வெள்ளி, 8 நவம்பர், 2019

திருவெம்பாவை

மாணிக்கவாசகரின்  திருவெம்பாவை

மணிவாசகப் பெருமான் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு, திருவண்ணாமலை அடைந்தார். இம்மலைதான் அன்று அனல் வடிவமாய் அண்ண முடியாததாய் இருந்தது, ஆனால் இன்று பெருவாழ்வு பெற்று காட்சி அளிக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து நகரினுள் புகுகிறார். ஆலயத்தைக் காண்கிறார். இறைவனை எண்ணி வாழ்த்துகிறார்.

அடிகளார்  திருவண்ணாமலையை அடைந்த காலம் மார்கழி மாதம் திருவாதிரைக்கு முந்திய பத்து நாளாக இருக்கலாம். பெண்டிர் பலரும், விடியற்காலையில் எழுந்து, வீட்டையும் முற்றத்தையும் கூடி மெழுகிக் கோலமிட்டு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குளத்திற்கு நீராடச் செல்கின்றனர். அவர்கள் நீராடச் செல்லும்போது அரன் புகழைப் பாடிக்கொண்டு செல்லும் காட்சியைக் காண்கிறார் நம் அடிகள். அந்நிகழ்ச்சிகளையே இங்கு திருவெம்பாவையாகப் பாடி நமக்கு அருளினார்.

‘எம்பாவாய்’ என்னும் தொடர் இப்பாடல்களின் இறுதியில் அமைவதால் இப்பதிகம் ‘திருவெம்பாவை’ எனப் பெயர்பெற்றது. . இதே போன்று மகளிர் விளையாட்டுகளைக் குறிக்கும் மற்ற திருவாசகப் பதிகங்களுக்கு, அப்பாடல்களின் இறுதித் தொடரே பெயராக வழங்கப்பட்டுள்ளது. திரு என்ற மங்கல மொழி சேர்க்கப்பட்டு திருவெம்பாவை என்று பெயர் கொண்டது. ஆகவே தெய்வத் தன்மையுடைய எம்பாவை என்று பொருள்படும்.
ஆண்டாள் பாடிய திருப்பாவையும், திருவெம்பாவையும் பாவைப் பாட்டுகள் என்று முன்னர் உரை கண்டவர்கள் உரைத்தனர். அது சரியான விளக்கமல்ல என்பதற்கு சில குறிப்புகள் கீழே காணலாம்.
1.  
     திருப்பாவை மார்கழி 30 நாட்களும் நிலவும் நோன்பு. திருவெம்பாவை திருவாதிரை முடிய பத்து நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப் படுகிறது.சைவர்கள் இதனை ஆதிரை விழா என்று கொண்டாடுவர். திருவாதவூரடிகள் புராணத்தில் இது கீழ்க்கண்டவாறு குறிக்கப் படுகிறது.

“மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரைமுன் ஈரைந்தே ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான
போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்.”
 
ஆயர்பாடி மங்கையர் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பி பாடினர். இந்த நோக்கத்துடன் மார்கழித் திங்கள் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து, நீராடி, மணலால் உமையம்மையின் பாவை நிறுவி, வழிபட்டு, கண்ணனைத் தாங்கள் மணக்கவேண்டும் என வேண்டினர். மாறாக திருவெம்பாவையில், சிவனடிமைத் திறம் மிக்க ஒருவனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற ஒரு வேண்டுகோள்தான் காணப்படுகிறது.

  இறைவனைக் கணவனாகப் பெற்று தழுவி இன்புறுதல் வைணவ நெறியில் காணப்படும் ஒன்று. சிவநெறிக்கு இது ஏற்புடையதன்று. 
  
இறை இன்பம் இவ்வுடம்பு இல்லாவிடினும் ஒளியுடம்பாய் வேறோர் உடம்பு கொண்டு நுகரப்படுகிறது என்பது அவர்கள் கொள்கை. ஆனால் சைவநெறியில் உயிர் இடையீடு ஏதுமின்றி இறைநிறைவில் ஒன்றாய்க் கலந்து அவ்வின்பத்தில் அழுந்தி நிற்பதே வீடு என்று பெறப்படும்.
  
