செவ்வாய், 3 நவம்பர், 2020

திருவெம்பாவை விளக்க உரை

 

 திருவெம்பாவை

 

மணிவாசகப் பெருமான் பல தலங்களையும் வணங்கிக் கொண்டு, திருவண்ணாமலை அடைந்தார். இம்மலைதான் அன்று அனல் வடிவமாய் அண்ணமுடியாததாய் இருந்தது, ஆனால் இன்று பெருவாழ்வு பெற்று காட்சி அளிக்கின்றது என்று எண்ணி மகிழ்ந்து நகரினுள் புகுகிறார். ஆலயத்தைக் காண்கிறார். இறைவனை எண்ணி வாழ்த்துகிறார்.

அடிகளார் திருவண்ணாமலையை அடைந்த காலம் மார்கழி மாதம் திருவாதிரைக்கு முந்திய பத்து நாளாக இருக்கலாம். பெண்டிர் பலரும், விடியற்காலையில் எழுந்து, வீட்டையும் முற்றத்தையும் கூடி மெழுகிக் கோலமிட்டு விளக்கு ஏற்றிவைத்துவிட்டு, குளத்திற்கு நீராடச் செல்கின்றனர். அவர்கள் நீராடச் செல்லும்போது அரன் புகழைப் பாடிக்கொண்டு செல்லும் காட்சியைக் காண்கிறார் நம் அடிகள். அந்நிகழ்ச்சிகளையே இங்கு திருவெம்பாவையாகப் பாடி நமக்கு அருளினார்.

‘எம்பாவாய்’ என்னும் தொடர் இப்படல்களின் இறுதியில் அமைவதால் இப்பதிகம் ‘திருவெம்பாவை’ எனப் பெயரிடப்பட்டது. இதே போன்று மகளிர் விளையாட்டுகளைக் குறிக்கும் மற்ற திருவாசகப் பதிகங்கள், அப்பாடல்களின் இறுதித் தொடரையே பெயராகக் கொண்டுள்ளன. திரு என்ற மங்கல மொழி சேர்க்கப்பட்டு திருவெம்பாவை என்று பெயர் கொண்டது. ஆகவே தெய்வத் தன்மையுடைய எம்பாவை என்று பொருள்படும்.

ஆண்டாள் பாடிய திருப்பாவையும், திருவெம்பாவையும் பாவைப் பாட்டுகள் என்று முன்னர் உரை கண்டவர்கள் உரைத்தனர். அது சரியான விளக்கமல்ல என்பதற்கு சில காரணங்கள் கீழே காணலாம்.

1. திருப்பாவை மார்கழி 30 நாட்களும் நிலவும் நோன்பு. திருவெம்பாவை திருவாதிரை முடிய 10 நாட்கள் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.சைவர்கள் இதனை ஆதிரை விழா என்று கொண்டாடுவர். திருவாதவூரடிகள் புராணத்தில் இது கீழ்க்கண்டவாறு குறிக்கப் படுகிறது.
“மாதர்கொள் மாதரெல்லாம் மார்கழித் திங்கள் தன்னில்
ஆதிரைமுன் ஈரைந்தே ஆகிய தினங்கள் தம்மில்
மேதகு மனைகள் தோறும் அழைத்திருள் விடிவதான

போதிவர் தம்மிற் கூடிப் புனற்றடம் ஆடல் செய்வார்.”

2. ஆயர்பாடி மங்கையர் கண்ணனைக் கணவனாக அடைய வேண்டும் என்று விரும்பி பாடினர். இந்த நோக்கத்துடன் மார்கழித் திங்கள் ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து, நீராடி, மணலால் உமையம்மையின் பாவை நிறுவி, வழிபட்டு, கண்ணனைத் தாங்கள் மணக்கவேண்டும் என வேண்டினர். மாறாக திருவெம்பாவையில், சிவனடிமைத் திறம் மிக்க ஒருவனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற வேண்டுகோள்தான் காணப்படுகிறது.

3. இறைவனைக் கணவனாகப் பெற்று தழுவி இன்புறுதல் வைணவ நெறியில் காணப்படும் ஒன்று. சிவநெறிக்கு இது ஏற்புடையதன்று.

4. இறை இன்பம் இவ்வுடம்பு இல்லாவிடினும் ஒளியுடம்பாய் வேறோர் உடம்பு கொண்டு நுகரப்படுகிறது என்பது அவர்கள் கொள்கை. ஆனால் சைவநெறியில் உயிர் இடையீடு ஏதுமின்றி இறைநிறைவில் ஒன்றாய்க் கலந்து அவ்வின்பத்தில் அழுந்தி நிற்பதே வீடு என்று பெறப்படும்.

5. பாவைப் பாடல்கள் நான்குசீர் கொண்ட அடிகள் 5 முதல் பத்து வரை உள்ள பாடல்கள். அடிகளார் இப்பதிகத்தை 8 அடிகள் கொண்ட பாடல்களாக அமைத்துள்ளார்.

ஆண்டாள் பாடல்களில் இறைவனைக் கண்டு காதலித்தது காணப்படுகிறது. காரைக்காலம்மையார் வரலாற்றிலும் பாடலிலும் அவ்வாறு கேட்கப்படவில்லை. அம்மையார் தன் தசைபொதி உடம்பை சுமந்து நின்றது தன் கணவனுக்காக என்பதும், அவ்வுடம்பு கணவனுக்கு ஆகாது என்பதால் வேண்டிப் பேயுருவம் பெற்றதும் வரலாறு. சேக்கிழார் பெருமான் இப்பகுதியை மிக நயமுடன் அமைத்துள்ளார்.

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே
மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில்
ஊனடை வனப்பையெல்லாம் உதறி எற்புடம்பேயாகி
வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவமானார்.


இதன் நுண்பொருள் – இறையின்பத்தை நுகர்தற்கு இவ்வுடம்பு வேண்டப்படுவது அன்று, மற்றும் அவ்வுடம்பு அதற்குத் தடையாக நிற்கும்.

இறையின்பம் உடம்பு கொண்டே நுகரப்படுவது என்றும், இறைவன் சிறப்புடைய ஓர் ஆடவன் (புருடோத்தமன்) என்பதால் அவன் இன்பத்தை நுகரும் அடியார்களில் பெண்களே மிகவும் தகுதி உடையவர் என்பர் மாயோன் நெறியினர். சிவநெறியில் அக்கொள்கையில்லை. ஆடவர், பெண்டிர் என்பது உடற்கூறு பற்றியது, உயிரின் கண் இல்லை என்பதும், இறையின்பத்தை நுகரும் அடியார்களிடத்து ஆடவர் மகளிர் என்ற இருபாலாரும் ஒப்ப உயர்ந்தவர் என்பது சிவ நெறி. ஆகையினால்தான் நாயகன் நாயகி பாவம் சிவநெறியில் இல்லை. ஞானத்தை நாயகி பாவம் என்று கூறாது, சன்மார்க்கம் என்றே குறிக்கப் பட்டது.

இறைவனைப் பாடி பணிந்து ஏத்துவதையே திருவெம்பாவை முழுதும் காணலாம். பக்தி செய்வதே முழுநோக்கம் என்று கொள்ளப்படுகிறது. அதற்கு எந்தவித சட்ட திட்டங்களும் வரன் முறைகளும் கூறப்படவில்லை. ஆனால் திருப்பாவையில் நோன்பும் அதற்குண்டான வரன்முறைகளும் கூறப்பட்டுள்ளது. ‘நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி மையிட்டெழுதோம்,மலரிட்டு நாம் முடியோம்’ என்ற திருப்பாவைப் பதிவைக் காண்க.

தேவர்களுக்கு எடுக்கும் விழாக்கள் நிறைமதி நாளை ஒட்டி வருவன. சிவனுக்கு உரிய திருவாதிரை நாளோடு கூடிவருவது மார்கழி மாதத்தில் ஆகும். அரசனுக்குரிய விழா நாடு பூராவிற்கும் என்பதுபோல, முழுமுதல் தலைவனான சிவனுக்கு உரிய விழாத் திங்கள் மார்கழி ஆகையால், இம்மாதம் சிறந்ததாயிற்று. தேவர்கள் அனைவருக்கும் உரியதாயிற்று. தேவர்கள் அனைவரும் ஒன்றுகூடி திருவாதிரை விழாவைச் சிறக்கச் செய்வர் என்பதை கீழ்க்கண்ட சேந்தனார் திருப்பல்லாண்டு விளக்கும்

ஆரார் வந்தார் அமரர் குழாத்தில்
அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி
இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர்குழாங்கள்
திசையனைத்தும் நிறைந்து
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும்
பல்லாண்டு கூறுதுமே.

ஆகவே திருவெம்பாவையின் அடிப்படைக் கருத்து இளமகளிர் நீராடுதல். முதல் 10 பாடல்கள் மகளிர் ஒருவரை ஒருவர் எழுப்பிக் கொண்டு எல்லாருமாகச் சேர்ந்து இறைவன் புகழைப்பாடிக் கொண்டு நீராடச் செல்வதைக் குறிக்கும். 11ஆம் பாடல் முதல் 20ஆம் பாடல் வரை நீராடுதல் கூறப்படுகிறது.இனி பாடல்களின் விளக்கத்தைக் காண்போம்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எம்தோழி பரிசேலோர் எம்பாவாய் ………………………..1
.

ஒளி பொருந்திய நீண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும் முடிவும் இல்லாத அரும் பெருஞ்சோதியை யுடைய இறைவனை நாங்கள் பாடுவதைக் கேட்டும், உறங்குகின்ற னையோ? உன் காது ஓசை புகாத வலிய காதோ? மகாதேவனுடைய நெடிய சிலம்பணிந்த திருவடிகளை நாங்கள் புகழ்ந்து பாடிய வாழ்த்துப் பாடல்களின் ஒலி சென்று, தெருவின் கண் கேட்ட அளவிலேயே, எங்கள் தோழி ஒருத்தி பொருமி அழுது, உடம்பை மறந்து மலர் நிறைந்த படுக்கையின் மீதிருந்து புரண்டு விழுந்து இந் நிலத்தே, ஒன்றுக்கும் ஆகாதவள் போல மூர்ச்சித்துக் கிடந்தாள். இஃது அவள் தன்மை, என்ன வியப்பு!

இடையன்பு கொண்ட நாங்கள் கடை அன்பினை உடைய உன்னை எழுப்ப வந்தோம். ஆனால் எங்கள் பாட்டை கேட்டும் நீ உறங்கிக் கொண்டு இருக்கின்றாய். ஆனால் தலையன்பு கொண்ட ஒருத்தி பாட்டைக் கேட்டவுடன் பரவசம் அடைந்தாள். அவள் உலகியலுக்கும், சிவ அனுபவத்திற்கும் இடைப்பட்ட நம் போன்றோரின் செயல்களில் பங்கு கொள்ள மாட்டாள், ஆகையால் நீ எழுந்திரு என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை: ஆதி – தோற்றம், அந்தம் – இறுதி என்று பொருளில் வந்தது.உருவம் உடையன யாவும் உணரத் தக்கது.தோற்றமும் ஒடுக்கமும் உடையன. இறைவன் பேரொளிப் பிழம்பாக அன்றி, பொறிகளால் உணரப்படுபவன் இல்லை, என்பதால் இவ்வாறு கூறினார். ஆதி என்றால் தொடங்கும் இடமாகவும், அந்தம் என்றால் முடியும் இடம் என்றும் கொண்டால், இட எல்லைக்குள் அடங்காத நித்தியப்பொருள் என்று கூறலாம். பதிப்பொருள் ஆகிய இறைவனுக்கு தோற்றமோ அழிவோ இல்லை, அது நித்தியப் பொருள்.

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பதி
சோதி பரஞ்சுடர் தோன்றித் தோன்றாமையின்
நீதிய தாய்நிற்கும் நீடிய அப்பர
போதம் உணர்ந்தவர் புண்ணியத் தோரே . (10-8-21-2)

என்ற திருமூலர் வாக்கு இங்கே காணத்தக்கது.

{பதியாகிய பரம்பொருள் தோற்றமும் அழிவும் இல்லாதது. வியாபகமான பேரொளியாயும், அப்பொழுதே உயிர்க் குயிராய்க் கலந்து நிற்கும் நுண்ணிய விளக்காயும் உள்ளது. அஃது ஏனைப் பொருள்கள்போல எல்லார்க்கும் இனிது விளங்கித் தோன்றாது, ஒரு சிலர்க்கே விளங்கித் தோன்றுவதாய் நின்றே, கோட்டம் இன்றி, நடுவு நிலையதாயே உள்ளது. காலத்தைக் கடந்ததாகிய அந்தப் பரம் பொருளின் இயல்புகளை உணர்ந்தவர் தவம் செய்தவராவர்.}

இறைவனுடைய முழுமுதல் தன்மையும், அவன் ஒருவனே உயிர்களால் சரணாக அடையத் தக்கவன், வணங்கத் தக்கவன் என்பது இங்கே வலியுறுத்தப் படுகிறது.

அரும் பெரும் சோதி: எளிதில் அகப்படாமல், ஏதோ ஒரு நேரத்தில் காட்டி மறையும்படியாக உள்ள அரிய பொருள் என்பதால் அரிய பெரும் சோதி என்றார். சோதி ஐந்து வகைப்படும் என்றார் திருமூலர். அவை அண்ட சோதி, பிண்ட சோதி, மனச்சோதி, ஞானச்சோதி, சிவச்சோதி என்பனவாம். அண்டவொளி ஒவ்வொரு அண்டங்களிலும் உள்ள சூரிய சந்திரர்களுக்கும், விண்மீன்களுக்கும் உண்டான சோதி, பிண்ட சோதி உடம்போடு கூடி மலநாசம் விளைவிக்கத் தக்கது. மனச்சோதி, உயிரைச் சூரியன், சந்திரன், அனல், கலையாகிய நான்குமாக உணர்தல், ஞானச்சோதி, பரநாதத்தின் செயலாக வாக்குகள் உதயமாக இடமாய் இருப்பது. சிவச்சோதி, முன் சொல்லப்பட்ட 4 சோதிகளும் இருள்போல் அகல, எல்லா உயிர்களிடத்தும் விளங்குவதாகிய அகண்ட ஒளி.

அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
கொண்ட குறியைக் குலைத்தது தானே . (10-9-16-3)

என்று இப்பாடல், அண்ட ஒளி, பிதற்றும் பெருமையுடைய வெளியாகிய மனத்துள் விளங்கும் மன ஒளி, ஒளிக்குள் ஒளியாகிய ஞான ஒளி, அகண்ட ஒளி என ஐந்தையும் கூறுவதைக் காண்க. இவ்வாறு இறைவன் நால்வகை ஒளியிலும் சிறந்து பெரிய ஒளியாகிய சிவஞானமாகிய முதற்படியில் நிற்பவர்களுக்கும் அறிதற்கு அறிதாய் இருப்பதால்’அரும் பெரும் சோதி’ என்றார். திருவண்ணாமலையில் இயற்றப் பட்ட பதிகம் ஆகையால், திருமாலும், பிரமனும் அடியையும், முடியையும் தேடி அறிய முடியாத ஒளிப்பிழம்பாய் நின்றான் என்னும் தல புராண வரலாற்றையும் இது குறிக்கிறது. இதனால் இறைவனுடைய சொரூபநிலை உணர்த்தப்பட்டது.

