திங்கள், 28 அக்டோபர், 2024

 


இரண்டாம் சந்திப்பு: திருப்புகலூர்

 

ஞானசம்பந்தப் பெருமானின் ஐந்தாவது தலயாத்திரையில்  அப்பர் பெருமானுடனான இரண்டாம் சந்திப்பு திருப்புகலூரில் நிகழ்கிறது. இருவரின் புராண வரலாற்றில் சேக்கிழார் பெருமான்  தனிச் சொற்சுவை ஊட்டி இவ்வருளாளர்களின்  இரண்டாவது சந்திப்பைப் பதிவு செய்கிறார்.

 

நாவுக் கரசர் எழுந்த ருளும்
    நல்லதிரு வார்த்தை கேட்ட போதே
சேவில் திகழ்ந்தவர் மைந்த ரான
    திருஞான சம்பந்தர் சிந்தை அன்பு
மேவுற்ற காதல் மிகப் பெருக
    விரைந்தெதிர் கொள்ளமெய் யன்ப ரோடும்
பூவிற் பொலிபொய்கை சூழ்புக லூர்ப்
    புறம்பணை எல்லை கடந்து போந்தார் (திரு ஞா.புராணம் பாடல் 493)

  

கரண்டமலி தடம்பொய்கைக் காழியர்கோன்
   எதிரணையுங் காதல் கேட்டு
வரன்றுமணிப் புனற்புகலூர் நோக்கிவரும்
   வாகீசர் மகிழ்ந்து வந்தார்
திரண்டுவருந் திருநீற்றுத் தொண்டர்குழாம்
    இருதிறமுஞ் சேர்ந்த போதில்
இரண்டுநில வின்கடல்கள் ஒன்றாகி
    அணைந்தனபோல் இசைந்த அன்றே (பாடல் 233 திருநாவு.புராணம்)

  

நாவரசர் புகலூருக்கு எழுந்தருளுகிறார் என்ற ‘நல் வார்த்தை’  ( அரசுகள் எழுந்தருளுவதாகச் சொல்லும்  சொல்  நன்மைகள் செய்யும் பெருவார்த்தை என்ற குறிப்பீடு)  அமுதப்பால் உண்டதால் மைந்தர் எனப்படும் தன்மை பெற்ற ஞாசம்பந்தப் பெருமான்  உள்ளத்தில் அன்பு மிகவும் பெருக, அவரை விரைவில் வரவேற்க தொண்டர்கள் புடை சூழ திருப்புகலூர்  எல்லையைக் கடந்து சென்றார்.

 

நாவரசரின் நினைவு என்றும் நீங்காது நிற்கும்  உள்ளத்தில் அவர் வருகிறார் என்ற சொல் நல் வார்த்தை ஆகிற்று ஞானசம்பந்தப் பெருமானுக்கு. ( அருள், திறம், வகை, இயல்பு, பரிசு, கிடப்பு, உருவு, ஆகியவற்றை ‘அறிவார் எம்பிரான் ஆவாரே’ என்ற 43 வது திருவாசகத்  திருப்பதிகம் ‘திருவார்த்தை’ என்று பெயர் வழங்குவது இங்கே காணத் தக்கது ) ‘புறம்பணை எல்லை கடந்து போந்தார்’ என்பது அரசுகளின் வருகையை எதிர் சென்று வரவேற்கும் மரபைக் குறித்தது.

  

தன்னை எதிர்கொண்டு அழைக்க வருகின்ற ஞானசம்பந்தப் பெருமானின் அன்பின்  திறத்தைக் கேட்டு, நாவுக்கரசர் பெரும் மகிழ்ச்சியுடன் (பிள்ளையாரைக் கண்டு வணங்கும்  பேறு பெற்றேன் என்பதால் வந்த மகிழ்ச்சி) வந்தாராம். இப்பெருமக்கள் இருவரும் சேர்ந்து அணையும் காட்சியைக் காண இரு தரப்பிலும் இருந்து வந்த தொண்டர்கள் ஒன்று கூடியது இரண்டு நிலவுக் கடல்கள் (பாற்கடல் ) ஒன்று கூடியது போன்று இருந்தது என்பது சேக்கிழார் வாக்கு.

  

அங்கணர் ஆரூர் வணங்கிப் போந்த
    அரசும் எதிர்வந் தணைய வாசப்
பொங்கு புனல்தண் புகலி வந்த
    பூசுரர் சிங்கமும் பொற்பி னெய்தித்
தங்களின் அன்பின் முறைமை யாலே
    தாழ்ந்து வணங்கித் தனித்த னியே
மங்கல மாகிய நல்வ ரவின்
    வாய்மை வினவி மகிழும் போது (திருஞா.புராணம் 494)

 

 மெய்த்திரு ஞானசம் பந்தர் வாக்கின்
    வேந்தரை நோக்கி விருப்பினாலே
அப்பரை இங்கணை யப்பெ றும்பே
    ரருளுடை யோம்யாம் அந்தணாரூர்
எப்பரி சால்தொழு துய்ந்த தென்று
    வினவிட ஈறில் பெருந்த வத்தோர்
செப்பிய வண்டமிழ் மாலை யாலே
    திருவா திரைநிகழ் செல்வஞ் சொன்னார்.    (பாடல் 495)
 

ஒருவருக்கொருவர்  தத்தம் அன்பின் மிகுதியால் எதிர்கொண்டு தாழ்ந்து வணங்கினர். மற்றும் இரண்டு சந்திப்புகளின் இடையே நடைபெற்ற மங்கல நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர்.  “ அப்பரை இங்கு அணையப் பெறும் பேரருள் உடையோம் யாம்” என்று ஞானசம்பந்தப் பெருமான்  அவரைக் கண்டது பேரருளால் கிட்டிய இன்பம் என்று பதிவிடுகிறார். அவரிட்ட  திருப்பெயராலேயே அவரை அழைப்பது கண்டு இன்புறத் தக்கது. யாம் என்றது அங்கு குழுமியுள்ள அடியார் கூட்டத்தையும் உள்ளடக்கிக் கூறிய சொல். பேரருள் என்றது, இறைவனது அருளையும், நாவரசரின் அருளையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

 

இவ்விரு அருளாளர்களும் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட அன்பின் திறம் வெளிப்பாடு சேக்கிழார் பதிவினால் நமக்கு உணரக் கிடைக்கின்றது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக