிறார். சமண சமயம் சார்ந்து இருந்தபோது, அறிவு தெளிவின்றி இருந்தமையால் இப்பாடல்கள் அனைத்தும் ‘ஏழையேன் நான் பண்டு இகழ்ந்தவாறே’ என்று முடிகிறது. ஆகவே இந்தப் பதிகம் இவ்வாறு பெயரிடப் பட்டது.


வெறிவிரவு கூவிளநல் தொங்க லானை
    வீரட்டத் தானைவெள் ளேற்றி னானைப்
பொறியரவி னானைப்புள் ளூர்தி யானைப்
   
பொன்னிறத்தி னானைப் புகழ்தக் கானை
அறிதற் கரியசீ ரம்மான் தன்னை
   
அதியரைய மங்கை யமர்ந்தான் தன்னை
எறிகெடிலத் தானை இறைவன் தன்னை
   
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே

அடையாள திருத்தாண்டகம்:

இப்பதிகத்தில் உள்ள பாடல்கள் அனைத்திலும் இறைவனிடத்தில் உள்ள சந்திரன், கங்கை, சடாமகுடம் முதலிய இறை அடையாளங்களைப் பற்றியே குறிப்பிடுவதால் இவ்வாறு பெயரிடப் பட்டது. “உரிய அன்பினில் காண்பவர்க்கு உண்மையாம் பெரிய நல்லடை யாளங்கள் பேசினார் என்ற சேக்கிழாரது விளக்கத்தினைக் காண்க . ( தி .12 திருஞான . 825)

சந்திரனை மாகங்கை திரையால் மோதச்
   
சடாமகுடத் திருத்துமே சாம வேத
கந்தருவம் விரும்புமே கபால மேந்து
   
கையனே மெய்யனே கனக மேனிப்
பந்தணவு மெல்விரலாள் பாக னாமே
   
பசுவேறு மேபரம யோகி யாமே
ஐந்தலைய மாசுணங்கொண் டரையார்க் கும்மே
   
அவனாகில் அதிகைவீ ரட்ட னாமே

போற்றித் திருத்தாண்டகம்:

பெருமானின் புகழை பதிகம் முழுவதும் போற்றி போற்றி என்று பல முறை கூறியதால் போற்றித் திருத்தாண்டகம் என இப்பதிகம் பெயர் பெற்றது. இத்திருப்பதிகத்தில்  82 போற்றிகள் வருகின்றன.

எல்லாம் சிவனென்ன நின்றாய் போற்றி
எரிசுடராய் நின்ற இறைவா போற்றி
கொல்லார் மழுவாட் படையாய் போற்றி
கொல்லுங்கூற் றொன்றை யுதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக் கரியாய் போற்றி
கற்றா ரிடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியனரணம் எய்தாய் போற்றி
வீரட்டங் காதல் விமலா போற்றி.

திருவடித் திருத்தாண்டகம்:

இறைவன் திருவடியே எல்லாவற்றையும் இயக்குகிறது என்ற குறிப்பில் அவன் திருவடிச் சிறப்பை பாடல் தோறும் பலவாறாகக் குறிப்பிட்டு இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. பின்னால் வந்த திருவடிப் புகழ்ச்சிகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வது இந்த தாண்டகப் பதிகமே என்பது குறிப்பிடத் தக்கது. அகத்தியர் தேவாரத்திரட்டில் திருவடி பெருமைக்கு இப்பதிகமே எடுத்தாளப்பட்டது.

அரவணையான் சிந்தித் தரற்றும்மடி
    அருமறையான் சென்னிக் கணியாமடி
சரவணத்தான் கைதொழுது சாரும்மடி
    சார்ந்தார்கட் கெல்லாஞ் சரணாமடி
பரவுவார் பாவம் பறைக்கும்மடி
    பதினெண் கணங்களும் பாடும்மடி
திரைவிரவு தென்கெடில நாடன்னடி
    திருவீரட் டானத்தெஞ் செல்வன்னடி
.
காப்புத் திருத்தாண்டகம்:

இவை இறைவனுடைய காப்புக்கள் (இடங்கள்) என்றே எல்லாப் பாடல்களும் முடிவதால் இவ்வாறு பெயர் பெற்றது. இறைவன் நீங்காது உறையும் இடங்களை உணர்த்திய திருத்தாண்டகம் இது என்பதாகும். இப்பாடல்களில் முதற்கண் வீரட்டானத்து இறைவரை வணங்கி, பின் மற்ற தலங்களையும் நினைவு கூர்ந்து வணங்கும் பாங்கு மகிழத்தக்கது.


செல்வப் புனற்கெடில வீரட்டமும்
   
சிற்றேமமும் பெருந்தண் குற்றாலமும்
தில்லைச்சிற் றம்பலமுந் தென்கூடலும்
   
தென்னானைக் காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன் குடிமருகலும்
   
நல்லவர்கள் தொழுதேத்து நாரை யூரும்
கல்லலகு நெடும்புருவக் கபால மேந்திக்
   
கட்டங்கத் தோடுறைவார் காப்புக் களே

இறுதியில் வரும் 70, 71, 93, 94, 95, 96, 97, 98  ஆகிய எட்டு திருப்பதிகங்களும் சிறப்புப் பெயர் பெற்ற திருப்பதிகங்கள் ஆகும். இவை முறையே சேத்திரக்கோவை திருத்தாண்டகம், அடைவுத் திருத்தாண்டகம், பலவகைத் திருத்தாண்டகம், நின்ற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருவினா திருத்தாண்டகம், மறுமாற்றுத் திருத்தாண்டகம், என்று அழைக்கப் படுகின்றன.

சேத்திரத் திருத்தாண்டகம்:
 
இறைவன் எழுந்தருளிய தலங்கள் பலவாயினும் அங்கு எழுந்தருளியுள்ள இறைவன் ஒருவனே, அவன் கைலாய நாதனே என்று அப்பர் அருளிய பதிகம் இவ்வாறு பெயர் பெற்றது. சிவ தலங்களை நினைத்தலும், அவைகளின் திருப் பெயரைச் சொல்லுவதும் பெரும் பயன் தரக்கூடியவை என்று இத் திருப்பதிகத்தில் அவற்றை எடுத்துத் தொகுத்து ஓதியருளினார். பாவநாசத் திருப்பதிகத்தில் (4-15) இவ்வாறு அனைத்து தலங்களையும் குறிப்பிட்டுப் பாடியதைக் காணலாம். ‘மன்றுறைவார் வாழ் பதிகள் வழுத்து திருத்தாண்டகம்’ என்பது சேக்கிழார் வாக்கு.

தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி
   
தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர்
கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல்
   
வீரட்டங் கோகரணங் கோடி காவும்
முல்லைப் புறவம் முருகன் பூண்டி
   
முழையூர் பழையாறை சத்தி முற்றங்
கல்லில் திகழ்சீரார் காளத்தியுங்
   
கயிலாய நாதனையே காண லாமே
.
அடைவுத் திருத்தாண்டகம்:

அடைவு, முறைமை என்பன ஒரு பொருள் சொற்கள். முறைமை என்பது ஒரே தன்மை கொண்ட பொருள்களை தொடர்ந்து வரச் செய்தல். பள்ளி என வரும் தலங்களையும், வீரட்டானம், காடு, துறை, குடி, கோயில், என்று பெயர் ஒற்றுமையால் வகைப் படுத்தி  அருளிய பதிகங்கள் இவை. ஆகையால் இப்பதிகம் அடைவுத் திருத்தாண்டகம் என பெயர்  பெற்றது. அடைவு – புகலாக அடையும் இடங்கள். பிறவி வேதனைக்கு அஞ்சி உயிர்கள் வந்து அடையும் இடங்கள் சிவாலயங்கள். அத்திருத்தலங்கள் தொகுத்து இங்கே வழங்கப் படுகின்றன.


பொருப்பள்ளி வரைவில்லாப் புரமூன் றெய்து
   
புலந்தழியச் சலந்தரனைப் பிளந்தான் பொற்சக்
கரப்பள்ளி திருக்காட்டுப் பள்ளி கள்ளார்
   
கமழ்கொல்லி யறைப்பள்ளி கலவஞ் சாரற்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன் பள்ளி
   
செழுநனி பள்ளிதவப் பள்ளி சீரார்
பரப்பள்ளி யென்றென்று பகர்வோ ரெல்லாம்
   
பரலோகத் தினிதாகப் பாலிப் பாரே
.

பலவகைத் திருத்தாண்டகம்:

பூந்துருத்தி, நெய்த்தானம், ஐயாறு, சோற்றுத்துறை, திருப்பழனம் முதலாய பல தலங்களின் பெயர்களைச் சொன்னால் பழவினை தீர்ந்து போகும், துயரங்கள் நீங்கும் என பல தலங்களின் வழி பாட்டுப் பயனைக் கூறுவதால் இது பலவகைத் திருத்தாண்டகம் என்று பெயர் பெற்றது.