[செஞ்சுட ரோன்முத லாகிய தேவர்கள்
மஞ்சுடை மேரு வலம்வரு காரணம்
எஞ்சுடர் ஈசன் இறைவன் இணையடி
தஞ்சுட ராக வணங்கு தவமே (10-7-22-1) 1975

(சூரியன் முதலாகக் காணப்படுகின்ற அனைத்து ஒளிப் பொருள்களின் ஒளியும் சிவனது ஒளியேயன்றி, அவற்றினுடையன அல்ல. அஃது எங்ஙனம் எனின்,) சூரியன் நாள்தோறும் மகாமேரு மலையை வலம் வருதல் தெளிவு. ஏனைத் தேவர்கள் அவ்வாறு வலம் வருதலைப் பலர் அறியாராயினும் யோகியரும், ஞானியரும் அதனை நன்கறிவர். `அவர் வலம்வருதல் எதன்பொருட்டு` எனின், எங்கட்கு விளக்காகி நின்று பயன் தருகின்ற சிவனாகிய கடவுளின் திருவடி ஒளிகள் தங்களிடத்துப் பொருந்தி விளங்குதற் பொருட்டேயாம். வேண்டிய வேண்டியாங்கு எய்துதல் தவத்தால் ஆகலின் அவர் அதனைச் செய்கின்றனர்.

நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்
கன்றிய நந்தி கருத்துள் இருந்தனன்
கொன்று மலங்கள் குழல்வழி ஓடிட
வென்று விளங்கும் விரிசுடர் காணுமே . (10-7-23-1) 1985

உயிர்கள் உடம்போடு கூடிநிற்றல், இருத்தல், கிடத்தல், நடத்தல் முதலிய எத்தொழிலைச் செய்யினும் அவ் வுயிர்களில் அழுந்தப் பொருந்தியுள்ள சிவன் அவற்றின் உடம்பில் உள்ள ஆதாரங்களில் நீக்கமின்றி நிற்கின்றான். பிராணவாயு இடநாடி வல நாடிகளை ஒழித்து நடுநாடி வழியாக ஓடினால் அஃது ஆதித்தனைப் போல ஒளியுடையதாய்க் காணப்படும். அந்த ஒளியில் சிவன் மும்மலங்களை ஒழித்து, உயிர்களின் தற்போதத்தையும் அடக்கி, அவற்றின் அறிவுக்கறிவாய் விளங்குவான்.

ஆகும் கலையோ(டு) அருக்கன் அனல்மதி
ஆகும் கலைஇடை; நான்கென லாம்என்பர்;
ஆகும் அருக்கன் அனல்மதி யோடொன்ற
ஆகும்அப் பூரணை யாம்என் றறியுமே . (10-7-24-3) 1990

யோக முறையில், சூரியன், அக்கினி, சந்திரன்` எனச் சொல்லப்படுகின்ற கலைகளோடு, அக்கினி செல்லும் வழியாகிய நடு நாடியும் `கலை` என்று சொல்லப்படும். ஆகவே, கலைகளாவன நான்காம். அவற்றுள் சூரிய கலை, நடு நாடி வழியாக மேற்செல்கின்ற அக்கினியோடு சேர்ந்து சந்திர மண்டலத்தை அடையின் அந்நிலையே யோகியர்க்கு, மேல், `உவா` எனக்குறித்த பூரணையாகும் என்று அறிமின்கள்.]

ஆதித்தன், அங்கி (நெருப்பு) முதலிய புறச்சோதிகள் புற இருளைப் போக்குமேயன்றி, உயிரைப்பற்றி நிற்கும் ஆணவ மலமாகிய அக இருளைப் போக்காது. ஆகவே அக புற இருள் இரண்டையும் ஒருசேரப் போக்கும் சோதி என்பதால் அரும் பெரும் சோதியாயிற்று.

யாம்பாட: ஒரு தலைமை தோன்ற நின்றது. உன்னைவிட மூத்தவர்களாய், தானே விழித்தெழும் பரிபாகமுற்ற நாங்கள் பாட என்பது.

உள்ளம் குளிர்ந்தால் உகப்பு வரும். அப்போது பாடத் தோன்றும். இந்தக் குளிர்ச்சியும், உவகையும் தோன்றக் காரணமாயிருந்தது ‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி’. அந்தச் சோதியின் அருளை இப்பெண்கள் இப்போது பெற்றார்கள். அவன் அருளாலே அவன் தாள் வணங்குவது போல அந்தச் சோதியின் அருள் இப்போதுதான் அவர்களுக்குக் கிடைத்தது. இறைவனை உண்மைத் தன்மையால் முழுதும் உணர்ந்து பாடும் ஆற்றல் எமக்கு இல்லை. ஆகையால் ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் சோதியாக இறைவனைக் கண்டு பாடுகிறோம் என்றார்கள்.

கேட்டேயும்: கேட்டும், கேட்டவுடன், பிறர் வந்து எழுப்பும் நிலையில் இருந்து விட்டோமே, உறக்கத்தில் ஆழ்ந்து விட்டோமே என்று ஒரு பரபரப்பைக் காட்டாமல் இருக்கின்றாயே. உள்ள உவகையுடன் பாடும் எங்கள் பாடலைக் கேட்ட பிறகு கூட உன் உள்ளத்தில் மலர வேண்டிய குளிர்ச்சியும், உவகையும் தோன்றவில்லையா என்று கேட்கிறார்கள்.

வாள்தடம் கண்: வாள் – ஒளி, தடங்கண் - அகன்ற கண்கள், ஒளியும் அகற்சியும் கண்களுக்கு உரிய நல்லிணக்கங்களாகும். உறக்கத்தில் உள்ள ஒரு பெண்ணின் கண்களைப் பார்த்து, ஒளி பொருந்திய அகண்ட கண்கள் என்று சொல்வது பொருத்தமாகாது. அவளுடைய கண்ணுக்குள்ள இயல்பான இந்த இறண்டு சிறப்புகளையும் அவளுக்கு நினைவூட்டி, அவள் கண்களைத் திறந்து தன் வாள்போன்ற கூர்மையையும், ஒளி பொருந்திய தன்மையையும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். ( அ.ச.ஞா – திருவாசக்ச் சிந்தனைகள் 2)

“வாள்தடங் கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்க” (தி.பொற்சுண்ணம் -8)

என்று அடிகளார் பொற்சுண்ணத்தில் பாடியது காண்க.

மாதே வளருதியோ: கண்ணையும் உடன் சேர்த்து கண் வளர்தல் அல்லது உறங்குதல் என்று பொருள். உயர்ந்தோர் உறங்குதலை கண் வளர்தல் என்பது வழக்கு. இங்கு எழாதவளை எள்ளி நகையாடுகின்றார்கள். உரத்த குரலில் பாடும் எங்கள் பாடலைக் கேட்டும் உன் உறக்கம் கலைய வில்லையா? உன் கண்கள் நன்கு அமைந்திருப்பது உறங்கிக் கிடப்பதற்காகவோ? என்பதுபோல் கேட்கின்றனர்.

வன்செவி: குறிப்பு மொழி. வன்மை – ஒசை கேட்க இயலாமை, கண்களை இகழ்ந்த பெண்கள் இப்போது நாங்கள் பாடும் பாடல் ஓசையை உன் செவிகள் கேளாது ஒழிந்தனவோ? என்று ‘வன்செவியோ நின் செவிதான்’ என்று செவிகளையும் இகழ்கிறார்கள்.

இதுவரை உறங்கும் அப்பெண்ணை நோக்கிக் கூறியன. இனி வருவது உன் நிலை இது என்றால் வேறு ஒருத்தியின் நிலையைச் சொல்லுகிறோம் கேள் என்று கூறுகிறார்கள். இதையும் அவள் கேட்டு எழுந்து வருவாள் என்ற கருத்தில் குறியதே ஆகும்.

மாதேவன் வார் கழல்கள்: மகாதேவன் என்பதன் திரிபு. பெரிய பெருமான். மிகப் புகழாலும், அருள் தன்மையாலும் நீண்டன என்று மாதேவன் வார்கழல்கள் என்றார். கழல் திருவடியை உணர்த்திற்று.

வாழ்த்திய வாழ்த்தொலி போய் வீதிவாய் கேட்டலுமே: சிவபெருமானுடைய திருவடிகளை வாழ்த்திக் கொண்டே வந்தோம். அவ்வொலி இத்தெருவிலுள்ள வீடுகளுக்கெல்லாம் பரவியது.

விம்மிவிம்மி மெய்ம்மறந்து: தேம்பித் தேம்பி அழுது மெய் மறந்து

போதார் அமளியின்மேல்: போது – மலரும் பருவத்தில் உள்ள மலர், ஆர் – நிறைவு, அமளி –படுக்கை, மலர்களால் நிரப்பப் பட்ட படுக்கையில், பூப்பொன்ற மென்மையான படுக்கை என்றும் கூறலாம்.

“……போதார் சடைதாழப் பூதஞ் சூழப்
புலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே “(6-2-6) என்ற நாவரசின் வாக்கு காண்க.

நின்றும் புரண்டு இங்கண் கிடந்தாள்: அன்பு மிகுதியால், கேட்டவுடன் தேம்பி அழுது, ஆனந்தக் கண்ணீர் சொரிந்து, புரண்டு விழுந்து, மெய்மறந்து கிடக்கின்றாள். உருகுகின்ற வரையில் அவளது உள்ளம் அவள் வசம். அதற்குமேல் அவள் மெய்மறந்தாள், புரண்டதும், விழுந்ததும் அவள் அறியவில்லை. இங்கண்: இப்பொழுதைக்கு,

ஏதேனும் ஆகாள்: வேறு எச்செயலும் செய்யாமல், உலகியலில் இருந்து முற்றும் விடுபட்டதுபோல (சிவத்தைச் சார்ந்து). சிறிதும் உதவாள், ஆகாளாய்க் கிடந்தாள்.

என்னே, என்னே, ஈதே எம் தோழி பரிசு: நம் தொழி உறக்கத்தால் எழாது இருக்கும் இயல்ப்டையவள் அல்ல. நமது பாடலைக் கேட்டு, உருகி இறையனுபவத்தில் ஆழ்ந்து படுக்கையிலேயே மெய்மறந்து கிடக்கின்றாள், சமாதி நிலையை அடைந்து விட்டாளோ? உடம்பு அநிச்சைச் செயலாக அமளியின்மேல் இங்கும் அங்குமாக புரள்கிறது. இவளது அன்பின் பெருமை எத்தகையது! இறைவன் பாடலுக்கு உருகும் இடம் படுக்கை அல்ல என்பதனால், அதை இவ்வாறு சிறப்பித்துக் கூறப்பட்டது.

என்னே – வியப்படையும் செயல், பரிசு - தன்மை

எம்பாவாய்: பாவை நோன்பிற்குத் தெய்வமாகிய பார்வதியைக் குறிக்கும். எம்பாவாய் என்று அழைத்ததால், எங்களுக்கும் இவள் போன்ற பத்தி திறத்தை அருள்வாயாக என இணைத்துப் பொருள் கொள்ளலாம். ஏல், ஓர் என்பன அசைச் சொற்கள்.

இத்திருப்பாட்டில்,

படுக்கை – புலன் நுகர்ச்சியாகிய உலக இன்பம்
வாழ்த்தொலி – மந்திரமாகிய ஐந்தெழுத்து, உபதேச மொழி,
விம்மியது – ஆனந்தாஅதிசயமாகிய உவகை, மெய்ப்பாடு,
மெய்மறத்தல் – ஆனந்தாதீதமாகிய அநுபவம்
கிடத்தல் – அவ்வநுபவத்தில் அழுந்திச் செயலற்ற நிலை

என்பவை குறிப்பால் உணர்த்தப் பட்டன.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்…………2

மேலான ஒளியுடைய இறைவனிடம் நான் அன்புடையேன் என்று கூறுவாய், ஆனால் இப்போது பூக்கள் நிறைந்த படுக்கையின்மேல் அன்பு வைத்தாயோ? என்று கேட்க, அதற்கு அவள் மறுமொழியாக, ‘ நீங்கள் இவ்வாறு இகழும் சொற்களை சொல்லலாமோ, இது விளையாட்டாக பழிச் சொல் சொல்லும் காலமா என்று கூறுகிறாள். தில்லைச் சிற்றம்பலத்தில் உள்ள இறைவனுக்கு நாம் அன்புள்ளவர்கள் என்று எல்லாரும் இயம்புகின்றனர்.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய்: இரவும் பகலும் உன் பற்று பாசம் எல்லாம் பரஞ்சோதிக்கே என்பாய். பாசம் – பக்தி, பரஞ்சோதி – எல்லாப் பொருள்களுக்கும் அப்பாற்பட்ட சோதி,

இராப்பகல்நாம் பேசும்போ தெப்போது: இரவும், பகலும் நாம் பேசும்போதெல்லாம், என் பாசம் எல்லாம் பரஞ்சோதிக்கே என்பாய். போது – அலரும் பருவத்தில் உள்ள அரும்பு, அது அலர்வதைக் கண்டு மக்கள் பொழுதை அறிந்தமையால், பொழுது ‘போது’ என்று உரைக்கப் பட்டது, என்பது அருள் அம்பலவனார் விளக்கம்.

இப்போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய்: ஆனால் நாம் இப்போது இருப்பது வைகறைப் பொழுது. இரவும் இல்லை, பகலும் இல்லை. ஆகையால் உன் மலர் போன்ற மெதுவான படுக்கை மேல் அன்பு வைத்தனையோ! ஆரமளி – அரிய படுக்கை, ஆர் அமளி – பூக்கள் நிறைந்த படுக்கை,

நேரிழையீர்: ஒத்த இழை உடையவர்களே, நேரிழை - பெண்

விடியல் நேரத்தில் அயர்ந்து உறங்குகின்றபோது அணிந்திருந்த அணிகலன்கள் கண்ணில் பட நேரிழையாய் என்றார்கள். மணமான பெண்கள் தங்கள் மங்கலநாணையும், கழுத்தில் அணிகளையும் மற்றவர் காணாது அணிவார்கள். மணமாகாத கன்னியர் மேலாடைமேல் அணிவர். அவள் அணிகலன்கள் மேலாடையின் மேல் அணிந்திருந்ததால், அவள் மணமாகாத பெண் என்பதால் நேரிழையாய் எனறு அழைத்தனர்.

சீசி யிவையுஞ் சிலவோ: இகழ்ச்சிக் குறிப்பு, இவையும் சிலவோ – இப்படிப் பேசுகின்ற இவையும் சில உன்னிடத்து உள்ளனவோ? ஒழுக்கமுடையார்க்கு தீயவை மறந்தும் வராததுபோல நகையாடல் முதலிய இவைகள் சிவ நெறி பூண்ட செம்மனச் செல்வர்களிடம் தோன்றாது என்றாள்.

விளயாடி ஏசும் இடம் ஈதோ: காலத்தின் பெருமை உணர்ந்து, நல்ல வைகறைப்பொழுதான இந்த நேரத்தில் நகைஉரையும், விளையாட்டு உரையும் ஏசுரையும் பேசுவதா, கூடாது என்பாள்.

விண்ணோர்கள் ஏத்துதற்குக்கு கூசும் பாதம்: கூசும் – நாணுதல். விண்ணோர்கள் தாம் செய்த பசு புண்ணிய விசேடத்தால் வினை தீரும் வரையில் இப்போக பூமியில் பிறந்து பதவியில் உள்ளவர்கள். அவர்களுக்கு பதவியாகிய மலம் இருப்பதால் தம்மை அனைவரும் வணங்க வேண்டும் என்ற முனைப்பில், இறைவன் திருவடியை வணங்க நாணுகிறார்களாம். ஆகையால் இவ்வாறு கூறினார். ‘தேவர்களும் காணா மலரடிகள்’ என்ற பொன்னூசல் (2) வரிகளை ஒப்பிடலாம்.

மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும்: பாதம் தந்தருளல் – திருவடி தீக்கை, வருதல் ஓர் அருட்செயல். வந்து திருவடி தீக்கை அருள்வது மற்றொரு அருட்செயல். ஆகையால் ‘தந்தருள வந்தருளும்’ என்றார்.

தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க்கு: தேசன் – ஒளி உருவினன், ஒளிவடிவாய் எங்கும் பரந்து இருந்தாலும், எங்களுக்கெல்லாம் ‘எளி வந்த பிரானாக’ தில்லைச் சிற்றம்பலத்துள் விளங்கும் ஈசன் அவன் என்றார்கள்.
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்: இறைவன் திருவடியின்கண் நாம் வைத்த அன்பு எத்துணை உயர்ந்தது. அன்பு வைத்த நாம் எவ்வளவு பேறு பெற்றவர்கள். இப்படியிருக்க, நாம் ஒருவரை ஒருவர் எள்ளி நகையாடலாமா, கூடாது என்பதாக நயம்பட பொருள் கொள்வர் சில பெருமக்கள்.

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்து எதிரெழுந்து என்
அத்தன் ஆனந்தன் அமுதன்என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டால் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். ……………3

இத்திருப்பாட்டில் அடியவராய் நேரிழையாரின் புன்மையைப் போக்கி, அவர்களை ஆட்கொள்ளும் சிறப்பினைக் கூற வருகிறார் அடிகளார்.

1. முத்துப்போன்ற வெண்மையான பற்களை உடையவளே, என் தந்தையாகிய இறைவன் இன்ப வடிவினன், அழிவற்றவன், அமுதம்போல் இனியவன் என்றெல்லாம் பேசுவாய். ஆகையால் இப்போது வந்து கதவைத் திற என்கிறார்கள்.

2. அதற்கு அவள், இறைவனிடம் பேரன்பு கொண்ட பழைய அடியவர்கள் நீங்கள், என்னைப் போன்ற புதிய அடியார் செய்யும் குற்றத்தைப் பொருத்து ஏற்றுக் கொள்ளக்கூடாதா என்கிறாள்.

3. உன் அன்பைப் பற்றியும், மனத் தூய்மை பற்றியும் எங்களுக்குத் தெரியும். தூய மனத்துடையவர்கள் இறைவனைப் புகழ்ந்து பாடமாட்டார்களா? உன்னை எழுப்ப வந்த எங்களுக்கு இத்தனையும் வேண்டியதுதான் என்று தம்மைத் தாமே நொந்துக்கொண்டது.

முத்தன்ன வெண்ணகையாய்: நகை – பல், தொழிலாகு பெயர், முத்துப் போன்ற வெள்ளிய பல், முத்து நிறத்தாலும், ஒளியாலும், தூய்மையாலும், தண்மைக் குணத்தாலும், பல்லுக்கு ஒப்பாயிற்று. எதனையும், உறுதிபடச் சொல்லாமல், சொல்லளவில் இனிமையாக சிரித்துக்கொண்டே கூறுகின்றவளே, பாண்டி நாட்டைச் சேர்ந்த மணிவாசகருக்கு, தம் நாட்டின் கொற்கை முத்து பெரும் சிறப்புடையது என்ற எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். ஆகையால் முத்தை உவமையாக்கி பாடலை அருளுகிறார்.

முன்வந் தெதிரெழுந்து: முன் எழுந்து எதிர் வந்து என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும், இது யாரும் எழுப்பாமல் தனே எழுந்து வந்ததைக் குறித்தது. முன்பெல்லாம் (சென்ற ஆண்டின் திருவாதிரை நாட்களில்) நாங்கள் எழுவதற்கு முன்பே எழுந்து, தன்னை தூய்மை செய்துக் கொண்டு, நீறணிந்து, இறைவன் புகழைப் பாடிக்கொண்டு எங்கள் எதிரிலே வருபவள் இவள் என்கிறார்கள் துயிலெழுப்ப வந்த மகளிர்.

என் அத்தன் ஆனந்தன் அமுதன்என் றள்ளூறி: அத்தன் – தந்தை, தமக்குரிய சிறப்பு உரிமை தோன்ற என் அத்தன் என்றார். தந்தை பிறவிக்குக் காரணமாக இருந்து, வளர்ச்சிக்கு, எல்லா உதவிகளையும் தன் கடமையாகச் செய்பவன். இறைவனும் பிறவிக்கு நிமித்த காரணன். மல நீக்கம் செய்து உயிர்களின் வளர்ச்சிக்கு காரணமாயிருப்பவன் என்பதால் என் அத்தன் என்றார். ‘என்’ அத்தனுக்கும், ஆனந்தனுக்கும் உரிய சொல். “என்னத்தன் என்னையும் ஆட்கொண்டான்” என்று பின்னால் வரும் பொன்னூசல் வரிகளை காண்க. பெண்களுக்கு, திருமணத்திற்கு முன் தந்தையும், பின்னர் கணவனும், முதுமை அடையும் நேரத்தில் இறைவனும் உறுதுணையாக இருப்பர். இங்கே இறைவன் என் இளமைக் காலத்திலும் எனக்குத் துணையாக உள்ளான் என்பதாக என் அத்தன் என்றார். இறைவனை தலைவனாக எண்ணி நாயகி பாவ நிலையிலும் இதைச் சொல்வதாகக் கொள்ளலாம். கீழ்க்கண்ட நாவுக்கரசர் பாடலைக் காண்க.

“………………………………………………………..
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்
தன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” (6-25-7)

ஆனந்தன் – இறைவன் இன்ப வடிவினன், ஆகையால் மகிழ்ச்சியைத் தருகிறான். மேற்சொன்ன நாயகி பாவத்தை ஒட்டி வருவது. எல்லா உயிர்களும் பெண்களாக தான் ஒருவனே தலைவனாக இருந்து இன்பம் அளிப்பவன் ஆதலால் இவ்வாறு கூறினார்.

அமுதன்: சாவாமையை அளிக்கும் அமுதம்போல் உயிருக்கு பேரின்பம் அருளுவானாய் உள்ளான்,
அள்ளூறி: வாய் ஊறி, நாவில் எச்சில் ஊறுதல், இங்கு மனதால் நினைக்கும் போதே இன்பமளிக்கும் பெருமானை புகழ்ந்து பேசும் வாயில் ஊறும் உமிழ் நீரைக் குறித்தது.
தித்திக்கப் பேசுவாய்: தந்தையாய், பேரானந்தத்தைக் கொடுப்பவனாய், சாவா மருந்தாகிய அமுதத்தை அளிப்பவனாய் உள்ள இறைவனை அனுபவித்து, அனுபவித்து வாய் தித்திக்கத் தித்திக்கப் பேசுவர் அக்கன்னிப் பெண்கள். சிவ நினைவால் உள்ளம் உருகி இனிமை பெருகுதல்.

வந்துன் கடைதிறவாய்: கடை – வாயில், இவ்வாறான பெண்களே, நீங்கள் வந்து உங்கள் தலை வாசலைக் கொஞ்சம் திறவுங்கள் என்று வீதியில் நிற்கும் பெண்கள் கேட்கிறார்கள்.

பத்துடையீர் ஈசன் பழவடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ: ஈசன் பத்துடையீர், ஈசன் பழ அடியீர், ஈசன் பாங்குடையீர் என்று இணைத்துப் பொருள் கொள்ள வேண்டும். பெருமானின் அடியவர் இலக்கணம் பத்தும் உடையவர்களே ஈசன்பால் அன்பு கொண்ட பழைய அன்பர்களே, பாங்கு – தோழமை, எல்லாம் நிரம்பிய தன்மை, நீங்கள் எல்லாம் நிரம்ப அடியார்கள், பாங்குடையீர் – சீவ குணம் நீங்கி சிவகுணம் கொண்டவர்களே, புத்தடியோம் – புதிய அடியவர்கள், புதிய அடியவர்களுக்கு, இறைவனுக்கு எது மகிழ்ச்சியைக் கொடுக்கும், எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. புன்மை - கீழ்மை, குற்றம், எங்களைத் திருத்தி இறைவன் அருளை பெறுவது எவ்வாறு என்று பழக்குதல் உங்கள் கடமையன்றோ.

அடியார்களுக்கு உரிய இலக்கணம் பத்து. இவற்றை புற இலக்கணம் பத்து, அக இலக்கணம் பத்து என்று உபதேச காண்டம் கூறும்.

புற இலக்கணங்கள்:

திருநீறும் கண்டிகையும் அணிதல்,
பெரியோரை வணங்கல்
சிவனைப் புகழ்ந்து பாடல்
சிவநாமங்களை உச்சரித்தல்
சிவ பூஜை செய்தல்,
சிவ புண்ணியங்களைச் செய்தல்,
சிவபுராணங்களைக் கேட்டல்,
சிவாலய வழிபாடு செய்தல்,
சிவனடியாரிடத்து உண்டல்
சிவனடியார்களுக்கு வேண்டுவன கொடுத்தல்

அக இலக்கணங்கள்:

பெருமான் புகழைக் கேட்கும்கால் மிடறு விம்மல்
நாத்தழுதழுத்தல்
இதழ் துடித்தல்
உடல் குலுங்கல்,
மெய் சிலிர்த்தல்,
வியர்த்தல்,
சொல்லெழாமை,
கண்ணீர் அரும்புதல்
வாய்விட்டழுதல், மெய்மறத்தல், ஆகியன

“வித்தாம் முளையாகும் வேரே தானாம்
வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற
பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம்
…………” (6-15-2)

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி றுந்நெரிந் துக்கன
பத்துக்கொ லாமவர் காயப்பட் டான்றலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே. (4-18-10)

என்ற நாவுக்கரசர் அருளிய பாடல்களைக் காண்க.

எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்:

‘நின் அன்புடைமை எத்தோ’ என்று மாற்றிக் கொள்ள வேண்டும். தன்னை புத்தடியோம் என்று கூறிக்கொண்டதில் இருந்த உள் உணர்ச்சியான நகையாடுதலைக் கண்டு எழுப்ப வந்தவர்கள், உன் அன்பை நாங்கள் அறிய மாட்டோமோ?மனத்தூய்மை உடையவர்கள் சிவனைப் பாடத்தானே செய்வார்கள்? உன் பத்தி திறத்தை அறிந்திருந்தும், மறந்த எமக்கு இவ்வாறு பழித்துக் கூறியது எங்களுக்கு கிடைக்க வேண்டியனவே ஆகும்.

சித்தத்திற்கு அழகு தூய்மை. ஆகையால் அப்பெண்களை சித்தம் அழகியார் என்றார். மனத்தூய்மை வாய்மையால் காணப்படும்.

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். …………………….4



ஒண்ணித்தில நகையாய் உனக்கு இன்னும் விடியவில்லையோ? எனக் கேட்க
வண்ணக்கிளி மொழியுடைய பெண்கள் எல்லோரும் வந்து விட்டனரா?
எல்லோரும் வந்தவுடன் எண்ணிச் சொல்வோம். ஆனால் அதுவரை நாங்கள் இறைவனைப் புகழ்ந்து பாட முடியாமல் போய்விடும். ஆகவே இறைவன் புகழைப்பாடும் நேரத்தை வீணாக்காமல், நீயே வந்து எண்ணிப் பார்த்துவிட்டு, குறைவார்களே ஆனால் நீ மறுபடியும் தூங்கப்போ என்று சொன்னர்கள்.

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ: ஒள் – அழகு, ஒளி, மேன்மை, நித்திலம் – முத்து, மலர்ந்த முகத்துடன் அரைத்தூக்கத்தில் அசதியால் எழுந்திருக்க முடியாமல் கிடந்தாள். அவளை நோக்கி இன்னும் பொழுது புலரவில்லையா? என்றார். அயர்ந்த உறக்கத்தில் இருக்கும்போது முக மலர்ச்சியும் பல் அழகும் வெளிப்படாது. அவ்வாறு வெளிப்பட்டிருந்தால் விகாரமாகத் தோன்றியிருக்கும். ஆகையால் அவள் அரைத் தூக்கத்தில் இருக்கிறாள் என்பதை உணர்த்திற்று.

வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எல்லோரும் வந்து விட்டனர் , நான் மட்டும்தான் இன்னும் எழவில்லை என்பதுபோல் இருக்கின்றதே என்ற தொனியில், வண்ணம், மேனியின் பொலிவையும், கிளி மொழி, மொழியின் இனிமையையும் தோன்றுமாறு தன் தோழிகளை குறிப்பிட்டாள். எல்லாரும் வரும் வரை தான் கண்மூடிக் கிடக்கலாம் என்ற எண்ணம் வெளிப்பட்டது.

எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே: நாங்கள் வைகறையில் துயில் உணர்ந்து, பெருமானின் புகழை நினைந்தும் பாடியும் வருகின்றோம், ஆகையால் வந்துள்ளோரை எண்ணிக் கணக்கிட்டுச் சொல்லுகிறோம். ஆனால் அதுவரை நீ தூங்கி காலத்தை கழிக்காதே.
அவமே -பயன்படாமல், கொண்டு என்பது கொடு என்று மருவிற்று, உள்ளவாறு என்பது கடைக் குறைந்து நின்றது, சொல்லுகோம் – ஆக்கம் ,
வருவித்து சொல்லிக்கொண்டிருக்க என்று பொருள் பட்டது, அவ்வளவும் – அத்துணைக் காலமும்,

விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்: விண் – இட ஆகு பெயராக தேவர்களை உணர்த்தியது. ஒரு மருந்து – ஒப்பற்ற அமுதம், தேவர்களுக்கு கிடைத்த அமுதத்திலிருந்து இது வேறுபட்டது, இது ஆயுளை நீட்டிக்கச் செய்து சாவின்மை அளிப்பதல்லாமல், நிலையான பேரின்பத்தை தர வல்லது. பிறவி நோய் தீர்ப்பவனாகிய இறைவன் மருந்தெனப்பட்டான். “மருந்தவை மந்திரம் மறுமை நன் நெறியவை” என்ற திருநெல்வேலி பதிகத்தை பார்க்க. வேதத்தில் சிவபெருமானே முழுமுதல் பொருளாக விளங்குகிறார். ஆகையால் வேத விழுப்பொருள் என்றார். ஞானத்தை துணையாகக் கொண்டு இறைவனை உணர முற்படும் பாச ஞானிகளுக்கு, வேத விழுப்பொருளாக காட்சி அளித்து, தேவதேவன் என்ற சிறப்பு வகையால் உணரும் பொருள் ஆவான் இறைவன் என்பதை ‘ வேத விழுப்பொருள்’ என்றார். கண்ணுக்கு இனியானை – கண்களுக்கு அழகனாக இருந்து இனிமை தருபவன். ஐம்பொறிகளுள் ஒன்றாகிய கண் அழகிய காட்சியைக் கண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அதற்கும் ஒரு நிறைவு வழங்க இறைவன் பேரழகனாக கல்யாண சுந்தரனாக, சோமசுந்தரனாக காட்சி அளிக்கிறார். கருவியாகிய கண் தான் கண்ட காட்சியின்பத்தை பின் அறிவாய் உயிர்களுக்கு ஊட்டுகிறது. ஆகவே இறைவன் அகக் கண்ணாகிய ஞானத்திற்கும் இனியவனாக காட்சி அருளுகிறான். பதிஞானம் கைவரப்பெற்று, பரிபாகமுற்ற ஆன்மா உணரும் என்பதை காட்டி,’கண்ணுக்கினியானை’என்றார். இந்த மூன்று புகழுரைகளால், பெத்தான்மாவிற்கு, காமியப் பொருளாகவும், (காமியம் – இச்சைப் பொருள், விரும்பி செய்யும் பூசை) பாச ஞானியருக்கு நூலறிவாகவும், சிவஞானியருக்கு அநுபவப் பொருளாகவும் விளங்கும் இறை இயல்புகளைக் கூறினார். கசிந்து – கண்ணீர் சிந்தி,

(உள்ளம்) உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்து

எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்: (உள்ளம் உள் நின்று நெக்குருக கசிந்து என்று மாற்றிப் பொருள் காணலாம். நாங்கள் இறைவனைப் பாடி பரவசமுற்று இருப்பதால் எண்ணிச் சொல்லக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை, நீயே வந்து கணக்கிடு, குறைந்தால் மறுபடியும் உறங்கச் செல் என்று அவளுக்கு துயிலில் உள்ள ஆர்வத்தைச் சுட்டிக் காட்டி இகழுரையாகக் குறினார்கள், துயில் எழுப்ப வந்த மகளிர். குறையில் என்றது வழக்கமாக வருபவர்கள் வராது இருந்தார்களே ஆனால், ‘பாடிக் கசிந்துருக’ என்றதும் நீ அதற்கு ஆகமாட்டாய் என்று இகழுரையாக வந்தது.

