செவ்வாய், 7 ஜூலை, 2020

தோடுடைய செவியன்...





தோடுடைய செவியன்…..

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

ஞானசம்பந்தப் பெருமான் சிவ பரம்பொருளைக் காணவும் காட்டவும் வல்ல நிலையில் விளங்கிய முதல் அருளாளராகத் தம்மை உலகுக்குக் காட்டிக் கொண்ட பெருமை இந்த முதல் பாடலுக்கு உண்டு.

தந்தையார் மதுரையில் தன்னைக் காண வந்த காலத்து அருளிய கழுமலப் பதிகம் ‘மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்’ என்ற பதிகம். அப்பதிகத்தில்
“போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லாது எனத் தாதையார் முனிவுறத் தானெனை ஆண்டவன்”  என்று தன் இளமைக் காலத்தில் நடந்த அருட் செயலை நினைவு கூறுகிறார். அம்மையின் பெருமைகளையெல்லாம் கூறி வந்தவர் “கழுமல வளநகர்ப் பெருக்கு நீரவளோடும் பெருந்தகை இருந்தது” என்று குறிப்பிடுகிறார். அன்பர்களுக்கு திருவருளை குறைவறக் கொடுக்கும் தன்மையுடையவள் என்று, “பெருந்தகை” என்று  கழுமலநாதன்  பெருமைக்குறியவனாக அமைவதற்குக் காரணம் அம்மையே என்று கருதும் வகையில் கூறினார்.
சிவப்பிரகாச சுவாமிகள் இதை

“மகிழ்ச்சி மிகவுண்டு போலும் எதிர்வந்து
புகழ்ச்சியொடு நீபாடும் போது – நெகிழ்ச்சி மலர்ச்
சந்தையினும் வண்டிரையும் தண்புகலிச் சம்பந்தா
தந்தையினும் பால்கொடுத்த தாய்க்கு.” என்றார்.     (நா.நா.மாலை 13)

பொழிப்புரை :

தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் உள்ளத்தைக் கவர்ந்தகள்வன், இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!

தோடுடையசெவியன் என்பது முதலாக உள்ளங்கவர் கள்வன் வரை இரண்டு வரிகளில்  இறைவனுடைய சிறப்பியல்புகள் தெரிவிக்கப் பெறுகின்றன.

செவியன்:

பிள்ளையாருடைய அழுகைக் குரல் சென்று பரந்து திருமுலைப்பால் அருளச் செய்தது திருச்செவியாதலின் அதனை முதற்கண் தெரிவிக்கிறார். உலகுயிர்கள் துன்பம் நீங்கி இன்பம் அடைதலே  வேண்டும் என்று , பாடல் பரமனார் திருச்செவியில் சென்று சேர, திருச்செவியை முதற்கண் சிறப்பித்தார், என்பது சேக்கிழார் பெருமான் குறிப்பு. `பல்லுயிரும் களிகூரத் தம் பாடல் பரமர்பால் செல்லுமுறை பெறுவதற்குத் திருச்செவியைச் சிறப்பித்து` என்பது  சேக்கிழார் வாக்கு. தோடுடையசெவி என்றதால் இடப்பாகத்துச் செவி என்பது குறிக்கப் பெறுகின்றது. கருணைக்கேற்றது, தாய்தழீஇய இடப்பக்கமாதலின், அதனை முற்கூறினார்.

ஆகாயத்திலிருந்து எழும் நாதமே, மற்ற பூதங்கள் தோன்றக் காரணமாக இருப்பதால், அந்த நாதத்தை உள் வாங்கும் உறுப்பான செவி முதலில் கூறப்படுகிறது. மற்றும் ஓம் என்ற மந்திரத்தை உணர்த்தும் வடிவத்துடன் இருப்பது செவி என்பதால், செவி முதலாகக் கூறப்பட்டுள்ளது. தோடு என்ற அணிகலன் மங்கலத்தைக் குறிக்கும். எந்தப்பாடலையும் மங்கலச் சொல்லுடன் தொடங்குவது நம் முன்னோர் வழக்கம்.