நேர்ந்தொருத்தி யொருபாகத் தடங்கக் கண்டு
          நிலைதளர ஆயிரமா முகத்தி னோடு
பாய்ந்தொருத்தி படர்சடைமேற் பயிலக் கண்டு
          படஅரவும் பனிமதியும் வைத்த செல்வர்
தாந்திருத்தித் தம்மனத்தை யொருக்காத் தொண்டர்
          தனித்தொருதண் டூன்றிமெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி யென்பீ ராகில்
         பொல்லாப் புலால் துருத்தி போக்க லாமே.

நின்ற திருத்தாண்டகம்:

பதிகப் பாடல்கள் பத்தும் ‘நின்றவாறே” என்று முடியும் தன்மை உடையன.பெருமான் எப்படி யெல்லாம் நின்று அருள் செய்கிறார் என்று அவர் நின்ற தன்மைகளைப் பாடுவதாக அமைந்துள்ளது. ஒன்றாய், உடனாய், வேறாய் நிற்கும் நிலைகளில் இப்பதிகம் ஒன்றாய் நிற்கும் நிலையை விளக்குகிறது. ஆகையால் இப்பதிகம்  இவ்வாறு பெயர் பெற்றது. வேதத்தில்  திரு உருத்திரம் இவ்வாறு அமைந்துள்ளது.

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
   
இயமான னாயெறியுங் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
   
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்
பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
   
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி
நெருநலையாய் இன்றாகி நாளை யாகி
   
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே


தனித் திருத்தாண்டகம்:

95,96வது பதிகங்கள் இவ்வாறு பெயரிடப் பட்டன. ‘அப்பன் நீ அம்மை நீ’ எனத் தொடங்குவது சிவபெருமானை முழுமுதல் தன்மையாகிய தனித் தன்மை பேசப் படுவதால் இப்பெயர் பெற்றது. அப்பர் பெருமான் தன்னை எவ்வாறெல்லாம் இறைவன் ஆட்கொண்டான் என்பதை விளக்கும் பாடல்கள் கொண்டது இப்பதிகம். சூலைதீர்த்து, சமண்தீர்த்து, உடலுறு நோய் தீர்த்து, வெந்துயரம் தீர்த்து என்றெல்லாம் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்த ஒரு தலத்தையும் பற்றாமல் தனியே நிற்கும் பதிகம் என்பதாலும் இப்பெயர் நிலைத்தது.

அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
   
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
   
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
   
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
   
இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

திருவினா திருத்தாண்டகம்:

‘அண்டம் கடந்த சுவடும் உண்டோ’ என்று ஐந்து பாடல்களில் வினா எழுப்புகிறார். மற்ற ஆறு பாடல்களிலும் பெருமானின் பெருமைகளைக் கண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அறியான் வினாவும் , ஐய வினாவும் , அறிபொருள் வினாவும் ` என்னும் மூவகை வினாவுள் இஃது அறிபொருள் வினா .

அண்டங் கடந்த சுவடு முண்டோ
   
அனலங்கை யேந்திய ஆட லுண்டோ
பண்டை யெழுவர் படியு முண்டோ
   
பாரிடங்கள் பலசூழப் போந்த துண்டோ
கண்ட மிறையே கறுத்த துண்டோ
   
கண்ணின்மேற் கண்ணொன் றுடைய துண்டோ
தொண்டர்கள் சூழத் தொடர்ச்சி யுண்டோ
   
சொல்லீரெம் பிரானாரைக் கண்ட வாறே

மறுமாற்றுத் திருத்தாண்டகம்:

நாவுக்கரசு சாமிகள் சமணத்திலிருந்து சைவம் சார்ந்த போது சமணர்களின் அறிவுரைப்படி மன்னன் அவரைத் தண்டிக்க வேண்டும் என்று பலரை அனுப்பி அவரை அழைத்து வரச் சொன்னான். அந்த சமயத்தில் பாடிய பதிகம் இவ்வாறு பெயர் பெற்றது. மன்னனை எதிர்த்து மறுமொழியாக சொன்னதே இப்பதிகப் பாடல்கள் என்பதால் பெயர்க் காரணம் கொண்டது. இப்பதிகத்தில்  சிவனடியார்களது பெருமை விளங்கப் பெறும்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
   
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
   
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
   
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
   
கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே
.
மேலேசொன்ன 15 பதிகங்கள் மட்டும் அல்லாமல் ‘கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி’ என்று தொடங்கும் திருவாரூர்த் திருத்தாண்டகம், ‘வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி’என்றுதொடங்கும் 3 பதிகங்கள், ஆக நான்கு பதிகங்கள் போற்றித் திருத்தாண்டகம் என்ற தலைப்பில் அமைந்துள்ளது. ஆக 19 தாண்டகப் பதிகங்கள் சிறப்புத் தலைப்பை உடையன என்று அறிந்துக் கொள்ளலாம்.