எல்லோரும் வந்து விட்டார்களா என்று கேட்டு உறக்கத்தில் ஆழ்கின்ற சகல ஆன்மாவின் பெத்த நிலையும், பாடி உள்ளம் உருகுவதால் யாம் செயலற்று விட்டோம் என்ற சிவஞானியர் மனத் திண்மையும், சிவஞானியர் பாச பசு ஞானமுடையாரை கடிந்துரைத்து திருத்தும் கருணையும் உணர்த்தப் பட்டது.

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். …………………..5.

இப்பாட்டிலிருந்து நான்கு பாடல்களில் உறங்குபவளின் பேச்சுக்கள் இல்லை. ஒவ்வொரு இல்லமாகச் சென்று உறங்குபவர்களை எழுப்பியதால் பொழுது நன்றாக விடிந்து விட்டது. ஆகவே மற்ற எல்லோரும் அழைத்தவுடனே வந்துவிட்டனர் என்ற குறிப்பு உணர்த்தப் படுகிறது.

மாலறியா நான்முகனும் காணா மலையினை: திருமால் பிரம்மனிலும் பெரியவனாக பரிபாகமுற்றவன் ஆனாலும், அவன் இறைவனை முற்றும் அறிய முயன்று இயலவில்லை. ஆகையால் ‘மால் அறியா மலையினை’ என்றார். திருமாலின் ஆன்மாவை தன் அட்டமூர்த்தங்களுள் ஒன்றாகக் கொண்டிருந்தும் அவனால் அறியப் பெறாதவன் என்றார். “தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரனை” (1-62-6) என்பது ஞான சம்பந்தர் வாக்கு. எண் கண்ணுடைய நான்முகனும் திருவடியைக் காண முயற்சித்து இயலவில்லை என்று ‘நான்முகனும் அறியா மலையினை’ என்றார்.

இங்கு இறைவன் பெரு மலையாகக் காட்சி தருகிறான். ஆனால் செந்தாமரைக் கண்ணனான திருமாலும், எட்டு கண்களை உடைய பிரமனும் காண முடியவில்லை என்றொரு நயத்துடன் கூறுகிறார்.

மால் என்றால் மயக்கம் என்றும் பொருள் உண்டு. மயங்கிய திருமாலும், ஒருமுகப்படாத பிரம்மனும் கண்டறியாத மலை அவன் என்பது ஒரு நயம். இரவிலே மலையைக் காண முடியாது. ஆனால் இம்மலை பேரொளி வீசும் பிழம்பாக நிற்கின்றது. ஆனாலும் இவர்கள் இருவராலும் அவனைக் காண முடியவில்லை என்பது மற்றொரு நயம். இங்கு குறிப்பிடப்படும் மலை திரு அண்ணாமலையாகும்.

விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும்
அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல்……. (1-10-9)

என்ற ஞானசம்பந்தர் வாக்கும் இங்கே காணத்தக்கது.

நாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்: திருமால், பிரமன் இவர்களால் காணமுடியாத மலை உருவத்து இறைவனைக் காணமுடியாத நிலையில், நாம் அறிவோம் என்று பொய் பேசும், பொக்கங்கள் – உலகில் உள்ள பொய்கள் எல்லாம், முன்னொரு காலத்தில் இங்கு நான்முகன் இறைவன் திருமுடியைக் காணாது கண்டேன் என்று சொன்னான். அதன்பின் எவரும் பொய் சொல்லவில்லை. இன்று இறைவனை அறியாத நீயும் ‘அறிவோம்’ என்று சொல்கிறாய்.

“குறைவிலா அளவி னானுங் கூறொணா தாகி நின்ற
இறைவனார் கமல பாதம் இன்றியான் இயம்பும் ஆசை” (சித்தியார் 16-4)

என்ற சித்தியார் பாடலைக் காண்க.

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்: ‘ஊறு பால் தேன்போல்வாய் படிறீ” என்று மாற்றிப் பொருள் கொள்ளவும், படிறீ – பொய்மை உடையவளே, விளிப்பு, நஞ்சு குளிந்து நின்று வெம்மையைக் கொடுப்பது போல, பொய் கேட்க இனிதாய் தேனும் பாலும் கலந்தாற்போல் இனிக்கும் என்றாள். அவள் வாயில் பாலும் தேனும் ஊறுவதுபோலப் பொய்யும் மெய்போலப் பேசப்படும் என்றனர். துயிலில் இருப்பவள் எப்போதும் சொற்சாலம் செய்பவள் என்பதை அனைவரும் அவள் அறியக் கூறுவர், அதுபற்றி அவள் சினந்துக் கொண்டதில்லை என்பது இவ்விடத்தில் குறிப்பு. கடை திறவாய் – வாயிற்கதவை திறப்பாயாக, இன்னும் திறக்காமல் இருக்கின்றாய்.

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்: ஞாலமே..பிறவே என்று மூன்று ஏகாரங்களும் எண்ணுப் பொருள்.

ஞாலம் – இப்பூவுலகம், இருவினை நுகர்ச்சிக்கு உண்டான கன்ம பூமி, இம்மண்ணுலகில் உள்ளோர் குருவருள் பெற்று, பரிபாகம் அடைபவர்களாக உள்ள ஆன்மாக்கள்,

விண் - பசு புண்ணியப் பயன்களை நுகர்வதற்கான போக பூமி. பூவுலகுக்கு மேலும், கயிலையின் கீழும் உள்ள உலகம். விண்ணிலுள்ளோர் பொன் விலங்கு பூண்டவர்போல் இன்பநோக்கைக் கொண்டு, பதவி மோகத்தில் கட்டுண்டு, இறைவனை அறியும் உணர்வு இல்லாதார் ஆயினர்.

பிற – பூவுலகிற்கு கீழே உள்ள நரகம் போன்றவை. தீவினைப் பயனை பல்வேறு உருவங்களில் துய்ப்பதற்கு உண்டான நரக பூமி. இங்கு உள்ளவர்கள் துன்புற்று, சித்த விருத்தி இழந்து, ஞான வாய்ப்பு ஒருபோதும் கிடைக்காமையால் அறியார் ஆயினர்.

அறிவரியான் என்பதை, விண்ணிற்கும், பிறவற்றிற்கும் கூறும்போது அறிதற்கு அரியான் என்றும், ஞாலத்திற்கு கூறும்போது அறிவும் அருமையும் உடையான் என்று கொள்ள வேண்டும். அவனருள் ஒன்றையே வேண்டி நிற்பவர் அல்லாமல், தன்முனைப்பில் சார்ந்து நிற்கும் மற்றவர்களுக்கு அறிதற்கறியான்.

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்: கோலம் – உருவம், வடிவு, இறைவன், நம் போன்றொர் வழிபடுவதற்குச் சிறந்த சாதனாமாயுள்ளது, உருவத் திருமேனி. ஆகையால் இங்கு கோலம் என்று கூறினார். கோதாட்டுதல் – திருத்துதல், குற்றங்களைப் போக்குதல், என்ற பொருளில் மணிவாசகப் பெருமான் பாடியுள்ளார். பிறரை இகழ்ந்து குற்றமுண்டாகும்படி விளையாடுதல், என்றும் பொருள் கொள்ளலாம். “கோதாட்டொழி” என்ற ஔவையார் வாக்கைக் காண்க.

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்று

ஓலமிடினும் உணராய் உணராய் காண்: சீலம் – அடியார்க்கு எளியனாகும் தன்மை, ஆகவே இறைவன் கோலத்தையும், சீலத்தையும் பொது வகையால் பாடியும் உணராதவளை, நாதன் நாமமாகிய சிவனே என்று கூவி உணர்த்த முற்பட்டோம் என்றாள். . உண்மை அன்பு இருக்குமாயின் இறைவன் திருக்கோலத்தையும் சீலத்தையும் புகழ்ந்துபாடி, சிவனே, சிவனே என்று அடைக்கலம் வேண்டி பேரொலி எழுப்பியபோதும் நீ உணரவில்லை. நாங்கள் மறைவாக மந்திரமாகச் சொல்லவேண்டிய உயர்ந்த சொல்லை உன் பரிபாகமின்மை அறிந்து உரக்க ஓலமிடுவதைப்போல் சொன்னோம். அப்போதும் நீ எழவில்லை என்றாளாம். ஓலம் அடைக்கலம் வேண்டுவோர் கூவி அழைக்கும் குறிப்பு மொழி. உணராய் உணராய் என்றதில் முன்னையது, துயில் எழாமையும், பின்னையது சொன்னதை அறியாமையையும் உணர்த்தின. காண் – முன்னிலை அசை.

உலகியல் வாழ்க்கையே பெரிதென்று மயங்கி இருளில் அழுந்தியிருக்கும் ஆன்மாவை ஞானாசிரியர்கள் தங்கள் உபதேசத்தால் உயர்த்த முயன்றும் உயராத ஆன்மாக்களின் இழிவைக் குறித்தது.

ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்: ஏலம் – மயிர்ச் சாந்து, வாயால் இனிமைபடப் பேசுவதுபோல், உடலையும் ஒப்பனை செய்துக் கொள்கிறாய் என்று ஏலக் குழலி என்றாள். பரிசு – கழிவிரக்கப் பொருளில் வந்துள்ளது. உன் இயல்பு இதுதான் என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தியது.

1. ஞாலமே..அரியான் என்ற தொடர் இறைவனுடைய அருமையைச் சொன்னது.
2. கோலமும்……..உணராய் காண் என்பது அடியவர்கள்பால் சிவபெருமான் காட்டும் எளிவந்த தன்மையைக் காட்டியது.
3. சிவனே, சிவனே என்று இருமுறை கூறியது அவனிடம் சரண் புகுந்ததைக் குறித்தது.
4. ‘உணராய் உணராய்’ என்றது உள்ளே உறங்கிக் கிடக்கும் பெண்ணின் அறியாமையை உணர்த்தியது.

ஏலம் அணிதல், ஓலமிட்டும் உணராமை, நாம் அறிவோம் என்று பொய் பேசுதல், ஆகிய இக்குணங்கள், இறைவணால் ஆட்கொள்ளப்படுவதற்கு தடையாக உள்ள குணங்கள். திருமந்திர உபதேசத்தை உபதேசமாகச் சொல்லாமல், உரக்கக் கூறியதால், உயிரைப் பரிபாகமுற செய்யும் முயற்சிகள் என்று கொள்ளலாம்.

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்………….6

இத்திருப்பாட்டு மனம் மொழி மெய்களால் வழிபடும் மெய்யடியார்க்கு, இறைவன் பள்ளத்தை நோக்கிப் பாயும் நீர் போல்வான். ஆகவே துயில் எழுந்து திருவடியைப் பாடி உன் மனதை பள்ளமாக்கிக் கொள் என்றார்.

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே யெழுப்புவன் என்றலும்: மான் என்று உவம ஆகுபெயராக உறங்கும் பெண்ணைக் குறித்தது. நென்னல் – நேற்று, நீ எல்லோரையும் பார்த்து நாளைக்கு நானே வந்து எழுப்புகிறேன் என்று சொல்லிச் சென்றவள்.

………………………………………..நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ: இவ்வாறு சொன்னவள் வாராமையால் சொல் காவாத நீ எப்பக்கம் சென்றாய். திசை – இடம், தாம் செய்யும் குற்றம் பிறருக்குத் தெரிந்து விட்டது என்றால் சிறிது வெட்கப் படுவர். அதுபோன்று ‘ நாளை வந்து எழுப்புவன்’ என்ற கூறிய நீ எங்களை வந்து எழுப்புவதற்கு இன்னும் பொழுது புலரவில்லை போலும் உனக்கு என்று நகையாடிச் சொன்னார்கள். வராததிற்கு இன்னும் பொழுது விடியவில்லை என்று காரணம் காட்டுவாள் என்றார்கள்.

வானே நிலனே பிறவே அறிவரியான்: ‘ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்’ என்று முன் பாட்டில் கூறப்பட்டதைக் காண்க. தாங்கள் வணங்கும் சிவன் எத்தகையவன் என்பதைக் காட்டுகிறார்கள். முத்திறத்தாரும் அறிவதற்கு அரியவன். உலகவர் இன்புற தேவர்களை வாழ்த்த வேண்டியது முறையாகும்.

“அந்தணர் தேவர்ஆ னினங்கள் வாழ்கஎன்று
இந்தமெய்ம் மொழிப்பயன் உலகம் இன்புறச்
சந்தவேள் விகள்முதல் சங்க ரர்க்குமுன்
வந்தஅர்ச் சனைவழி பாடு மன்னவாம் .” (பாடல் 821 – தி.ஞா.புராணம்)

என்பது சேக்கிழார் வாக்கு.

தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்: அத்துணைப் பெரிய பெருமான், தவம் சிறிதும் செய்யாத எமக்கும் திருவுளங்கொண்டு தானே வந்து ஆட்கொண்டு தலையாய அருளை நல்கினான். தலையளி – மேலான கருணை, ஆட்கொள்ளுதல் – பாசம் நீக்கி அடிமையாக ஏற்றுக் கொள்ளல், அருளும் – அருள் புரிதல், திருவடி நல்குதல்.

வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு: இறைவனுடைய அழகிய திருவடிகளை துதித்து, பாடி வந்து நிற்கும் எங்களுக்கு, வான் – பெருமை, வான் கழல் – பெருமை பொருந்திய திருவடி, வார் கழல் – நெடிய கழல்,

‘கழல்’ என்பதை ஒவ்வொரு சொல்லுக்கும் பொருத்திப் பொருள் காண்க, - அறிவரியானது கழல், ஆட்கொண்டருளும் கழல், வான் கழல், வார் கழல் என்று.

உன் வாய் திறவாய் : நீ, உன் வீட்டு வாயிற்கதவைக் கூட திறக்கவில்லை. ஒன்றும் மறுமாற்று கூறாது உறங்குகின்றாய்,

ஊனே உருகாய்: உடல் மெலிய மாட்டாய்; இவ்வாறு கூறியது கழலைப் பாடியதுக் கேட்டு ஊன் உருகப் பெற்றிருந்தால் உடனே உறக்கத்தை விட்டு எழுந்திருப்பாய் என்பதை உணர்த்தியது. இறைவன் புகழைக் கேட்டதும் நீ செய்ய வேண்டியது வாய் திறந்து பாடுதல் மட்டுமன்று, புன் புலால் யாக்கை புரை புரை கனிய, என்பெலாம் உருக ஊனினை உருக்க வேண்டும். பாடாத உனக்கு அந்நிலை எவ்வாறு வரும் என்றார்கள்.

உனக்கே உறும்: இவை எல்லாம் உனக்கே தகும். இனியேனும் எழுந்து வந்து எங்களோடு இறைவனைப் பாடு என்றார்கள்.