பிறக்கும் உயிர்கள் முதலில் அன்னையை உணர்ந்து பின்னரே அவள் மூலம் தந்தையை உணருகின்றன என்பதால் முதலில் அன்னையை உணர்த்தும் சொல்லாக ‘தோடு’ என்ற சொல்லை முதலில் வைத்து, அத்தனை உணர்த்தும் சொல்லான ‘செவியன்’ என்பதை அடுத்து வைத்து பாடல் பாடப் பெற்றது. இதனாலேயே சீகாழிப் பதிகப் பாடல்களில் பெரும்பான்மை இடங்களில் அம்மையாரை சுட்டி உடன் கூறுவார்.

குழந்தை பால் குடித்து முடிந்தவுடன் அம்மை வாயைத் துடைக்க வில்லை போலும். துடைத்ததாக புராணத்தில் எங்கும் சொல்லவில்லை. ஞானப்பால் குழந்தை குடித்ததை உலகவர் அறியவேண்டும் என்று கருதிய பார்வதி தேவி அவ்வாறு துடைக்காமல் விட்டிருக்கலாம்.

அடியார்கள் பாடும் பாட்டைக் கேட்கும் உடல் கருவியாகிய செவியினை பிள்ளையார் சிறப்பித்துக் கூறுகிறார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் சிவத் தன்மை பெற்று செம்மையாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பாடப்பட்ட பதிகம் என்றும் உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானைச் சுட்டிக் காட்டி உணர்த்தும் பதிகம் என்று சேக்கிழார் பெருமான் குறிப்பிடுகிறார்.

மூன்றுவயதுக் குழந்தையாகிய ஞானசம்பந்தப்பிள்ளையார் தீவிரதர அன்புகொண்டு சன்மார்க்க நெறியாகிய நாயக நாயகித் தன்மையில் எடுத்த எடுப்பிலேயே ஈடுபடுகின்றார். உமையொருபாகனாக ஒரு பெண்ணோடு இருந்த தன்மையால் என் உள்ளம் கவர்கின்றார் அவர் என நயம் தோன்றக் கூறினார்.
விடையேறி:
தாம் கண்ட காட்சி இடபாரூடராதலின் அதனைக் குறித்தபடி.
தூவெண்மதி:-
தூய்மையான வெண்ணிறம் பொருந்திய மதி. மதிக்குத் தூய்மை களங்கமின்மை, இருள் ஒளியைச் சாராதவாறு போலக் களங்கம் இறைவனையும், அவனருள் பெற்றாரையும் சாராது. தூய்மை மனத்திலும் வெண்மை புறத்திலும் நிகழ்வது ஆதலின், இங்கே குறிப்பிடும் மதி நாம் காணும் சந்திரன் போன்று பிராகிருத (பிராகிருதம் – அழியத் தக்கது) சந்திரன் அல்லன் என்பது தெளியத்தக்கது. அன்றியும் ஒரு கலைப் பிறையாதலின் களங்கத்திற்கு இடமில்லை என்பதுமாம்.