வியாழன், 15 ஆகஸ்ட், 2019

திருக்கோத்தும்பி (பாம்பன் சுவாமிகள் மாத இதழில் பிரசுரிக்கப் பட்டது)


சென்றூதாய் கோத்தும்பி

தமிழ்த் திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக வைத்துப் போற்றப் பெறுவது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகமும், திருக்கோவையாரும்  ஆகும். திருவாசகம் பூசைக்குரிய நூல். சைவ மரபில் சிவபூசை செய்ய இயலாதவர்கள்  திருவாசக பூசை செய்வதென்பது ஒரு பழங்கால மரபாகும். திருவாசகத்தை நாம் ஒரு பக்தி இலக்கியம் என்று சொல்வதும் இல்லை, சொற்களுக்கு தனித் தனியே பொருள் காண்பதும் வழக்கம் இல்லை. மணிவாசகப் பெருமான் தன் இறை உணர்வை, தான் உணர்ந்த இறை அனுபவத்தை நமக்குச் சொல்ல முற்படுகிறார். ஆகையால் இது ஒரு இறை அனுபவ நூலாகக் கருதப்படுகிறது.திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்என்ற  நம்மிடையே நிலவும் வழக்கு, இந்த ஞான நூல் ஒரு அனுபவ விளக்கம் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
திருவாசகச் சிறப்பு:
வள்ளல் பெருமான் திருவாசகத்தை தன் வழி நூலாகக் கொண்டு, தன் சிரசின் குடுமியிலே ஒரு ஓலைச்சுருளில் எழுதி எப்போதும் தாங்கி நின்றார் என்பது நாம் அறிந்த ஒன்றாகும். வள்ளல் பெருமான்,
“ வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசத்தைக்
கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
நாட்டமுறும் என்னில்இங்கு நானடைதல் வியப்பன்றே.                                                                                                                            4-12-10 (ஆளுடைய அடிகள் அருண் மாலை)
திருவாசகத்தை ஓதி ஞானம் பெற்றது விந்தையல்ல என்று  கூறி, நூலின் சிறப்பை உரைக்கின்றார்.
ஊற்றா  யமுதை உடையவன் தன்னை
ஆற்றா தெண்ணி அழுதே அனுபவ
வாசகம் தந்த வாதவூர் ஐய்யவுன்
வாசகந் தானுமோர் வற்றா ஊற்றே
ஊற்றினில் இவ்விதம் உருக்கம் ஊறுமோ
ஆற்றினில் இவ்விதம் அன்பு பாயுமோ
அழுவதில் இவ்வித ஆனந்தம் உண்டோ
தொழுவதில்  தூங்காத்  துணிவுமொன்  றுண்டோ
ஐயா உனையளந் தறிய
மெய்யாய் மேலும் வேண்டும்பல் பிறப்பே. 
என்று துறைமங்கலம் சிவப்ரகாச சுவாமிகள், திருவாசகம், உருக்கம் ஊறும், அன்பு பாயும், ஆனந்தம் உண்டாக்கும், ஒரு வற்றா ஊற்றான அநுபவ வாசகம் என்று  விளக்குகிறார்.
பெருந்துறை புகுந்து பேரின்ப வெள்ளம்
மூழ்கிய புனிதன் மொழிந்த வாசகமே
வாசகம் அதற்கு வாச்சியம்
தூசகல் அல்குல்வேய்த் தோள் இடத் தவனே      (நால்வர் நான்மணிமாலை - 8)

நூல் என்றால் அது திருவாசகம் என்றும், அதன் பொருள் என்றால் தில்லைக்கூத்தனே என்றும் அவர் உறுதிபடக் கூறுகிறார்.
                                                                                                                                                          