…………………………………………………….எமக்கும்
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்: தங்கோன் – தலைவன் தம்பிரான் என்பதுபோல தமக்குக் கோன் தானே ஆயினான் என்பது. பரிபாகமின்மையால் இறைவனது புகழை நாங்கள் பாடுவதைக் கேட்டவுடன், நீயும், பாடி, உருகாவிட்டாலும், எங்களுக்காகவும், பிறருக்குமாகவும் நீ பாட வேண்டும் என்றார்கள். நாங்கள் இங்கே வந்தது உன்னையும் இத் தொண்டில் ஈடுபடுத்துவதற்காகவே என்று கூறினார்கள்.

அன்னே இவையுஞ் சிலவோ பலஅமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்………………………..7

தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சி வசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

அன்னே இவையுஞ் சிலவோ: ‘’அன்னே’ என்பது மகிழ்ச்சியால் இளையாளை அழைக்கும் முறை. வயது வித்தியாசமின்றி அனைவரையும் அழைக்கும் சொல்லாகவும் வழக்கில் பயன்படுத்தப் படுகிறது. இங்கே தோழி ஒருவரை விளிக்கப் பயன்படும் சொல்லாக நிற்கின்றது. “செறிபரற்கானில் சிலம்படியாய் ஆமே நடக்க அருவினையேன் பெற்ற அம்மனைக்கே” என்று திருக்கோவையாரில்(228) கூறியுள்ளதைக் காண்க.

இவையும் என்பது சுட்டுப்பொருளாக செய்யுளில் முன்னே வந்தது. முன்னே தீசேர் மெழுகொப்ப இறைவன் பெயரைக் கேட்ட அளவில் உருகுவது உன்னுடைய இயல்புச் செயல்கள். ஆனால் இப்போது துயில் எழுப்பிய போதும் வாளாது கிடத்தல் என்ற நிலையைச் சுட்டிக் காட்டி, இதுபோன்ற இயல்புகள் இன்னும் பல உன்னிடத்தில் உள்ளதுபோலும் என்று ‘இவையும் சிலவோ’ என்றனர் தோழியர். வீடுதோறும் சென்று எழுப்பும் செயலில் வெறுப்பு கொண்டு இவ்வாறு உரைத்தனர் என்றும் கொள்ளலாம். இதில் மற்றுமொரு பொருள் – இறைவனது திருவிளையாடல்களில் இவையும் சில போலும் என்றும் சிலர் பொருள் கூறுவர். ஆனால் தோழியை ‘அன்னையே ‘என்று அழைத்ததால் அவள் பக்தி அதிகம் கொண்டவள் என்பது புலனாகின்றது. அவளிடத்தில் இவ்வாறான குணக்குறைபாடுகள் காண்பது அரிது. ஆகவே இறைவன் தம் திருவிளையாடல் போன்றே இம்மாதிரியான குறைபாடுகளை அவளிடம் காணப் பெறுமாறு செய்திருக்கிறார் என்று தோழியர் எண்ணுகின்றனர் என்பது இன்னொரு கோணத்தில் காணப்படும் பொருள்.

பலஅமரர் உன்னற் கரியான்: அமரர் பலரும் என்று கொள்க. தேவர்கள் அதிகார மலம், புண்ணியப் பயனாகிய போகம் ஆகியவற்றுள் மயங்கிக் கிடப்பவர்கள் ஆதலால், அவர்கள் இறைவனை நினைக்க மாட்டர்கள். அவனை நினைத்தல் இன்றி அவன் அரியனாகின்றான். நினைத்தற்கே அரியவன் என்றால் சென்றடைவதற்கு அரியவன் என்பது சொல்லாமலே விளங்கும். உன்னுதல் – நினைத்தல், “உன்னற்கரிய..............மாமறையோன்” என்று பின்னர் அடிகளார் (பொன்னூசல் – 7) கூறுவதைக் காணலாம்.

ஒருவன்: ஒப்பற்றவனாகையால் ஒருவன் என்றார்.

இருஞ்சீரான்: இமையோர்களுக்கு அரியவனான இறைவன், நம் போன்ற எளியவர்களுக்கு, அவரவர் தகுதிக்கேற்ப ஆட்கொண்டு அருளும் தன்மையால் புகழ் மிக்கவன் என்று இருஞ்சீரான் என்றார்.

சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்: சின்னம் – ஒருவகை குழல் வாத்தியம், சிறியது. இங்கு கருவி ஆகுபெயராக ஒலி குறித்து நின்றது.இவை முழங்கும் ஒலி கேட்ட தோழி, ‘சிவாய நம’ என்று உச்சரித்து துயிலெழுவாள். கூறுவாய் என்னாது, வாய் திறப்பாய் என்றதனால், வாய் திறந்தாலே, “நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே” என்பதுபோல ‘ சிவ’ என்பதே வெளிப்படும் என்று.

தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்: தென்னா – தென்னவனே, பாண்டி நாட்டு அரசனே (சௌந்தர பாண்டியனாக வீற்றிருந்தது), அழகானவன், தன் – அழகு, என்னா முன்னம் என்பது ‘அம்பு படுமுன் தலை துணிந்தது’ என்பது போன்று விரைவு குறித்து நின்றது. இறைவனைப் புகழ்வோர் ‘தென்னா’ என்று சொல்லி முடிக்கு முன்பே, அவன்பாலுள்ள அன்பு மேலீட்டால், தீயில் பட்ட மெழுகுபோல் உருகுவாள் என்பதை உரைத்தார்கள்.

“புகழ்வார் தென்னாவெனவுடையான் நடமாடு சிற்றம்பலமே” என்று திருக்கோவையார் (217) உரைப்பதைக் காண்க.

“நின்பால் அன்பாம் மனமாய் அழல் சேர்ந்த மெழுகேயன்னார்” (சத.88)

என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ: என்னானை என்னை என்பதைக் கூட்டி உரைக்க வேண்டும். என்னுயிர்த் தலைவன், எனது ஆனை போல்பவனே என்றும் கொள்ளலாம். யானை தன்னைக் கட்டச் சங்கிலியை தானே எடுத்துச் சென்று பாகனிடம் கொடுப்பதுபோல, இறைவன் உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனும் தறியை சார்ந்து நின்று, அன்பெனும் தளையை உதவி தான் அதில் கட்டுண்டு நிற்பான் என்பதால் ‘ என் ஆனை’ என்றும் கூறலாம். அரையன் – அரசன், தலைவன், என்னானை என்பதை என்னான் + ஐ என்று, என் உள்ளத்தில் இருப்பவன், என் தலைவன் என்றும் உரைக்கலாம். இன் அமுதன் – நஞ்சுடன் பிறவாத அநாதி நித்யமான அமுதம் போன்றவன். “தேனாய் இன்னமுதமுமாய் தித்திக்கும் சிவபெருமான்” என்ற வரிகளைக் காண்க.

என் ஆனை, என் அரையன், என் அமுதன் என்று கூட்டாக இருந்தும், தனித்தனியாக இருந்தும் போற்றினோம், கூட்டாக நின்று போற்றிய பேரொலியைக் கேட்டாவது நீ எழுந்திருக்கலாம். அது முடியாதபோது வேறாகச் சொன்னபோதுகூட எழுந்திருக்கலாம். இவ்விரண்டும் நீ செய்யவில்லை என்றார்கள்.

என் ஆன், என் அரையன், இன் அமுதன் என்று மும்முறை கூறியது குறிப்பிடத்தக்கது. பிறவிப் பெருங்கடலை நீங்க அவன் ஒருவனே துணைவன், மன்னுயிர்களின் தலைவன், பிறவாமையை அருள வல்லவன் என்று எண்ணி சாதனா மார்க்கத்தில் முயல வேண்டும் என்பதே கருத்து.

வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்:
வன்னெஞ்சர்போல், பேதையர்போல் என்று இரண்டு சொற்களிலும் சேர்த்துக் கொள்க.

வன்னெஞ்சப் பேதையர் போல்: இறைவன் புகழைக் கேட்டும் கசியாத, கனியாத உருகாத உள்ளம் கொண்ட அறிவிலிகள். பேதை பருவம் குறிக்கும் பெயரன்று. பேதையர்போல் என்றதால் உண்மை நிலை அதுவல்ல என்பது தெளிவு. வன்னெஞ்சு – இளகாத நெஞ்சு, “வன்நெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே என் நெஞ்சுருக்கி” என்ற அடிகளார் வாக்கு பின் வருவதைக் காண்க.,

வாளா கிடத்தி: வாளா – வீணே, பயனின்றி, கிடத்தி – படுத்தபடியே இருத்தல், அன்பில்லாத அறிவில்லாத வன்னெஞ்சுடைய பெண்கள் போல் படுத்துக் கிடப்பது தகுமா?

என்னே துயிலின் பரிசு: பரிசு – தன்மை, இவ்வாறு நீ கிடப்பதற்குக் காரணம் உன் தூக்கமே என்றார்கள். உன்னுடைய தூக்கத்தின் தன்மைதான் என்னவோ? இறைவனிடம் மாறாத அன்பு கொண்ட உன்னையும் இந்த தூக்கம் இவ்வாறு செய்துவிட்டதே என்ற வியப்பும் அவர்களிடம் தோன்றியதாம்.

என்னே துயிலின் பரிசு என்றது, தோழிமேல் குற்றமில்லை. இறைவனின் லீலை, அவளை மாயையின் வசம் கொண்டு சென்றது, என்று மாயயை நொந்து கூறியது. பரிசு என்ற சொல் இங்கே நொந்து கூறும் சொல்லாக உள்ளது என்று கொள்ளலாம்.

ஆன்மா சிவச் சார்பு நீங்கி, மலச் சார்பை பெற்றபோது, தன் நிலை அறியாமல் பேதைபோல் இருக்கும். அப்போது இறைவன் தோழனாகவும், குருவாகவும் எழுந்தருளி ஆன்மாவுக்கு அதன் உண்மை நிலையை உணர்த்தி, தன் திருவடி சேரவைப்பான் என்பது இப்பாட்டின் உட்பொருள் என்று கொள்ளலாம்.

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். ………………….8

விடியற்காலைப் பொழுதில் நாம் காணும் காட்சிகள் இங்கே விவரிக்கப் படுகின்றன. கோழிகள் கூவ, குயில் முதலிய பறவைகள் எல்லா திக்கினின்றும் ஒலித்தன. நாங்கள் எழுந்து இறைவனுடைய கருணையைப் பாடி வருவதை நீ கேட்கவில்லையோ? இது எத்தகைய உறக்கம். ஊழி முதல்வனாய் நிற்கின்ற அவனைப் பாடுவாயாக. இறைவனே, அவள் துயிலெழுந்து பாடவும் அருள் செய்வாயாக.

கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்: கோழி(சேவல்) கூவப் பொழுது புலரும். பொழுது புலர்வதை முன்னரே அறிவிக்கும். அது கூவியவுடன் மற்ற பறவைகள் எழுந்து ஒலிக்கும் சிலம்பும் – ஒலி எழுப்பும், குருகு – பறவைகளின் பொதுப் பெயர்.

ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்: திருக்கோயில்களில் ஏழு சுவரங்களாலான இசை, ஏழுவித இசைக்கருவிகளால் ஒலிக்கத் துவங்குகின்றன. வெண்சங்கும் ஒலிக்க கொயில் பூசைகள் ஆரம்பமாகின்றன. ஏழில் – நாதசுரம் என்றும் பொருள். ஏழு சுவரங்களுக்கும் இடமானது என்று காரணப் பெயர் பெற்றது. ஏழ் என்பது முன்னர் இசையையும், பின்னர் இசைக் கருவிகளையும் உணர்த்தின. ( இருமடி ஆகுபெயர்). கோழி சிலம்பல், குருகு சிலம்பல், ஏழில் இயம்பல், சங்கு இயம்பல் என்பன விடியற்காலை நிகழ்ச்சிகளை உணர்த்தின.

கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை: கேழ் – உவமை, ஒப்புமை, இல் – இல்லாத, பரம் – மேன்மை, சோதி – மேலான ஒளி, பரங்கருணை - மேலான திருவருள், பேரருளுடைமை,

கேழில் விழுப்பொருள்கள்: விழுப் பொருள் – மேலான பொருள், பொருள் அமைந்த பாடல்களை உணர்த்தியது. பொருள் – இறைமைக் குணங்கள் கொண்ட இறைவனுடைய புகழ். ‘விழுப்பொருள்’ என்பதற்கு சில சிறப்புப் பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒப்பற்ற இறைவனின் பொது இயல்பை மட்டும் எண்ணாமல், சிறப்பு இயல்புகளையும் அறியத் தகுந்த சிவஞானம் வேண்டும் என்று ஒரு பொருள்.

பாடினோம் கேட்டிலையோ: ஒப்பற்ற கருணைப் பெருங்கடலானவனும், சோதிவடிவானவரும், மேலான தன்மை உடையவரான இறைவனின் நிகரில்லாத உயர்ந்த புகழை, நாங்கள் பாடினோமே, உனக்குக் கேட்கவில்லையொ? கேட்டாயென்றால் நீ உறங்கியிருக்க மாட்டாய், ஆகவே நீ கேட்கவில்லை என்பது எங்கள் முடிவு என்றார்கள் தொழிகள்.

வாழிஈ தென்ன உறக்கமோ: வாழி என்பதை பாடலின் முதலில் வைத்து, தோழி எழும் வேளையில் மங்கலச் சொல்லாக ‘நீ வாழ்வாயாக’ என்று சொல்லப்பட்டது. கோழி சிலம்பல் முதலியன நிகழ்ந்தும், பரஞ்சோதியின் பரங்கருணையைப் பாடவும் , போன்ற இத்துணை ஓசைகளாலும் நீங்காத உன் உறக்கம் எவ்வாறான உறக்கமோ, அறியமாட்டோம் என்றனர்.

வாய்திறவாய்: உன் வாயைத் திறந்து பதில்கூட உரைக்கமாட்டாயா என்பது. உன் இல்லத்தின் வாயிற் கதவைக்கூட திறக்கவில்லை நீ என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ: ஆழி – கடல், ‘இறைவன் அருட்கடல் ஆதலால் ஆழியான் என்றார்’ என்பது தேசிகர் அவர்களது உரை. “ஆழியை மாலுக்கு ஈன்ற அருள் நாதனிடம் நீ வைத்த அன்பு இப்படித்தானா” என்பது காழியார் உரை. ஆழி – சக்கரம், திருக்கரங்களில் சக்கரம் ஏந்திய திருமாலைப்போல் இறைவனிடம் அன்புடையவள் ஆவேன் என்று கூறியது நீதானா? ஆழியை வேண்டி நெறி தவறாது பக்தியுடன் பூசனை செய்து வந்த திருமாலைப்போல், நானும் பக்தியில் சிறந்தவள் ஆவேன் என்று கூறிவிட்டு, இவ்வாறு தூங்குவதா என்று நகையாடினர் என்றும் கொள்ளலாம்.

ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை: ஊழிகள் பலவற்றிற்கும் முதல்வன், அவற்றால் தாக்கம் உண்டாகாத இறைவன். முதல்வனாய் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி நின்ற ஒருவன். ‘ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே’ என்ற நாவுக்கரசர் பாடலைக் கருத்தில் கொள்க.

ஏழைபங் காளனையே பாடு: ஏழை – உமையம்மை, முதல்வனாய் நின்ற ஒருவன், பிரபஞ்ச சிருட்டியை எண்ணியபோது ஏழைப்பங்காளன் ஆயினான் அவனைப் பாடுக என்றார். திருவருள் சத்தியோடு கூடியவன்.