இறைவன் சுடலைப் பொடி பூசுதல்:
சர்வசங்கார காலத்து எல்லாவுலகமும் இறுதியாக இறைவனிடம் ஒடுக்கப் பெறும்போது நிகழ்வது, மகாசங்காரமாவது. பஞ்ச கலைகளிலும் அடங்கிய எல்லாப் புவனங்களையும் சங்கரிக்கின்ற நிலை. அப்போதுதான் எல்லாம் சுடலைக் காடாகும்.
உள்ளங்கவர்தல்: அவனையன்றி உளங்கள் அறியாவாறு ஆட்கொள்ளுதல்.
ஏடு-இதழ்.
 மலரான்-பிரமன்.
பிரமன் வழிபாடு செய்த தலமாதலின் இறைவற்குப் பிரமபுரீசர் என்பதும் தலத்திற்குப் பிரமபுரம் என்பதும் பெயராயிற்று. பிரமாபுரம் எனவே பிரமன் வழிபட்ட தலம் என்பது விளங்குதலின் மலரான் என்பது பிரமனைக் குறியாது என்றும், இந்நாயனாரே முற்காலத்து ஏடுடைய மலரால் பூசித்ததை  இங்ஙனம் கூறினார் என்றும் சதாசிவச் செட்டியாரவர்கள் கருதினார்கள்.இந்த சொல் இருபொருள் தரும் சொல்லாகக் குறிக்கப் பட்டுள்ளது. இதழ்களை உடைய தாமரை மலரில் உள்ள பிரமன் என்றும், இதழ்களை உடைய தாமரை மலரால் என்றும் இருவகைப் பொருள் கொள்ளலாம். மலரால் எனக் கொண்டு காயத்தாலும், பணிந்து என்றதனால் மனத்தாலும், ஏத்த என்றதனால் வாக்காலும் ஞானசம்பந்தப்  பெருமான் முன் செய்த வழிபாடுகளைக் குறிப்பதாகவும் சிலர் சொல்வர்.
 பீடு-பெருமை.
மேவிய-தாமே விரும்பி எழுந்தருளியுள்ள. இறைவன் நித்யசுதந்திரன் ஆதலின் இங்ஙனம் கூறப் பெற்றது.
 பெம்மான்-பெருமான் என்பதன் திரிபு. கள்வன் பெருமானாகிய இவன் அன்றே எனக் கூட்டுக. ஏறி, பூசி என்பன பெயர்ச்சொற்கள்.
 இத் திருப்பாடலுக்கு உரை எழுதிய கயப்பாக்கம் திரு.சதாசிவச்செட்டியார் அவர்கள்
`விடையேறி` என்பது நித்யத் தன்மையை வேண்டிய அறக்கடவுளை வெள்விடையாகப் படைத்து ஊர்தியாகக் கொண்டதால் சிருஷ்டியும், `மதிசூடி` என்பது சந்திரனுக்கு அபயம் தந்து திருமுடியில் ஏற்றிக் காத்ததால் திதியும், `
பொடிபூசி` என்பது சர்வசங்காரகாலத்து நிகழ்ச்சியை அறிவித்தலால் சங்காரமும்,
`கள்வன்` என்பது இறைவன் எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்திருந்தும் அவைகள் வினைப்போகங்களை நுகர ஒளித்து நிற்பதால் திரோபவமும், (மயக்கம், சிவனின் அருட்செயல்)
`அருள்செய்த` என்பது அனைவருக்கும் அருள் செய்யும் அநுக்கிரகமும் ஆகிய ஐந்தொழிலையும் விளக்கும் குறிப்பு என்பார்கள்.

 ஸ்ரீமத் செப்பறைச் சுவாமிகள் அவர்கள், `தோடுடைய செவியன்` முதலாயின இறைவனது எண்குணங்களாகிய சிறப்பு இயல்புகளை உணர்த்துவன என்றும், `பிரமாபுரம்` `விடையேறி` முதலியன இறைவனது தசாங்கங்களைக் குறிப்பால் உணர்த்தி நிற்பன என்றும், `விடையேறி` `பொடிபூசி` `உள்ளம் கவர்கள்வன்` என்பன முறையே இறைவனுடைய மூன்று திருமேனிகளாகிய உருவம், அருஉருவம், அருவம் என்ற மூன்றையும் குறித்து நிற்பன என்றும், எழுதியுள்ளார்கள்.