வாதவூ ராளிதனை வான்கருணை யால்விழுங்கும்
போதவூ ரேறேநின் பொன்னடியுங் காண்பேனோ.     (46 -11 தாயுமானவர் பாடல்கள்)
என்பது தாயுமானசுவாமிகளுடைய ஐயம்.
இறைவனை அடைய நான்கு மார்க்கங்கள் (சரியை, கிரியை, யோகம், ஞானம்) என்று நம் திருமுறைகள் நமக்கு உணர்த்தினாலும், அழுதால் அவனைப் பெறலாம் என்ற எளிய வழியை நமக்கு உணர்த்தியவர் மணிவாசகப் பெருமான். இவ்வாறு திருவாசகத்தின் சிறப்பை நாம் நீள  முழங்கிக் கொண்டே இருக்கலாம்.
திருவாசகம் 658 பாடல்கள் கொண்ட 51 பதிகங்கள்  அமைந்த அருள்நூல். முதலில் அமைந்துள்ள நான்கு அகவல்களும் நான்கு பதிகங்களாகக் கொள்ளப்பட்டு மேற்சொன்ன  658 பாடல்கள் வரையறுக்கப்பட்டன.  இந்த பதிகங்களுள், நாம் சிறிது விரிவாகக் காண இருப்பது பத்தாவது பதிகமானதிருக்கோத்தும்பிஎன்பதாகும்.
 வண்டு, சுரும்பு, தேன்,ஞிமிறு என்ற நான்கு வகையான தேனீக்களில் தும்பி என்பது ஒரு தேனி வகையைச் சேர்ந்தது. இந்த நான்கு வகையுள் வண்டும், தேனும், நறுமணமுள்ள மலர்களை நோக்கிச் சென்றே தேன் உண்ணும். மற்ற இரண்டும் எல்லா மண மலர்களையும்  தேடிச் செல்வன. இங்கு தும்பி நல் நாற்றத்தை நாடிச் செல்லும் ஒருவகை வண்டு. கோஎன்பதற்கு அரசு என்று பொருள் கொண்டோமானால், இது தலைமை வண்டாகக் கருதிகோத்தும்பிஎன்று சிறப்பிக்கப்பட்து.திருஎன்ற சிறப்பு அடைமொழி கொடுத்துதிருக்கோத்தும்பிஎன்றார் மணிவாசகப் பெருமான்.
வண்டை மையமாக வைத்து பாடப் பெற்ற இப்பதிகம் நமக்கு பல கருத்துக்களைத் தெரிவிக்கிறது.
மணிவாசகப் பெருமான் தன்னுடைய பிரிவாற்றாமையை, தன்னை இன்னும் இறைவன் அழைத்துச் செல்லவில்லையே என்ற ஏக்கத்தை  பல பதிகங்களில் பதிவு செய்கிறார்.  தலைவனை சென்று சேரத்துடிக்கும் தலைவியாகவே தன்னை உருவகம் செய்து, வண்டைத் தூது அனுப்புவதாகத்தான்  இந்தப் பதிகமும் எண்ணப்படுகிறது. ஆனாலும் தூது என்ற பொருள் கொள்ளும் இலக்கணம் ஒரு பாட்டில்தான்  (பாடல் எண் 13 ) நமக்கு கிடைக்கிறது. மற்ற பாடல்கள் சிவபெருமானின் பெருமைகளை வண்டிற்கு உரைத்து, இத்துணை பெருமை கொண்ட  பெருமானின் திருவடிகளில் சென்று  பேரானந்த தேனைப் பருகுவாயாக என்று கூறுவதாகத்தான் அமைந்துள்ளது. மற்றும்ஊதாய்  என்பதற்குவிண்ணப்பம் செய்வதுஎன்று பொருள் கொண்டோமானால், எல்லாப் பாடல்களும் தூது இலக்கணத்தின் கீழ் கொள்ளலாம்.
இருப்பினும் இந்த வண்டானது இறைவனுடைய திருவடியைச் சென்று ஒலிக்கும்போது, தலைவி தனியாகச் செய்தி ஏதும் சொல்லி அனுப்பாவிட்டாலும், அதன் நறு மணத்தையும், பிற குணங்களையும் கண்டு, அந்த வண்டு தன்னிடத்திலிருந்து வரும் வண்டு என்பதை தலைவன் புரிந்து கொள்வான், என்று தலைவி சொல்வதாகக் கருத்தில் கொள்ளவேண்டும்.