ஏழைகளுக்காக இறங்குபவன், மதொரு பாகன் ஆனவன், இறைக்கருணை இல்லாதவர்களையும், தன் கருணையால் காப்பவன் என்று மூன்று விதமாக பொருள் காணலாம்.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்………………………9

இதுவரை கண்ட பாடல்களில் தோழியர்கள், தம்மைச் சேர்ந்தோரை அவரவர் வீட்டிற்குச் சென்று எழுப்பிய வகை கூறப்பட்டது. இவ்வாறு அவர்கள் எல்லோரும் ஒன்று கூடியபின், முதற்கண் இறைவனைப் பாடித் துதிப்பதாக இந்தப் பாடல் கூறுகிறது. இறைவா, உன்னைத் தலைவனாகப் பெற்ற நாங்க்கள் உன்னடியார்களையே மணப்போம் என்று இம்மைப் பயனை விண்ணப்பித்து, அதன் பயனாக உன்னிடமுள்ள எங்கள் அன்பு குறையாமல், மறுமைக்கும் உண்டான பேரின்பத்தைப் பெறுவோம் என்று வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே: முன்னே தோன்றி நின்று மறைந்த பொருள், மறையாது நிற்கும் பொருளும் இதில் அடங்கும். இவ்விரண்டிற்கும் முன்பான பழையோன் இறைவன். அநாதியாய் உள்ள உயிர் உலகு ஆகிய பழைய பொருள்களுக்கெல்லாம் அநாதியாய் உள்ள பழம் பொருளாக உள்ளவன் இறைவன் என்றார்.

“முளைத்தானை யெல்லார்க்கும் முன்னே தோன்றி” (6-19-1)

“ முற்றும் பின்னையாய் முன்ன மேமுளைத் தானை (7-67-9)

என்ற பாடல்கள் இக்கருத்துக்கு பொருள் சேர்க்கின்றன.

பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே: இனி தோன்ற இருக்கின்ற புதிய பொருள்கள்களுக்கும் புதிய பொருளாக நிற்கும் தன்மையடையவனாக இருக்கின்ற இறைவன். பேர்தல் – நிலை மாறுதல், பேர்த்தும் – மறுபடியும், மேலும், பெற்றியன் – தன்மையன். இயல்பினன்.
பேர்த்தும் என்றது முன்னைப் பழம்பொருள்களுக்கெல்லாம் பழம்பொருளாக இருக்கும் தன்மையன்றி புதிய பொருள்களுக்கெல்லாம் புதியவனாக இருக்கும் தன்மையுடையவன் என்று உரைக்கப் பட்டது. இறைவன் பொருள்களைத் தோற்றுவிக்கும்போது, காலதத்துவத்தோடு இணைத்து, முன்பும் பின்பும் தோன்றுமாறு செய்து, தான் அக்கால தத்துவத்திற்கு உட்படாமல் தனித்து நிற்றல், இவ்வாறு குறிக்கப் பட்டது,

உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்: பிரான் – தலைவன், ‘உன்னை’ என்பது உன்னையே என்று ஏகாரத்துடன் இணைத்துக் கொள்ளவேண்டும். பெற்ற – பெற்றதனால், (அறிவினால் பெற்றதனால்) சீரடியோம் – மெய்யடியார்கள் கூட்டம் எங்களுடையது. ‘உன்னை’ என்று பழைய, புதிய பொருள்களுக்கெல்லம் பேர்த்தும் அப்பெற்றியனாக உள்ள உன்னை என்றார். பிரானாகப் பெறுதல் கிடைத்தற்கரிய பேறு என்று’உன்னை பிரானாகப் பெற்றோம்’ என்றார். இத்தகைய தலைவனை நாங்கள் பெற்றதால், சிறந்த அடியார்கள் ஆனோம் என்று ‘சீரடியோம்’ என்றார்.
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்: உன் மெய்யடியார்களின் திருவடிகளை வணங்குவோம். தாள் பணிதல் – மனம் மொழி மெய்களால் வணங்குதல், ஆங்கு – அவர்களை வணங்கும் முறைமையால், அவர்க்கே – அவர்களுக்கு (மெய்யடியார்கள்) மட்டுமே, பாங்கு – பக்கத்துணை, தோழமை, உரிமை எனவும் பொருள் கொள்ளலாம். ‘அவர்க்கே பாங்காவோம்’ என்றது அவர்களுக்கே உரியவர்கள் ஆவோம் என்பது.

அன்னவரே எம்கணவ ராவார்: அவ்வடியார்கள்பால் பாங்காதல் ஏற்பட, அவர்களே எங்கள் கணவராக வரவேண்டும் என்றார்கள். சிவனடியார் என்ற பொது நோக்கில் சமயப் பற்றால் அவர்களைப் பார்த்து, தொழுது, தோழமை கொண்டு, அவர்களின் குண நலன்களைத் தெரிந்து, பின்னரே அவர்கள் எம் கணவராக வர இசைவோம் என்று அந்த இளம் பெண்கள் கூறுகின்றனர் என்பது இங்கே குறிப்பு. இளமைக் காலத்திலேயே பெருமான் மீது மிகவும் பக்திகொண்ட மெய்யடியார்களே தங்கள் கணவராக வர வேண்டும் என்பது அவர்கள் வேண்டுகோளாக இறைவனிடம் விண்ணப்பிக்கின்றனர்.

அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்: இவ்வடியார்கள் எங்களுக்கு கணவரான பிறகு, அவர்களுக்கு உகந்த செயலாகப் படுவதே எங்களுக்கும் உகந்தது, எங்களுக்கென்ற தனி விருப்பு எதுவும் கிடையாது, என்றனர். பரிசே - அவர்கள் சொன்னவாறு, தொழும்பு – மனத்தோடு பொருந்தி, கடமையாக மேற்கொள்ளும் அடிமைத் தன்மை. பணி செய்வோம் – மிக மகிழ்ச்சியுடன் பணி மேற்கொள்வோம். அவர்கள் (மெய்யடியார்கள்) இட்ட பணியைச் செய்வோம் என்றது இறையடியாருக்கு செய்யும் அரும்பணியின் பெருமையை உணர்த்தியது. பணி செய்தல் இன்ப நிலைக்கு காரணமாகும் என்பதை, “ அன்பர் பணி செய்ய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலை தானே வந்து எய்தும்” என்பது தாயுமானவர் வாக்கால் உணரலாம். (பராபரக் கண்ணி – 155)
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்: இன்ன வகை என்றது, அடியாரைப் பணிதலும், அவரைக் கணவராக வேண்டலும், அவர் விரும்பியதை தாமும் விரும்பிச் செய்தலும் போன்றவற்றைக் குறித்தது. எங்கள் இறைவனாகிய நீ எதைக் கொடுத்தாலும், நாங்கள் விரும்பி ஏற்றுக் கொள்வோம் என்றாலும் எங்கள் விருப்பத்தை உனக்குச் சொல்லி விட்டோம். இந்த ஒரு வரத்தை நீ கொடுத்தால் போதும், மற்ற நலன்கள் தானே வந்து சேரும் என்று ‘என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்’ என்றார்கள்.

அரனே முதல் என்று துணிந்த ஆத்மா, சிவனடியாரைச் சிவன் எனவே தொழுது, பின்னர் மல வாசனை வந்து தாக்காமல் இருப்பதற்காக அடியார் கூட்டத்திலேயே கூடி வாழ விரும்பும் நிலையை உணர்த்திற்று இப்பாடல்.

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். ……………………10

துயில் எழுந்து, குழாங்கூடி நீர்த்துறை அடைகின்றனர். அவர்களுக்கு முன்பே அங்கே வந்துள்ள கோயிலில் பணிபுரியும் மகளிரை கண்டு, அவர்களோடு கூடி இறைவன் புகழைப் போற்றி நிற்பதாக இப்பாட்டு அமைந்துள்ளது.

இறைவன் திருவடிக் கமலங்கள், கீழ் உலகம் ஏழினுக்கும் கீழாக, சொற்களுக்குள் அடங்காத நிலையில் உள்ளவை. மலர்கள் நிறைந்து அழகு செய்யப்பட்ட அவனது திருமுடி எல்லாப் பொருள்களின் முடிவாக உள்ளது. உமா தேவியாரை தன் திருமேனியின் ஒரு பக்கத்தில் கொண்டவன். வேதங்களுக்கு முதன்மையானவன். அவனை துதித்தாலும் எட்டாதவன். ஆனாலும் அவன் ஒப்பற்ற நண்பன்; அடியார் நடுவுள் இருப்பவன். அத்தன்மையனாகிய சிவபெருமானது ஊர் யாது? பெயர் யாது? அவனுக்கு உறவினர் யாவர்? அந்நியர் யாவர்? அவனைப் பாடும் வகை யாது?

ஒருவரைப் பற்றி நன்கு தெரிந்துக்கொள்ள வேண்டுமென்றால், அவருக்கு அணுக்கமாக இருப்பவர்களைக் கேட்கலாம். ஆகவே சிவபெருமானுக்கு அணுக்கத் தொண்டு புரிகின்ற பெண்களைப் பார்த்து, அவன் ஊர் எது, பேர் எது என்பன போன்ற வினாக்களை எழுப்புகிறாள் அவர்களிடம். அதற்கு முன்பாக தான் அவனைப் பற்றி தெரிந்து வைத்திருக்கின்ற குணங்களைக் கூறுகிறாள். இதுவே, ‘ பாதாளம்’ என்பது முதல் ‘தொண்டருளன்’ என்பது வரையாகும்.

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்: ‘பாதமலர்’ சொல்லை முன் வைத்துப் பொருள் கொள்ளவும். இறைவன் திருவடி பாதாளத்தில் உள்ள ஏழு உலகங்களுக்கும் (ஆதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம்) கீழே உள்ளதாம். ஆகையால் அதன் இருப்பிடம் சொற்களால் விவரிக்க முடியாது. இன்ன மாதிரியானது என்று அளவிடப்பட இயலாத திருவடித் தாமரைகள் என்பதைக் குறித்தது. சொற்கழிவு – சொல் செல்லாது நின்ற இடம். இவ்வுலகங்கள் ஆகமத்தில் கூறப்பட்ட உலகங்கள். நூல் வாயிலாக அறியப்படுகின்றனவாகையால், ஓரளவு சொற்களால் புகழ முடியும். திருவடிகள் இவ்வுலகங்களின் கீழும் வியாபித்திருப்பதை ஆன்மபோதத்தால் (உயிர் உணர்வு, அது, இது என்று சுட்டறியும் சுட்டறிவு) சொல்லொணாதது என்பதால் ‘சொற்கழிவு பாதமலர்’ என்றார். பாசஞான அளவை எட்டாத திருவடி என்பது பழைய உரை.

திரு இராமசாமி முதலியார் அவர்களுடைய விளக்கம் – பூமியின்கண் கன்மத்தையே (செயல்) முக்கியமாகக் கொண்டவர்கள் வாழுமிடமாகிய பாதாளம். அதன் கீழேயுள்ள அசுரர், இராக்கதர் வாழ்கின்ற ஆடகேசுர புவனங்களாகிய ஏழு பாதாளங்கள். அதன்கீழ், ரௌரம், முதலான நரகங்கள், கூசுமாண்ட புவனமாகிய நாகலோகங்கள், அதன் கீழுள்ள காலாக்கினி ருத்ர புவனம் என்ற இவை அனைத்தையும் தாங்கும் ஆதார சக்தியாக திருவடி விளங்குவதால் சொல்லமுடியாத தன்மை வாய்ந்தது.

போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே: போது – வண்டுகள் மொய்ப்பதற்கு முன்பே விடியற்காலையில் கொய்யப்பட்ட மலர்கள், போதார் முடி – கொன்றை, ஆத்தி முதலிய மலர்கள் நிறைந்த சடைமுடி உடைய திருமுடி. திருவடிகள் கீழ் ஏழு உலகங்களைத் தாண்டி நின்றது. திருமுடி அவ்வாறே மேலுலங்கள் ஏழையும் (பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மகாலோகம், சனலோகம், தவலோகம், சத்தியலோகம்) கடந்து நின்றது என்று பொருள் கொள்ளலாம்.

“அடியொன்று பாதலம் ஏழிற்கும் அப்புறம் பட்டதிப்பால்
முடியொன்றில் இவ்வண்டங்கள் எல்லாம் கடந்தது” (கோ.நா.மாலை – 6)

என்பது இங்கே காணத்தக்கது.

‘எல்லாப் பொருள் முடிவே’ என்றதனால் மேலானது என்று கருதத் தக்க பொருள்கள் எல்லாவற்றிற்கும் மேலான பெருமையுடையவன் என்று பொருள். முதலில் பாதாளம் என்று உலகங்களை மட்டும் கூறியவர், இம்முறை எல்லாப் பொருள் என்று முடிவு செய்தது, அனைத்து பொருள்களிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனின் வியாபகத் தன்மையை உணர்த்துவதற்காக. எங்கும் நிறைந்து எல்லை காணப்படாத அளவினன் என்பது புலப்படும். பரஞானம், அபரஞானம் ஆகிய இரண்டின் முடிவான சிவானந்தப் பொருள் என்பதும் பழைய உரை.

திரு இராமசாமி முதலியார் அவர்களுடைய விளக்கம்: பிருதிவி அண்டம் முதலாகச் சிவலோகம் வரை சொல்லப்பட்ட மேல் ஏழு உலகங்களும், அதற்கு மேலே முறையாக அமைந்துள்ள பிரமாண்டம், அப்புவண்டம், தேயுவண்டம், வாயுவண்டம், ஆகாச அண்டம், அகங்கார குணம், அராகம், வித்தை, கலை, நியதி, காலம், அசுத்த மாயை, சுத்த வித்தை, மயேச்சுரம், பரவிந்து, பரநாதம் இவை அனைத்தையும் கடந்து சிவசத்தியினுடைய பரிபூரண முடியின் அளவு, அளவுக்கு உட்படாதாக இருக்கின்றது என்றார்.

பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்: ‘திருமேனி ஒருபால் பேதை’ என்று கூட்டிப் பொருள் காண வேண்டும். பேதை – உமாதேவியார், உலகெலாம் ஈன்ற அன்னை ஆயினும் ‘பான்மொழிக் கன்னியாகையால் ‘பேதை’ என்றார். “பாகங்கொண்ட பேதையும் தாமுமாய்க் காட்சி முன் கொடுத்தார்” என்ற சேக்கிழார் வாக்கைக் (அமர்நீதி – 46) காண்க.

திருமேனி ஒன்றல்லன் – அவன் கொள்கின்ற வடிவங்கள் ஒன்றன்று, அன்பர்கள் நினைந்த வடிவுடன் அவர்களுக்கு காட்சி தருவான். உமையம்மையை ஒரு பாகத்தில் உடையவனாகையால் ஆணுருவம், பெண்ணுருவம் ஆகிய இருமேனி உடையவன் என்றும் பொருள் கொள்வர். இருமேனியான் என்று சொல்லாது ஒன்றல்லன் என்பதால், மேனியில் ஈருருவும் உடையவன், ஒருவன் என்றோ ஒருத்தி என்றோ கூற இயலாது என்பதையும் உணர்த்தினார்.

வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்: வேத முதல் என்றது வேதத்திற்கு முதல்வன் என்பதாம், மண் என்றது மண்ணோரையே குறிக்கும், இருபாலரும் தத்தம் அறிவின் அளவில் துதித்தாலும்,

ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்: விண்ணோரும், மண்ணோரும் எவ்வளவு துதித்தாலும், ஓதுதல் முற்றுப் பெறாத நிலையே உண்டாகும். ஓத உலவா- சொல்லக் குறைவுபடாத புகழை, வேதங்களும், மால், அயன் முதலான தேவர்களும் மக்களும், எல்லையில்லாமல் துதித்தாலும், அவர்களால் அறியப்படாத, அளவுக்கு உட்படாத, அளவில் அடங்காத பிரமப் பொருளாயிருப்பவன் இறைவன் என்றார். எனக்கினியவர் பலர் உளர், எனினும் எனக்கு இனியவன் நானே, என்னிலும் இனியவன் ஈசனே, அவனிடம் நாம் அன்பு செய்தல் வேண்டும், அவன் என்னுள்ளேயே உள்ளான் என்ற பொருள் அமையுமாறு, ‘ஒரு தோழன் தொண்டருளான்’ என்றார்.

என்னி லாரு மெனக்கினி யாரில்லை
என்னி லும்மினி யானொரு வன்னுளன்
என்னு ளேயுயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்கு
என்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே………… (5-21-1)

என்ற அப்பர் வாக்கு இங்கே காணத்தக்கது.

அடியார்க்கு நடுவில் இருப்பவன், அடியார்தம் உள்ளத்து இருப்பவன் என்று இரு விதமாக பொருள் கொள்ளலாம். வார்த்தைகளால் சொல்ல இயலாத பெரும் சிறப்புடைய ஒரு தோழன் என்றது, பெருமானைக் காட்டிலும் ஒரு சிறந்த தோழன் இல்லை என்பதை உணர்த்திற்று. இதன் மூலம், சைவ நெறிகளில் ஒன்றாகிய ‘சக மார்க்கம்’ குறிப்பால் உணர்த்தப் படுகிறது.

கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்: ‘கோதில் குலத்து பிணாப்பிள்ளைகாள்’ என்று இணைத்து, குற்றமில்லாத குலத்தில் உதித்த பெண் பிள்ளைகளே, திருக்கோயிலில் அகத் தொண்டு செய்பவர்கள் கலப்பில்லாத சுத்த குலத்தவராயிருக்கவேண்டும் என்பதாலும், அவர்கள் குலம் அரன் பணிக்கே ஆகிய உருத்திர குலமாகையால், ‘ கோதில் குலத்து’ என்றார். பிணா – பெண், பிள்ளை என்பது பொதுப்பெயராக இருப்பதால், ஆண்பாலை நீக்க, பிணாப் பிள்ளைகாள்’ என்றார். இவர்கள் இறைவன் சந்நிதியை விட்டு வெளியே செல்லமாட்டார்கள். சிவப் பணி ஒன்றையே செய்து கொண்டிருப்பவர்கள். இதனால் ‘கோயிற் பிணாப் பிள்ளைகாள்’ என்றார்.

ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்

ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்: ஊர் பெயர் முதலியன ஏது?, உறவு அயல் யார்? இதனால் இறைவனுக்கு அந்நியர் யார்? என்று கேட்டு, அந்நியர் யாருமில்லை என்பதை அறிவிக்கிறார்கள். இவைகள் ஒன்றுமில்லாத இறைவனை வழிபடுவது எவ்வாறு, என்று கோயில் பணி செய்யும் பெண்களிடம் வினவுகிறார்கள். அவனைப் பற்றி சிறந்த வகையில் போற்றிப் பாடுவது இயலாத ஒன்று, என்று வியந்து சொன்னதாகவும் பொருள் கொள்ளலாம்.

பான்மொழி பாகன் பராபரன் றானாகும்
மான சதாசிவன் றன்னைஆ வாகித்து
மேன்முகம் ஈசான மாகவே கைக்கொண்டு
சீன்முகம் செய்யச் சிவனவன் ஆமே . (10-7-11-3)

[பெருமையுடைய சதாசிவ மூர்த்தி அருவுருவத் திருமேனியனாயினும் அவன் அருவருமுங் கடந்த பரசிவனே என்பது தேற்றம், ஆதலால் இலிங்க வழிபாட்டில் சதாசிவ மூர்த்தியையே முறைப்படி ஆவாகனம் முதலியன செய்து ஒருவன் வழிபடு வானாயின், அவன் சிவனாம் தன்மைப் பெரும் பயனைப் பெறுவான்.
குறிப்புரை:

`வடிவம் யாதும் இன்மையால் அசிந்திதனாய் உள்ள சிவன் ஆன்மாக்களின் பொருட்டு வடிவங்கொண்டே சிந்திதனாய் நிற்றலால் பரசிவனைச் சதாசிவனாகக் கொண்டே வழிபட்டுப் பயன்பெறுதலே முறை என்றற்கு, \\"பராபரன் ஆகும் சதாசிவன் றன்னை\\" என்றார். \\"ஆவாகித்து\\" என்றது உபலக்கணம் ஆதலின், `ஆவாகணம் முதலியவற்றைச் செய்து` என்றதாம். ஆவாகனம் முதலியவாவன ஆவாகனம், ஸ்தாபனம், சந்நிதானம், சந்நிரோதனம், நியாசம், அர்க்கியம், பாத்தியம், ஆசமனம், அபிடேகம், அலங்காரம், தூபம், தீபமம், நைவேத்தியம், ஆராத்திரிகம், பிரதட்சிணம், நமஸ்காரம், தோத்திரம், பிரார்த்தனை என்பன. இவற்றின் இயல்பெல்லாம் பத்ததிகளிலும், சிவபூசா விதி நூல்களிலும் அறிக; இங்கு விரிப்பின் பெருகும்.
\\"மேன்முகம் ஈசானமாகவே கைக்கொண்டு\\" என்றது, `மேல் சதாசிவ லிங்கத்தின் இயல்பாகக் கூறியவற்றை அவ்வாறே உணர்ந்து செய்க` என அவற்றை இங்கு மீள நினைவுறுத்தியவாறு. `சீலம்` என்பது கடைக் குறைந்து, \\"சீல்\\" என நின்றது. சீலத்தை முகம் செய்தலாவது விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல். இம்மந்திரம் முதலாக வருவன எல்லாம் ஞானபூசை கிரியா பூசை இரண்டற்கும் பொதுவாவனவாம்.] (தருமை ஆதீன பதிப்புரை)

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணீறாடீ செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்………11

இப்பாடல் தோழியர் அனைவரையும் அழைத்து, ஒருங்கு கூடி, நீராடும்போது, இறைவனின் பெருமையைப் போற்றி உரைப்பதாக அமைந்துள்ளது. இறைவன் கால எல்லைகளுக்குக் கட்டுப்பட்ட இவ்வுலக ஆன்மாக்களை காப்பதற்காக, உருவத் திருமேனி கொண்டு திருவிளையாடல்களைப் புரிகிறான் என்று மணிவாசகப் பெருமான் நமக்கு எடுத்துரைக்கிறார்.

இறைவனை விளித்துக் கூறுவதாக உள்ள வரிகளை முன் வைத்துப் பொருள் கொண்டால் விளக்கம் கிடைக்கும்.

ஆர் அழல் போல் செய்யா - ஆர் – நிறைவு, அழகு, செய்யா – செந்நிறமான, நிறைந்த தீப்பிழம்புபோல செந்நிறம் கொண்டவனே, ஆர் அழல் என்பதற்கு

‘அணுகுதற்கு அரிய அழல்’ என்று பொருள் கண்டனர் தேசிகர் ஐய்யா அவர்கள். தருமையாதீனப் பதிப்பிலும் இவ்வாறே உரை கொள்ளப் படுகிறது. அரியும், அயனும் நெருங்குவதற்கு அரிய தீப்பிழம்பாக இறைவன் நின்றான் என்று திரு அண்ணாமலையில் பாடிய பதிகத்தில் இப்புராண நிகழ்வைக் குறிப்பதாக மணிவாசகர் பதிவிட்டுள்ளார் என்று விளக்கம் கொள்வது பொருத்தமாக உள்ளது என்பது எங்கள் கருத்து.

வெண்ணீறாடி செல்வா – வெண்ணிறமான திருநீற்றில் மூழ்கியதுபோன்று உடல் முழுதும் அணிந்தவனே, செல்வா – எங்கள் செல்வமாகிய ஈசனே, திருவருட் செல்வத்தை உடையவனே, தன்னைச் சார்ந்தவர்கள் அனைவருக்கும் இன்பமும் அருளும் புரிகின்ற இறைவனின் தன்மையை எண்ணி, ‘செல்வா’ என்று விளித்தார்.

தீ தான் சென்று பற்றிய பொருள்களையெல்லாம், எரித்து தூய்மை (சாம்பல் , ஒடுக்குவது) செய்கிறது. இறைவனும் இவ்வுலக ஆன்மாக்களின் மலங்களை எரித்து, திருவருள் பெறச் செய்கிறான், என்பதால் ‘ஆரழல்போல் செய்யா’ என்றார். எரித்தவுடன் மிகுதியாவது நீறு, ஆகையால் வெண்ணீராடி என்று தொடர்ந்து மகளிர் கூறியதாக பாடல் அமைகிறது. நீறாடுதல் என்றால் அழித்தல் என்ற ஒரு பொருளும் புலப்படும். நீறாடி என்பதை ஒடுக்கத்தை உணர்த்தும் சொல்லாகவும் நாம் கொள்ளலாம்.

பேரூழி முடிவில், புனருற்பவ காலத்தில், இறைவனுள் ஒடுங்கிய அருட்சக்தியாகிய அம்மை அவனிடமிருந்து வெளிப்படுவாள். அந்நிலையில் அவள் இறைவன் திருமேனியில் அநாதி விபூதி வடிவமாகப் படர்ந்து இருப்பாள். இதை இங்கு வெண்ணீறாடி என்றார். ஆகையால் படைப்புத் தொழில் இங்கே குறிக்கப் படுகிறது. இக்கருத்து சித்தாந்தபாநு, சிவத்திரு சி.சு.கண்ணாயிரம் அவர்களின் பதிவு.

சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா: மருங்குல் – இடை, மையார் தடங்கண் – மை தீட்டப்பட்ட அகன்ற கண்கள், “மையார் தடங்கண் மடந்தையர்” (11-07-21 – திரு.மும்.கோவை), “மையார் தடங்கண்ணி பங்கா” (7-32-5) என்ற பதிவுகள் இக்கருத்துக்கு துணை செய்வன. மடந்தை – இளம்பெண், எக்காலும் இளமை மாறாத உமை அம்மையைக் குறிக்கும். மணவாளா – உமையம்மையின் கணவனே, என்றும் மாறாத இளமை உடைய அம்மையின் மணவாளனே, “ நித்த மணாளர், நிரம்ப அழகியர்” (17.அன்.பத்து-3) என்று பின்னர் அடிகள் கூறுவதைக் காணலாம்.

மொய்யார் தடம்பொய்கை: மொய் – நெருக்கம், கூட்டம், ஆர் – நிறைந்த, மொய்த்துக்கொண்டு உள்ள வண்டுகள், பூக்கள் உள்ள இடத்தில்தானே வண்டுகள் மொய்க்கும், ஆகையால் பூக்கள் நிறைந்த என்று பொருள் கொள்ளலாம். கூட்டம் என்ற பொருள் கொண்டால், நீராடுவோர் நிறைந்துள்ள என்று மூவகைப் பொருள் கொள்ளுமாறு இந்த ‘மொய்யார்’ என்ற சொல் அமைந்துள்ளது. தடம் – அகன்ற, பொய்கை - நன்னீரை உடைய இயற்கை நீர் நிலை,

புக்கு முகேரென்னக் கையாற் குடைந்து குடைந்து: புக்கு – பொய்கையில் இறங்கி, முகேரென்ன – ‘திடீர்’ என்று சொல்வதுபோல ஒரு விரைவுப் பொருளைத் தரும் சொல். பொய்கையில் திடீரென்று மூழ்கும்போது ஏற்படும் ஒலி, இலக்கண வகையில் இது அனுகரண ஓசை எனப்படும். மார்கழித் திங்கள் குளிர் காலம். குளத்தில் இறங்கி நீராடுவதற்கு முன்பு கைகளால் துளாவி, மலர்கள், மலர்த் தண்டுகள் ஆகியவற்றை விலக்கி நீரில் மூழ்குவர். இச்செய்கையை அடிகளார் இங்கே குறிப்பிடுகிறார். திருப்பெருந்துறையில் உள்ள ஒரு தீர்த்தம் மொய்யார் பொய்கை என்று அழைக்கப் படுவதாகக் கூறுகின்றனர்.

உன் கழல்பாடி: நீராடும்போது இறைவனைத் துதிக்கின்றார்கள். உள்ளத்தில் இறைவனைத் துதித்து நீராடும் மரபு இன்றும் பலரிடம் காணப்படுகிறது. சாதாரணமாக நீர்நிலைகளில் குளிப்பவர்கள் பெருத்த ஆரவாரம் செய்து தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். ஆனால் இங்கே இயற்கைக்கு மாறாக இப்பெண்கள், ஆரவாரம் செய்யாமல் இறைவனின் திருவடிப்புகழைப் பாடிக்கொண்டே நீராடுகின்றனர் என்று குறிப்பிடுகிறார் மணிவாசகர்.

ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண்: எங்கள் தலைவனே, சிவனுக்கு வழி வழியாகத் தொண்டு செய்த மரபில் வந்தவர்கள் நாம் என்பதை உணர்த்த ‘வழியடியோம்’ என்றனர். நாங்கள் பரம்பரை அடியவர்கள். தங்களிடம் உள்ள வலுவான இறையன்பு தங்களின் பரம்பரைச் சிறப்பு என்பதை சொல்ல வருகிறார்கள். இந்த மார்கழித் திங்கள் வழிபாட்டின் நோக்கம், வைகறைப் பொழுதில் நீராடி உன்னை வழிபட்டு, நாங்கள் வேண்டுவன பெற வேண்டும் என்பதே. எங்கள் செயல்களை நாங்கள் முழுமையாகச் செய்துவிட்டோம், ஆகையால் நாங்கள் கேட்டனவற்றை பெறுவோம் என்று ‘ வாழ்ந்தோம்காண்’ என்றார்கள்.

ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்: தலைவனே நீ, இறைவன் தன்னுடைய மெய்யடியார்கள் பக்குவ நிலை எய்தும் பொருட்டு, தன் ஐந்தொழில்களையும் பெரு முயற்சி இன்றி விளையாட்டுபோல செய்கிறான் என்பதே இதன் கருத்து. இறைவன் புரியும் ஐந்தொழில்களும் அவருக்கு ஒரு விளையாட்டே என்று கூற வருகிறார். சைவ சித்தாந்த அடிப்படையில் இதற்கு பலர் பொருள் கூறியுள்ளனர்.

இறைவன் தன் அடிமைகளாக ஏற்றுக் கொண்ட உயிர்களை, தம் வினைகளை நுகரச் செய்து மலபரிபாகம் வருவித்து முன்னேற்றுகிறான். இது ஓர் அருளிப்பாடு. உயிர்கள் வினைப் பயனை நுகர்விக்கும்பொருட்டு ஆன்ம அறிவை மறைக்க வேண்டியுள்ளது. இதனால் அவனுடைய திருவைந்தொழில்களில் ஒன்றாகிய மறைத்தல் செயல்படுகிறது. மலபரிபாகமுற்ற ஆன்மா வீடு பேற்றுக்குத் தகுதியாகிறது. இதனையே ‘அருளும் விளையாட்டு’ என்றார். இது சிவத்திரு. சி.சு.கண்ணாயிரம் அவர்களின் கருத்து.