 சேக்கிழார் சுவாமிகள் `மறைமுதல் மெய்யுடன் எடுத்த எழுதுமறை` என்பதால் பிரணவத்தின் முதலாகிய ஓங்காரத்தைச் சிவசக்தியின் உண்மைச் சொரூபமாகிய தகரவித்தையின் அடையாளமாகிய `த்` என்பதோடு சேர்த்து `தோ` என்று தொடங்கியதாகக் குறிப்பிடுவார்கள்.
 பன்னிரண்டாம் திருமுறையில் `உலகெலாம்` என்று முடிவதனையும் இதனோடு சேர்த்துத் திருமுறை முழுவதுமே வேத மூலமாகிய பிரணவத்துள் அடங்கியது என்பது குறிப்பு.

 தேவாரத்திற்கும் வேதத்திற்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்த, வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ்வேதம் தந்த இவர்கள், “தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: ப்ரசோ தயாத்” என்ற காயத்திரி மந்திரத்தின் முதலெழுத்தாகிய தகரத்தின் மீது பிரணவத்தின் முதல் எழுத்தாகிய ஓகாரத்தைச் சேர்த்துத் தொடங்கியிருப்பது அறிந்து இன்புறற்குரியது.

குருவருள்: `தோடுடைய செவியன்` என்றமையால் அம்மையப்பரே உலகுக்கு அம்மையப்பர் என்பதை முதலில் உணர்த்தி, அதனால் ஒருதெய்வ வழிபாட்டை நிலைநிறுத்துகிறார் ஞானசம்பந்தர். தோடுடைய செவியே `ஓம்` என்ற பிரணவ சொரூபமாய் உள்ளதையும் காட்டி அருளுகிறார்.

சொரூபசிவம் மூவகை ஆன்மாக்களுக்கும் மூவகையால் அநுக்கிரகித்து மும்மலங்களையும் போக்கி அருள் என்ற அமுதத்தை ஊட்டி அருளும் முறையில், சகலான்மாக்களுக்குப் படர்க்கையில் ( பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகியவற்றில் பேசப்படுவரைக் குறிக்கும்) தோன்றிப்புரியும் குருவருளைக் குறிப்பதாகுமென்று `குரு அருளும்` (அகத்தியர் தேவாரத் திரட்டு) என்ற பாடலும் குறிக்கிறது.

 “ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்த அருள்செய்த பீடுடைய பிரமாபுரம்” என்பது பிரமன் பூசித்தமைக்கு இரங்கிய பெருமான் அருள் செய்ததையே குறிக்கும்.

இதை உணர்த்த வருவார்  போன்று ‘சேவுயரும் திண்கொடியான் திருவடியே சரண்’ என்று சிறந்த அன்பால் நாவியலும் மங்கையொடு நான்முகன்தான் வழிபட்ட நலங்கொள் கோயில்` எனப் பிள்ளையார் மேகராகக் குறிஞ்சிப் பண் பாடலிலும் விளக்கியுள்ளார்.

இந்தப் பாடலில் உணர்த்தப் படும் பொருள்களான, தோடு, இடபம், வெண்மதி, சுடலைப்பொடி, ஆகிய அனைத்தும் வெண்மை நிறம் உடையன. அம்மை பிள்ளையாருக்கு ஊட்டிய பாலும், உடன் சேர்ந்த ஞானமும் வெண்மையானவை என்று சான்றோர் கூறுவர்.

அறியாமையை இருளுக்கும், ஞானத்தை வெண்மைக்கும் ஒப்பிடுவது வழக்கம்.  வெள்ளை நிறம் கொண்ட பாலையும், ஞானத்தையும் உமையம்மை வாயிலாகப் பெற்ற ஞானசம்பந்தப் பெருமானுக்கு வெண்மை நிறப் பொருள்களே கண்ணில் பட்டது போலும். பெருமானின் அடையாளங்களாக பாம்பு, ஆமை, ஓடு, கோவண ஆடை, கங்கணம், செஞ்சடை முதலியன இருப்பினும், வெண்மையான நிற பொருள்களை மட்டும் கூறி இறைவனை அடையாளம் காண்பது இப்பாடலின் நயம்.