 மணிவாசகப் பெருமான் தில்லையில் மலர் கொய்வதற்காக வனத்திற்குச் செல்கிறார். அங்கே வண்டுகள் ஒலி எழுப்பிக்கொண்டு, பூக்கள்தோறும் சென்று தேன் எடுப்பதைக் காண்கிறார். ஒவ்வொரு மலரிலும் சிறிதளவு தேனே கிடைப்பதால், தனக்கு வேண்டும் அளவு தேன் சேகரிக்க பல மலர்களை நாடி வண்டு ரீங்காரமிட்டுத் திரிகிறது. அப்பொழுதும்கூட அவற்றின் வயிறு நிரம்புவதாகத் தெரியவில்லையாம்.  இந்த ரீங்காரத்தின் பயன் உணவைத் தேடி உண்பது. இந்த உணவாகிய இன்பம் நிலையானது இல்லை. ஆகவே நீ நிலையான இன்பத்தைத் தரும் சிவபெருமானை நோக்கி ஒலி எழுப்புவாயாக என்று வண்டிற்குச் சொல்வதாக இப்பாடல்களை அமைத்தார்.
மேலும் இவ்வண்டுகளை உலகியலாருடன் ஒப்பிட்டு, பல சிறு தெய்வங்களை வழிபடுவார்க்கு கிடைக்கும் இன்பம் சிறிதளவேயாம். அவர்களுக்கு வீடு பேறும் கிட்டுவதில்லை. மற்றும் உலக இன்பத்தை பெரிதெனக்கொண்டு, ஐம்பொறிகளால் கிடைக்கும் நுகர்வுகளை  பெரிதெனக் கருதி உழல்கின்றனர். பரம்பொருளாகிய சிவனாரின் கழல்களைப் பற்றி நிலையான பேரின்பத்தை பெற்று உய்யுங்கள் என்ற உண்மையை வண்டை  உலக உயிர்களுக்கு உருவகப்படுத்தி , நமக்கு உணர்த்துகிறார்  மணிவாசகப் பெருமான்.
திருவாதவூரர் புராணத்தில், மலர்களைச் சுற்றும் வண்டுகளை நோக்கி, நீ என் நாயகனின் திருவடிக் கமலங்களில் சென்று ஊதுவாயாக ( ஞாங்கரின் முரலும் தும்பி தன்னையும் நயந்து நாதன் பூங்கழல் வழுத்துக என்று புனித கோத்தும்பி சொன்னார்) என்று கூறியதாகக் குறிப்பு கொடுக்கப்படுகிறது.
இவ்வாறு அனைத்து பாடல்களையும் வண்டை மையமாக வைத்து, கோத்தும்பி என்று முடியுமாறு பதிகம் அமைந்துள்ளது.  வண்டுகள் ரீங்கார ஒலி எழுப்புவதைஊதாய்என்று குறிக்கப் படுகிறது. ஒலி எழுப்பி திருவடிகளைச் சார்ந்து, சிவ பெருமணத்தை நுகர்ந்து ஒன்றிவிடுவாய் என்று வண்டின் நிலை இங்கே காட்டப்படுகிறது. வண்டுகளாகிய உலகியல் ஆன்மாக்கள், சிவபரம்பொருளைச் சார்ந்துவிடுவதைசிவனோடு ஐக்கியம்என்றார். இந்நிலை, உயிர் சிவபெருமானோடு இரண்டறக் கலந்து, வேற்றுமை இன்றி ஒன்றுபட்டு நிற்கும் நிலை. இந்நிலை இங்கு சிவானுபவத்தைக் குறிக்கும். இதுவே திருக்கோத்தும்பி பதிகத்தின் மையக் கருத்தாக அமைகிறது.
சிவனோடு ஐக்கியம்என்ற இக்கருத்து எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதை ஒருசில பாடல்களை கூர்ந்து நோக்கி உணருவதே இக்கட்டுரையின் நோக்கம்.
பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த
நாவேறு செல்வியும் நாரணனும் நான்மறையும்
மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்
சேவேறு சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ

இது பதிக முதல் பாடல். சேவடிப் பெருமை இப்பாட்டில் அறிவிக்கப்படுகிறது.முதல் மூன்று அடிகளில் இறைவனைக் காண முடியாமல் போனவர்கள் யார்,யார் என்பதை பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

பூவேறு கோனும்தாமரை மலர் மீது அமர்ந்துள்ள நான்முகனும்வேதங்களை முறையே ஓதி, நூலறிவில் சிறந்தவன் என்பதால் அவனை முதலாக  வைத்தார்.
புரந்தரனும் பகைவர்களின் நகரங்களை அழிப்பவனாகிய இந்திரனும்
பொற்பமைந்த நாவேறு செல்வியும் நான்மறைகளை ஓதியதால் பொலிவு பெற்ற நாமகனின் நாவில் கல்விச் செல்வமாய் குடிகொண்டு அமர்ந்துள்ள ,அழகு நிறைந்த கலைமகளும்,
ணனும் நாராயணனும்
நான்மறையும்நான்கு மறைகள் என்று சொல்லப்படுகின்றவைகளும்இறைவன் ஆழ்ந்து அகன்ற  நுண்ணியனாதலால், அவனுடைய இயல்புகள் அனைத்தையும் வேதங்கள் அறியமாட்ட என்ற பொருள் கொண்டு,
மாவேறு சோதியும் மா என்பது விலங்கின் பொதுப்பெயர். இங்கு ஆட்டை உணர்த்திற்று. ஆட்டை ஊர்தியாகக் கொண்ட அக்கினி என்பதை மா ஏறு சோதி என்று குறித்தார். அக்கினியும் காண இயலாத திருவடி என்று, வேறு எங்கும் சொன்னதாகத் தெரியவில்லை. சிவ வேள்விகளில் அளிக்கப்படுகின்ற அவி முதலியவற்றை அவரவரிடம் கொண்டு போய் சேர்ப்பது அக்கினி. அவ்வாறே சிவபெருமானுக்கு  வேள்வியில் அளிக்கப்படும் அவி அவனைச் சென்றடைவது அக்கினியின் மூலமாக. அவியை அளிக்கச் சென்றபோதுகூட , மறைபொருளாக இருந்துதான்  பெற்றுக் கொள்கிறானே  அல்லாமல் அக்கினிக்கு திருவடி காட்சி கொடுக்கவில்லை என்பதை இங்கு மணிவாசகப் பெருமான் எடுத்துரைக்கிறார். மா  என்பதை விடை என்று கொண்டு, இது உருத்திரனைக் குறிக்கும் என்றும் சில இடங்களில் பொருள் சொல்லப்படுகிறது. இடபத்தில் ஏறி வரும் உருத்திரனும், திருவடியைக் காண இயலவில்லை என்பது அவ்வளவு பொருத்தமாகாது என்று விளக்கம் சொல்வாரும் உண்டு.
வானவரும் -  ஏனைய தேவர்கள்.

இவ்வாறு பட்டியலிட்டபின் பாடலின் நான்காவது வரியில், வண்டு செய்ய வேண்டியது என்ன என்பதைக் குறிப்பிடுகிறார்.
சேவடிக்கே சென்றூதாய்நான்முகன் முதலாக உள்ள அனைவரையும் விட்டு, சிவபெருமானின் திருவடியைக் கண்டு நீ ஒலிப்பாயாக என்ற கருத்தை வலியுறுத்த சேவடிக்கேஎன்ற  ஏகாரம் இடம் பெற்றது இங்கு.

மற்றவர்களைப் பார்த்து மயங்காமல், சிவனடியின் நறுமணத்தை அடையாளம் கண்டு, சென்று, அத்திருவடியில் பெருகும் வீட்டின்பமாகிய தேனை பருகத்தொடங்குவாய், உன் ஒலி குறையும், பின் உன்னையும் மறந்துவிடுவாய், ஆனால்  வீட்டின்பத் தேன் பருகுவது மட்டும் தொடரும். இவ்வாறு சேவடியை சென்று ஒன்றி விடுவதால் இது சிவனோடு ஐக்கியமாயிற்று.

வெளிப்படையாக துது செல்லும் இலக்கணத்தை உடைய 13ம் பாடலை இப்போது காணலாம்.

நான்தனக் கன்பின்மை நானும்தா னும்அறிவோம்
தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்
ஆன கருணையும் அங்குற்றே தானவனே
கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ…………13

எனக்கு அவன் மேல் அன்பில்லை என்பதை நான் அறிவேன், இறைவனும் என் அன்பின்மையை அறிவான். அவ்வாறு  மனத்தின்கண் அன்பில்லாத என்னை அவன் திருப்பெருந்துறையில் வந்து ஆண்டுக்கொண்டதை அனைவரும் அறிவார். என்மாட்டு அவன் மதுரையில் நடத்திய திருவிளையாடல்களை அடியார்கள் மட்டுமின்றி, மக்களும் அறிவர். இவ்வாறு அவன் தானே வந்து என்னை ஆட்கொண்டது அவன் கொண்ட பெருங்கருணையால்தானே அன்றி, என் அன்பினால் விளைந்ததன்று.