பாவைப் பாடல்கள் நான்குசீர் கொண்ட அடிகள் 5 முதல் பத்து வரை உள்ள பாடல்கள். அடிகளார் இப்பதிகத்தை 8 அடிகள் கொண்ட பாடல்களாக அமைத்துள்ளார்.

ஆண்டாள் பாடல்களில் இறைவனைக் கண்டு காதலித்தது காணப்படுகிறது. காரைக்கலம்மையார்  தன் தசைபொதி உடம்பை சுமந்து நின்றது தன் கணவனுக்காக என்பதும், அவ்வுடம்பு கணவனுக்கு ஆகாது என்பதால் வேண்டிப் பேயுருவம் பெற்றதும் வரலாறு. சேக்கிழார் பெருமான் இப்பகுதியை மிக நயமுடன் அமைத்துள்ளார்.


ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பையெல்லாம் உதறி எற்புடம்பேயாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவமானார்.

இதன் நுண்பொருள் – இறையின்பத்தை நுகர்தற்கு இவ்வுடம்பு வேண்டப்படுவது அன்று, மற்றும் அவ்வுடம்பு அதற்குத் தடையாக நிற்கும் என்பதே.

இறையின்பம் உடம்பு கொண்டே நுகரப்படுவது என்றும், இறைவன் சிறப்புடைய ஓர் ஆடவன் (புருடோத்தமன்) என்பதால் அவன் இன்பத்தை நுகரும் அடியார்களில் பெண்களே மிகவும் தகுதி உடையவர் என்பர் மாயோன் நெறியினர். சிவநெறியில் அக்கொள்கையில்லை. ஆடவர், பெண்டிர் என்பது உடற்கூறு பற்றியது, உயிரின் கண் இல்லை என்பதும், இறையின்பத்தை நுகரும் அடியார்களிடத்து ஆடவர் மகளிர் என்ற இருபாலாரும் ஒப்ப உயர்ந்தவர் என்பது சிவ நெறி. ஆகையினால்தான் நாயகன் நாயகி பாவம் சிவநெறியில் இல்லை. ஞானத்தை நாயகி பாவம் என்று கூறாது, சன்மார்க்கம் என்றே குறிக்கப் பட்டது.

இறைவனைப் பாடி பணிந்து ஏத்துவதையே திருவெம்பாவை முழுதும் காணலாம். பக்தி செய்வதே முழுநோக்கம் என்று கொள்ளப்படுகிறது. அதற்கு எந்தவித சட்ட திட்டங்களும் வரன் முறைகளும் கூறப்படவில்லை. ஆனால் திருப்பாவையில் நோன்பும் அதற்குண்டான வரன்முறைகளும் கூறப்பட்டுள்ளது. ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்’ என்ற திருப்பாவைப் பதிவைக் காண்க.

தேவர்களுக்கு எடுக்கும் விழாக்கள் நிறைமதி நாளை ஒட்டி வருவன. சிவனுக்கு உரிய திருவாதிரை நாளோடு கூடிவருவது மார்கழி மாதத்தில் ஆகும். அரசனுக்குரிய விழா நாடு பூராவிற்கும் என்பதுபோல, முழுமுதல் தலைவனான சிவனுக்கு உரிய விழாத் திங்கள் மார்கழி ஆகையால், இம்மாதம் சிறந்ததாயிற்று. தேவர்கள் அனைவருக்கும் உரியதாயிற்று. தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவாதிரை விழாவைச் சிறக்கச் செய்வர் என்பதை கீழ்க்கண்ட சேந்தனார் திருப்பல்லாண்டு விளக்கும்

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.

ஆகவே திருவெம்பாவையின் அடிப்படைக் கருத்து இளமகளிர் நீராடுதல். முதல் 8 பாடல்கள் மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லாருமாகச் சேர்ந்து இறைவன் புகழைப்பாடிக் கொண்டு நீராடச் செல்வதைக் குறிக்கும். 11ஆம் பாடல் முதல் 20ஆம் பாடல் வரை நீராடுதல் கூறப்படுகிறது.