குணங்கள், இராஜசம், தாமசம், சத்வம் என்று மூன்றாகச் சொல்லுவது வழக்கம். இவைகளை முறையே செம்மை, கருமை, வெண்மை ஆகிய நிறங்களால் குறிப்பிடுவர். வெண்மை நிறம் கொண்ட பால் ஊட்டப்பட்ட குழந்தை, சத்வ குணம் நிரம்பப் பெற்று வெண்மையான பொருள்களை அடையாளம் காண்பது இயல்புதானே.

பாடலின் முதல் அடியில் பத்து சொற்களும், இரண்டு, மூன்றாவது அடிகளில் ஒன்பது சொற்களும், நான்காம் அடியில் எட்டு சொற்களுமாக 36 சொற்களில் இப்பாட்டு அமைந்துள்ளது. சைவசமய நெறியை உணர்த்தும் 36 தத்துவங்களை குறிப்பதாகக் கொள்ளலாம்.

இறைவனின் எண் குணங்களை இப்பாடல் உணர்த்துகிறது என்பது சில சான்றோர் கருத்து.

1.      செவி மூலம் அடியரின் வேண்டுகோள் அனைத்தையும் ஏற்று அருளும்,
பேரருள் தன்மை உணர்த்தப் படுகிறது. பேரருளுடைமை
2.      விடையை வாகனமாகக் கொண்டுள்ளது, இறைவன் தன்வயத்தனாக இருக்கும் தன்மை வெளிப்படுகிறது. தன்வயத்தனாதல்
3.      தூவெண்மதியில் உள்ள ‘தூ’ என்ற சொல்  இறைவன் தூய உடம்பினனாக இருக்கும் தன்மை காணப்படுகிறது.
4.      மதி என்பதற்கு அறிவு என்று பொருள் கொண்டு, மதிசூடி என்றதனால், இறைவனின் முற்றும் உணர்ந்தறியும் ஆற்றல் கூறப்படுகிறது. முற்றறிவுடைமை.
5.      பொடிபூசி – வரம்பிலா இன்பமுடையவன். வரம்பிலின்பமுடைமை
6.      உள்ளம் கவர் கள்வன் – இறைவன் இயற்கை உணர்வு உடையவனாகவும், பாசங்களிலிருந்து நீக்கம் உடையவனாக இருப்பதைக் குறிக்கிறது. இயற்கை உணர்வு,
7.      பிரம்மபுரம் – அளவிலா ஆற்றல் உடைமை.

இப்பாடல் இறைவனின் ஐந்தொழிலையும் உணர்த்துகிறது என்று பொருள் சொல்வாரும் உண்டு.

1.      தரும தேவதை என்றும் நித்தியமாக இருக்கும் தன்மை வேண்டியதால், அதனை இடபமாக மாற்றி, தனது வாகனமாக் கொண்டார் என்பதும் குறிப்பு.ஆகவே இது படைக்கும் தொழிலைக் குறிப்பது.
2.      வெண்மதி சூடி சந்திரனைக் காத்த செய்கை, காக்கும் தொழிலைக் குறிக்கின்றது.
3.      சுடலைப் பொடி என்ற சாம்பல் பெருமானின் அழித்தல் தொழிலைக் குறிப்பது.
4.      கள்வன் தான் திருடிய பொருளை பிறர் அறியாமல் மறைத்து வைத்திருப்பான், என்பதால்  ‘உள்ளம் கவர் கள்வன்’ என்று மறைத்தல் தொழில் உணர்த்தப் படுகிறது.
5.      பிரம்மனுக்கு அருள் செய்த தன்மையைக் கூறி இறைவனின் அருளும் தொழில் உணர்த்தப் படுகிறது. (கயப்பாக்கம் சதாசிவம் செட்டியார் உரை)

விடைஏறி மதிசூடி என்ற தொடர்கள் இறைவனின் உருவத்தன்மையையும், பொடிபூசி என்பது தன் திருமேனியை மறைத்துக் கொள்வதாக எண்ணி அருவுருவத்தையும், கள்வன் மறைந்து நிற்பான் என்று அருவத்தையும் குறிக்கும் என்ற விளக்கமும் உண்டு.

மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் இறுதிப் பாடலில் இறைவனது ஐந்து தொழில்களையும் குறிப்பிடுவதை இங்கு ஒப்பு நோக்கலாம்.

உயிர்கள் தோன்றுவதற்கு காரணமான பாதங்கள் என்று படைத்தலையும்,
உயிர்களை காக்கும் பூங்கழல்கள் என்று காத்தல் தொழிலையும்,
மாலும் அயனும் காணாத புண்டரீகம் என்று மறைத்தலையும்,
யாம் உய்ய ஆட்கொண்டருளிய பொன்மலர்கள் என்று அருளுவதையும்,
குறிப்பதைக் காணலாம்.

தோடு, விடை  என்பவை அஃரிணை யாகவும், செவியன் என்பது உயர்திணையாகவும் கொண்டு, இந்த இரண்டு நிலைகளிலும் நிற்பவன் இறைவன் என்று குறிப்பால் உணர்த்தினார்.

மேலும் இப்பாடல் பிரிக்கப் படாமல் சீர்கள் அமைந்துள்ள முறையிலேயே அமைத்துப் படித்தால், இன்னும் சில உண்மைகள் நமக்குப் புலப்படும்.

பாடலின் நான்கு வரிகள், பெருமானை அடைய உதவும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பதை உணர்த்துகிறது. ஒவ்வொரு வரியில் உள்ள ஐந்து சீர்கள், ஐந்தொழிலையும், ஐந்தெழுத்தையும், ஐந்து மலங்களையும், (ஆணவம்  கன்மம், மாயை, மாயேயம், திரோதானம்) ஐந்து காரணக் கடவுளர்களையும், (பிரமன், திருமால், உருத்திரன், மகேசன், சதாசிவம்) என்பவற்றையும் குறிப்பதாகக் கொள்வர்.  ஒவ்வொரு வரியிலும் மெய்யெழுத்து நீங்கலாக உள்ள 18 எழுத்துக்கள் இருக்கும் தன்மை, பதினெண் வித்தைகளின் தன்மையைக் குறிப்பதாகவும் கொள்ளலாம்.

`தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத்தேசிகன் பேரருள் ஆகும்` என்பதால் இது ஞானதேசிகனது திருவருட்டிறத்தை விளக்குவதாகும். (அகத்தியர் தேவாரம்)  
தாதையார் கேட்ட வினாவிற்கு பதிலளிக்கும்படியாக இந்தப் பதிகம் அமைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அருள் ஞானத்தை தமக்குக் கொடுத்த இறைவனை துதிப்பதாகவும், உலக உயிர்களுக்கு மெய்ஞ்ஞான உணர்வினை ஊட்டுவதற்காகவும் ஆகும். வேதம் சுர ஒலியால் இசைக்கப் படுவது. சுர இயல்பை எழுத முடியாது. தவறு ஏற்படும்படி இசைத்தால் குறித்த பயனும் தராது. ஆகையால் பிள்ளையார் இதனை தாம் பயின்ற மறை வழியாகத் தந்தையாருக்குக்  கூறாமல், எழுது மறையாக்கி தமிழில் உரைத்தார். இதையே முன் பாட்டில் “இருக்கு மொழிப் பிள்ளையார்” என்று சேக்கிழார் சுவாமிகள் பதிவு செய்தார். எழுதும் மறையைத் தமிழில் தொடங்கும்போது, வேதம் எவ்வாறு பிரணவத்தில் தொடங்குகிறதோ, அதே போன்று ‘தோடு’ என்ற முதல் சொல்லில் ஓகாரத்தை அருளினார் பிள்ளையார்.
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