இப்போதும் நான் பாசத்தால் கட்டுண்டவன். நானே சென்று அவனை அடைய முடியாது. ஆகையால், வண்டே, நீ அவனிடம் சென்று, அவனே என்னிடம் வந்து, மீண்டும் என்னைத் தன்னுடன் சேர்த்துக்கொள்ளுமாறு  விண்ணப்பம் செய்வாயாக, என்று கூறுகிறார்.

இறைவனிடம் சென்று, என்னை சேர்த்துக்கொள்ளுமாறு சொல் என்றதனால், இப்பாடல் தூது இலக்கணத்திற்கு உட்பட்ட பாடல் என்று முன்னமே குறிக்கப்பட்டது.

மற்றும், ‘என்னைக் கூட குளிர்ந்து ஊதுகஎன்றதனால், சிவனோடு ஐக்கியம் எனக்குத் தேவை என்று உரைப்பதாகக் கொள்ளலாம்.

நாவுக்கரசுப் பெருமானும் இக்கருத்தை ஒரு  பாடலில் வலியுறுத்துகிறார்.

ஏன்றுகொண் டாயென்னை யெம்பெரு மானினி யல்லமென்னில்
சான்றுகண் டாயிவ் வுலகமெல் லாந்தனி யேனென்றெனை
ஊன்றிநின் றாரைவர்க் கொற்றிவைத் தாய்பின்னை யொற்றியெல்லாம்
சோன்றுகொண் டாய்கச்சி யேகம்ப மேய சுடர்வண்ணனே. (4-99-9)
தூது இலக்கணத்திற்கு உட்பட்ட பாடல் என்றதனாலோ என்னவோ, இப்பாடலில் இறைவனின் திருவடிப் பெருமையைப் பற்றிக் கூறாமல், அவனுடைய கருணை உள்ளத்தைக் குறிப்பிட்டு, அவன்தான் என் தலைவன், ஆகையால் நீ என்னைத் சேர்த்துக்கொள்ளுமாறு அவனிடம் சென்று ஓதுவாய் என்கிறார்.  இது ஒரு தன்னிலை விளக்கம்போல் அமைகிறது என்று சொன்னால் தவறில்லை என்றே தோன்றுகிறது.

மற்ற 19 பாடல்களில்  , இறைவன்  புகழை வண்டுக்குச் சொல்வதுபோல்  அமைந்துள்ள இறுதி வரிச் சொற்களை நாம் கீழே காணலாம்.

1. ‘தாமறியாச் சேவேறு சேவடி’
2. ‘ஊனார்  உடை தலையில் உண்பலிதேர் அம்பலவன் தேனார் கமலம்’
3. ‘அனைத்து எலும்பும் புண்ணெக ஆனந்தத் தேன் சொரியும் குனிப்புடையான்’
4. ‘வான்கருணைச் சுண்ணப்பொன் நீற்றர்’
5. ‘மெய்த்தேவர் தேவர்’
6. ‘சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த வித்தகத் தேவர்’
7. ‘சிட்டாய சிட்டன்’
8. ‘குன்றாத செல்வர்’
9. ‘மயக்கறுத்த கருணைக் கடல்’
10.‘தன் கருணை தேயுற்ற செல்வர்’
11.‘பொன்னம் கழல்’
12.‘தாயான ஈசன்’
14.‘திருவான தேவர்’
15.‘வானும், திசைகளும்,மாகடலும் ஆய பிரான் தேனுந்து சேவடி’
16.‘பிரானுக்கே’
17.‘செய்யார் மலரடி’
18.தொன்மைக் கோலத்தை முழுதும் விவரிப்பது
19.‘தெள்ளுங்கழல்’
20.‘தீ மேனியான்’

இத்தகைய பெருமைகளைக் கொண்ட இறைவனிடம் சென்று தேன் என்ற பேரின்பத்தை நீ கொள்வாயாக  என்று உலகியலாருக்கு வண்டை உருவகம் செய்து சொல்கிறார். இறைவனின் பெருமையை முற்றிலும் தம் அநுபவ வாயிலாக உணர்ந்ததை மணிவாசகப் பெருமான்  நமக்கு சொல்ல வருகிறார். இப்பதிக பாடல்களை முற்றிலும் கற்றுணர்ந்து, அடியார்கள் அனைவரும்,  அவனைப் பற்றி, அவனருளைப் பெற வேண்டுகிறோம்.

திருச்சிற்றம்பலம்