பொழிப்புரை :

அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத் திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அருநெறிய மறைவல்ல முனி - அருமையான நெறிகளை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன்.
அலர்மேய அகன் பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை
தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறி சேர்க்கும் முதல்வனை.
 ஒருநெறிய மனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பது. ஒன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள்.
 வைத்து - பிரியாதே பதித்து.
 திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ்.
 தொல் வினை - பழமையாகிய வினை; அநுபவித்துக் கழிக்க வேண்டிய எஞ்சி நிற்கும் பழவினை.  இங்ஙனங் கூறியது, யான் நுகர்கிறேன் என்ற துன்பம் தெரியாமல் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு. மற்ற வினைகள் ஒழிவதால் பிறவிக்கு வித்தாகிய வினை இல்லை. ஆகையால் இனி பிறவி இல்லை, முத்தி ஒன்றே என்ற பொருள் படும்படி கூறினார்.
வழிபாட்டாலும், தேவாரத் திருப்பதிகங்களை ஓதுவதாலும் பழவினை (சஞ்சிதம்), வரு வினை - மேல் எதிர்காலத்து வருவினை, (ஆகாமியம்), இப்பிறப்பில் நாம் அநுபவிக்க இருக்கும் வினை, (பிராரத்தவினை) ஆகிய இவையெல்லாம் தீரும் என்பது ஆளுடைய பிள்ளையாரின் அறிவுரை. 
"வல்லதோர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச் சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே". இதுபொதுவாக வினையினால் வரும் துன்பம் நீங்கும் என்கிறது. 
இக் கடைசிப் பாடலில், தொல்வினை - பழவினை தீர்தல் எளிதாம் என்று அறிவித்து உள்ளதைக்  காண்க.
குருவருள்: வேதம் உலகினருக்கு வேண்டிய பொது அறங்கள் பலவற்றைச் சொல்வது ஆதலின், அதை இங்கு அருநெறிய மறை என்றார். ஆகமம் சத்திநிபாதர்க்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது ஆதலின், அதனை இங்கு அவற்றின் மேம்பட்டது எனும் பொருளில் பெருநெறி என்று கூறினார். ஒருநெறி அல்லது ஒரு சமயம் என்றால் அஃது உலகினர் அனைவருக்கும் பயன்தரத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுபற்றியே ஞானசம்பந்தர் உலகினருக்கு அருநெறிப் பயனும் சத்திநிபாதர்க்கு பெருநெறிப்பயனும் உணர்த்தினார். ஆயினும் அருநெறியும் பெருநெறியும் ஒருநெறியே என்பதையும் அதுவே திருநெறி என்பதையும் உணர்த்தியருளினார். இக்கருத்தைத் திருமந்திரமும்

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்
பெருநெறி யாய பிரானை நினைந்து
குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்
ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

என உணர்த்துவது காண்க. பீடுடைத்தேசிகன் செயல் திருநோக்கால் ஊழ்வினையைப் போக்குதல் எனவே தேசிகன் பேரருள் தொல்வினை தீர்த்தல் ஆயிற்று. `தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்` என்பது அபியுக்தர் வாக்கு.
ஒரு நெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்:  ஆளுடைய பிள்ளையாரின் பிறப்பிற்கு முன் இருந்த நிலை என்ன, பின் வந்த நிலை எது என்று கேட்டால், நிலைகள் இரண்டிற்கும் அடிப்படை நெறி ஒன்று உள்ளது. அந்நெறியின் ஒரு பகுதியை தன் அவதாரத்திற்கு முன்னும், பின் நிலையை பிரம்மபுரத்தில் பிறந்த பிறப்பின் மூலம் அறிந்துக் கொண்டார் என்று சொல்ல இடமுண்டு. அமுதப்பால் உண்டபின், யாரளித்த பாலை நீ உண்டாய் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக, தம் திருமேனி வழியாகச் சொல்வதை சேக்கிழார் பெருமான் நமக்குக் காட்டுகிறார்.
‘………………………………………காலெடுத்தே
 அச் சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளி பெய்து ,
 உச்சியினில் எடுத்தருளும் ஒரு திருக்கை விரல் சுட்டி’  (1971)
நான் இதுவரை அறிந்ததும், இனி அறிந்து விளக்கப் போகும் நிலையும் இரண்டாக இருந்தாலும், நெறியால் ஒன்றே என்று, ‘ஒருநெறிய மனம் வைத்துணர் ஞானசம்பந்தன்’ என்றார். ஒரு காலை ஊன்றியும், ஒரு விரலை உயர்த்திச் சுட்டியும் இவ்வாறு உணர்த்தினார்.
ஒரு நெறி என்று குறிப்பிட்டது , இரு நிலைகளைக் கொண்ட ஒரு நெறியை இரு பிறவிகளைக் கொண்ட ஒருவர், தம் முன்னைப் பிறவியில் அந்நெறியின் ஒரு பாதியை செய்து முடித்தேன் என்ற வகையில் ஒரு காலை ஊன்றியும், இப்பிறவியில் அடுத்த பாதியைச் செயல் படுத்த வேண்டும் என, நான் உணர்த்த வரும் நெறி ஒன்றே என்று விளங்க ஒரு விரல் உயர்த்தியும், காட்டினார் சம்பந்தப் பெருமான்.
அரு நெறியை உடையது மறை, பெரு நெறியை உடையது பிரமாபுரம். மறை தந்த அருநெறி  முன்னது, பிரமாபுரம் விளக்கும் பெருநெறி பின்னது. இரண்டையும் இணைத்து நிற்பவன் பெருமான். சம்பந்தப் பெருமான் தன்னுடைய தொண்டினைக் கூற முற்படும்போது அதை ‘திருநெறி’ என்றார். அதனை வெளிப்படுத்த  உதவும் மொழியை ‘ திருநெறிய தமிழ்’ என்றார். (சிவ நெறி காட்டும் தமிழ்)அருநெறி, பெருநெறி, திருநெறி என்ற மூன்றும் ஒன்றன் வழி ஒன்றாக வளர்ச்சியில் வருபவை. இம்மூன்றையும் ஒன்றாகக் கொள்ளும்போது முன் இரண்டையும் இணைத்து ஒரு நெறி என்று அமைத்துக் கொள்ள வேண்டும்.
பெருநெறிய பிரம்மாபுரம், என பெருநெறியையும், பிரம்மாபுரத்தையும் இணைத்து ஞானசம்பந்தப் பெருமான் கூறியதில் ஒரு சிறப்புண்டு. பிரம்மாபுரம் பன்னிருமுறை கடல் கோளால் தாக்கப் பெற்றது. பன்னிரண்டு முறையும் அழியாமல் தன்னை, தன் தனித்தன்மையை நிலைநாட்டிய பெருமை இவ்வூருக்கு உண்டு.
“…………………………………………….………ஆலித்து
மன்னிருகால் வேலைவளர் வெள்ளத்து உம்பரோடும்
பன்னிருகால் நீரில் மிதந்தவூர்”

ஏன்று நம்பியாண்டார்நம்பி ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலையில் பாடியதைக் காண்க. பன்னிரண்டு முறை தாக்கப் பெற்றும், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சிறப்பு பெற்று, தன்னை விளங்குமாறு செய்துக் கொண்டது இந்த பிரமாபுரம் என்ற குறிப்பினை நம்பியாண்டார் நம்பி அவர்கள் உணர்த்துகிறார்.

தெய்வத் திருமுறைகளில் முதல் பதிகமாக வரும் இப்பதிகம் மேற்சொன்னவாறு பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டது.