இந்த இறைவனின் விளையாட்டு அவனுக்கு எவ்வித இன்பத்தையும் தருவதில்லை. அவன் எதனாலும் பற்றப்படாதவன். அப்படியென்றால் அவன் ஏன் இந்த விளையாட்டை நிகழ்த்த வேண்டும். அதற்கு விடையாகத்தான், ‘ஆட்கொண்டு அருளும் விளையாட்டு’ என்றார். இறைவன் ஆற்றும் ஐந்தொழில்களும் அவன் அருள் காரணமாக உயிர்களை ஆட்கொள்வதற்கே நிகழ்த்தப் பெறுகின்றன. இது பேராசிரியர் அ.ச.ஞா ஐயா அவர்களின் கருத்துப் பதிவு.

“சொன்னஇத் தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம்உ யிர்க்கு
மன்னிய புத்தி முத்தி வழங்கவும் அருளால் முன்னே
துன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும் சொல்ல லாமே .”
                                                       (சித்தியார்-சூ1-17-பிரமாண இயல் – 36)

இறைவன் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வது காரணம் – காத்தும், படைத்தும், கரந்தும் விளையாடி என்ற திருவாசக வாக்கால் விளங்கும். பெரும் பாரம் சுமத்தல் இறைவனுக்கு விளையாட்டுபோல எளிதில் செய்யப் படுவது என்பதை உணர்த்த வந்தது. “புத்தி முத்தி வழங்குதல்” என்பது உயிர்களை பிறப்பு இறப்பில் படுத்தி, இன்ப துன்பம் நுகர்வித்து, பின், மலங்களை நீக்கி முத்தி கொடுத்தலைக் குறிக்கும். இப்பாடல் இக்கருத்தை மிகச் சிறப்பாக விளக்குகின்றது.

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்: உய்வார்கள் – மெய்யடியார்கள், உய்யும் வகை – திருவருளைப் பெற செய்யப்படும் நெறி முறைகள், அருள் விளையாட்டு ஒன்றே ஆயினும் ஆன்மாக்கள் அனைத்தும் ஒறே பயனை அடையும் என்பது இல்லை. அவரவருடைய தகுதிக்கேற்பவும், பக்குவ நிலைக்கு ஏற்பவும் அடையும் பயன்கள் மாறுபடுகின்றன. இதை குறிப்பதாகவே ‘உய்யும் வகை எல்லாம்’ என்றார்.

இந்த வேறுபடும் பயனை,

“வழங்குகின்றாய் உன் அருள் ஆர் அமுதத்தை வாரிக்கொண்டு
விழுங்குகின்றேன் விக்கினேன் வினையேன் விதி இன்மையால்”

என்ற வரிகளில் காணலாம். ‘உய்ந்தொழிந்தோம்’ என்றதனால், நாங்கள் உன் அருள் காரணமாக பல படிகளைக் கடந்து இறுதி நிலைக்கு வந்துவிட்டோம் என்று கூறுகின்றனர்.

எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்: எய்யாமல் – இளையாத வண்ணம், இந்த நிலை வந்தவுடன், எங்களை மறுபடியும் பிறப்பு எடுத்து இளைக்காமல் காப்பாற்றுவாயாக என்று வேண்டுகின்றனர். எய்யாமை என்பதற்கு அறியாமை என்று பொருள் கொண்டு, ‘ அஞ்ஞானம் வராமல் காப்பாற்று என்றும் கூறலாம்.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்………………….12

இது முதலாக வரும் நான்கு பாடல்களும் மகளிர் இறைவனைப் பாடிக்கொண்டே நீராடும் செயலைக் குறிப்பது. விண்ணும் மண்ணும் பிறவுமாகிய அனைத்தையும் படைப்பவன், காப்பவன், அழிப்பவன் என இறைவன் திருவிளையாட்டின் பெருமையை புலப்படுத்தும் பாடல்கள்.
நீராடும்போதும் இறைவன் புகழைப் பாடிக்கொண்டே ஆட வேண்டும் என்பது உட்கருத்து.

ஆர்த்த பிறவித் துயர்கெட – நம்மை பந்தித்துள்ள பிறவித்துன்பங்கள் நீங்கும் வண்ணம், ஆர்த்தல் – கட்டுதல், பிணித்துள்ள, உயிர் மும்மலங்களோடு பிணிக்கப்பட்டு பிறவிக்கடலினுள் தள்ளப் படுவதால் ‘ஆர்த்த பிறவி’ என்றார். ஆர்த்த என்பதற்கு, நுகர்விக்க எனப் பொருள் கொண்டு வினையின் பயனை அநுபவிக்க வந்த பிறவித் துன்பம் என்றும் உரை காணலாம். ஆர்த்த துயர், ஆர்த்த பிறவித் துயர் என்று இரண்டையும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். கெட – ஒழியும்படி,

உயிர்கள் மலவாசனை அற்று, பேரின்பம் அடைவதற்காக கொடுத்த மருந்து போல்வது நம் பிறவி என்றார். தீவினையின் பயனை நுகரும்போது, உயிர், துன்புறுகிறது. ஆகையால் பிறவியைத் துன்பம் என்றார். பிறவித் துன்பமாகிய வெப்பம்(துயர்) நீங்கவும், “ஆர்த்த பிறவி அகல விட்டோடுமே” என்ற திருமந்திரத் தொடரை (1631) இங்கே நினைவு கூறவும்.

நாம் ஆர்த்தாடும் தீர்த்தன் – ஆர்த்து – ஆரவாரித்து, மகிழ்ந்து, நம்மைச் சூழ்ந்து பிணைத்துள்ள, பிறவித் துன்பங்கள் நீங்கும் வண்ணம் நாம் ஆரவாரித்து ஆடும் தூய நீராக உள்ளவன். கங்கையாகிய தீர்த்தத்தை உடையவன் என்றும் பொருள் கொள்ளலாம். இத்தீர்த்தத்தில் நீராடுவதால் நமக்கு திருவருளும் சிவஞானப் பேறும் கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்தல். தீர்த்தங்களில் நீராடுபவர்கள், புறத் தூய்மையை நீக்கிக் கொள்ள மட்டும் நீராடுவதில்லை. தாம் சேர்த்துள்ள வினைகள் பலவும் ஒழியவே நீராடுகின்றனர். ஆகையால் தீர்த்தன் என்ற சொல் இங்கே இறைவனை குறிப்பதாகவே எடுத்துக் கொள்ளலாம். “சென்றாடும் தீர்த்தங்கள் ஆனார் தாமே” (6-78-1) என்ற நாவுக்கரசர் வாக்கை நோக்கவும்.

நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்கூத்தன்: தில்லையில் அம்பலவன் திருக்கூத்தை கண்டு வழிபட்டவர்கள் வீடுபேறு கிட்டுவதால் ‘நல்’ என்ற அடைமொழி சேர்த்தார். தீயாடும் – கையில் அனலேந்தி ஆடுபவர். தீஆடும் கூத்தன், ஆடும் கூத்தன் என்று பிரித்து உரைக்க வேண்டும். ஆடும் கூத்தன் – ஐந்தெழுத்துக் கூற்றுகளை ஆடுபவன். தீ ஞானத்தைக் குறிக்கும் என்று கொண்டு, ஞானத்தால் தன்னை காண விழைவார்க்குக் காட்சியளிப்பவன் என்றும் கொள்ளலாம். “அரவம் ஆட்டுவ ரந்துகில் புலியதள் அங்கையில் அனலேந்தி” (2-103-2) என்ற ஞானசம்பந்தர் வாக்கு இங்கே குறிப்பிடலாம்.

இவ்வாறு தீர்த்தனாய் எனத் தீர்த்தமும், சிற்றம்பலம் என்று தலத்தையும், கூத்தன் என்று மூர்த்தியையும் ஆக , மூர்த்தி, தலம் , தீர்த்தமாக இறைவன் விளங்குகின்றான் என்று உணர்த்துகிறார்.

இவ் வானும் குவலயமும் எல்லோமும்: இக் குவலயமும் வானும் என்று மாற்றிப் பொருள் கொள்ள வேண்டும். வான் என்றது, கயிலைக்கு கீழாகவும் பூவுலகத்திற்கு மேலும் உள்ள உலகங்கள். குவலயம் – பூவுலகம், வானும் குவலயமும் என்றது பருப்பொருள்கள் அனைத்தையும் கூறியது. எல்லோமும் என்றது , உலகில் உள்ள ஆன்மாக்கள்.

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி: படைத்தலை முன் வைத்துச் சொல்வதே முறை, ஆனால் காத்தலை முன்வைத்தது, பிறவியோடு உயிர்களைக் கூட்டுவது காத்தலாகிய பெருங்கருணையினால் என்பதை உணர்த்தவதற்காக. விண்ணுலகத்தையும், மண்ணுலகத்தையும், உயிர்கள் எல்லாவற்றையும் படைத்தும், காத்தும், ஒடுக்கியும் விளையாடுபவன். இறைவனின் ஐந்தொழில்களில் மறைத்தல் காத்தல் தொழிலிலும், அருளல் அழித்தல் தொழிலிலும் அடங்கும் முறையை ஒட்டி, காத்தும் , படைத்தும், கரந்து என்றும் முத்தொழிலில் அடக்கிக் கூறினார். இத்தொழில்களை இறைவன் எளிதில் செய்வதைச் சுட்டி ‘விளையாடி’ என்றார். முன் பாட்டில் கூறிய விளக்கங்களை ஒப்பிடவும்.

வார்த்தையும் பேசி: நீராடும்பொழுது, சிவமந்திரத்தை ஓதுவதும், சிவனடியையே சிந்தித்தலும் ஒரு முக்கிய சைவ மரபு என்று ‘வார்த்தையும் பேசி’ என்றார். வார்த்தை இறைவனின் புகழ் கூறும் சொற்களைக் குறித்தது. திருவைந்தெழுத்து என்றும் கூறலாம். “ஓர் வார்த்தையும் சொல சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்பது தாயுமானவர் வாக்கு (பராபரக் – 156)

வளைசிலம்ப: வளை – சங்கு, சிலம்ப – ஒலிக்க, கைகளில் அணிந்துள்ள சங்கு வளையல்கள் ஒலி செய்ய,

வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய: வார் – நீண்ட மேகலைகளை (மகளிர் இடையில் அணியும் ஏழு வரிசைகள் கொண்ட மணி - கலைகள் முதற்குறை)

நீராடும்போது கையில் அணிந்திருந்த வளையலும், இடையில் அணிந்திருந்த மேகலையும் ஒலி செய்தன என்றார். ஆர்ப்பரவம் – பேரொலி,

அணிகுழல்மேல் வண்டார்ப்பப்: கூந்தலில் அணிந்துள்ள மாலையில் மொய்த்துள்ள வண்டுகள் நீரில் மூழ்கும்போது மேலே எழுந்து ஒலி எழுப்பியது என்றார்.

பூத்திகழும் பொய்கை: தாமரை முதலிய நீர்ப்பூக்கள் நிறைந்து விளங்குகின்ற பொய்கை

குடைந்துடையான் பொற்பாதம் ஏத்தி: குடைந்து – கையால் துழாவி, இறைவனின் திருவடிகளைப் புகழ்ந்து பாடிக் கொண்டே மகளிர் நீரில் மூழ்குவதால் ‘உடையான் பொற்பாதம் ஏந்தி’ என்றார். “புண்டரிகப் பொய்கைக் காரிகையார் குடைந்தாடும்’ என்ற சுந்தரர் வாக்கு ஒப்பு நோக்கத் தக்கது.

இருஞ்சுனைநீர்: இருநீர் எனக் கூட்டி பெரிய நீர் என்று பொருள் கொள்ள வேண்டும், சுனைநீர் ஆடு என்றது, சுனை நீர் போல இனிமையும் தெளிவும், குளிர்ச்சியும் உடைய இப்பொய்கை நீரில் ஆடுவோம் என்றனர். ஆடுவோமாக என்ற சொல் ஈறு கெட்டு ஆடு என வந்தது.

மூர்த்தி தலம் தீர்த்தமாக விளங்குகின்ற இறைவனைச் சென்று அடைவார்க்கு, பேசுவார்க்கு, அகத்தூய்மையும், புறத்தூய்மையும், அதனால் விளையும் ஆனந்தமும், வீடுபேறும் கிடைக்கும் என உரைத்தார்.

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்………….13

இப்பாடலில் நீராடும் பொய்கையை உமையாகவும், சிவனாகவும் உருவகப் படுத்திக் (மாதொரு பாகனாக) கூறுகிறார் மணிவாசகப் பெருமான். முதல் இரண்டு அடிகளில் பொய்கை அர்த்தநாரீஸ்வரரை ஒத்து உள்ளது என்கிறார். மேலும் இவ்விரண்டு அடிகளும், பொய்கைக்கும், உமையொருபாகனுக்கும், உமைக்கும், பெருமானுக்கும் ஆக நான்கு வகைகளால் பொருள் காணலாம்.

பைங்குவளைக் கார்மலரால் – அன்றலர்ந்த புதிய குவளை மலர்கள், கார் மலர் – கரிய மலர், குவளையின் கரிய மலர்கள், செங்குவளை மலர்களை வேறுபடுத்தி கார் மலர் என்றார். இப் பொய்கையை இறைவிக்கு ஒப்பிடும்போது அவள் கண்களுக்கும், இறைவனுக்குச் சொல்லும்போது, கண்டத்தின் நிறத்திற்கும் பொருத்தப்படுகிறது.

“செய்யாடிய குவளைம் மலர் நயனத்தவளோடும் நெய்யாடிய பெருமான்” (1-15-1) ,”குவளைப் போற்கண்ணி’ (2-3-6) என்ற ஞானசம்பந்தர் வாக்குகளால் இறைவியின் கண்களுக்கு ஒப்பிட்டுக் கொள்ளலாம். “தென்தில்லை நின்றோன் மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின்றன” (கோவை – 162) என்ற வாக்கால் இறைவனின் கண்டத்திற்கும் குவளை மலரை ஒப்பிடலாம்.

மற்றும் இச்சொல் தொடர் நயன தீட்சையால் மலத்தை நீக்குவதை குறிப்பால் உணர்த்தியது.

செங்கமலப் பைம்போதால்: போது – மலரும் பருவத்தில் உள்ள அரும்பு, செங்கமலம் – செந்தாமரை (வெண் தாமரையை விலக்கும் பொருட்டு), பைம்போது – மெல்லிய அன்றலர்ந்த பூக்கும் நிலையில் உள்ள மலர். இறைவனுக்கு ஒப்பிடும்போது அவன் திருமேனி வண்ணத்திற்கும், இறைவிக்கு ஒப்பிடும்போது அவள் திருவடிகளைப் போன்று இருப்பதாகவும் செந்தாமரை மலர் உள்ளது என்றார். இந்த பதிகத் தொடர் மானச தீட்சையால் மலம் கழிவதைக் குறிப்பால் உணர்த்துகிறது.

அங்கங் குருகினத்தால்: அம் கம் குருகின் நத்தான் எனப் பிரித்து அழகிய நீரிலுள்ள நீர்ப் பறவைக் கூட்டங்கள், என்று கொள்ளவும். அங்கம் உடல் உறுப்புகளில் சிறந்ததான தலை என்றும், குருகு இனம் கொக்கைக் குறிப்பதாகவும், இறைவனை ஒப்பிடும்போது கொள்ளலாம். கொக்கு இங்கு ஆகுபெயராக கொக்கின் இறகைக் குறித்தது. இறைவன் கொக்கு உரு எடுத்து வந்த குரண்டாசுரனை வதைத்து வெற்றி கொண்டு அதன் இறகை தன் சென்னியில் சூடிக்கொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இச்சொல் தொடர் பரிச தீட்சையால் மலம் நீங்குவதைக் குறிப்பால் உணர்த்துகிறது.

பின்னும் அரவத்தால்: பின்னும் – பின்னரும், குவளை செங்கமல மலர் ஆகியவைகளுடன் அரவத்தையும் கொண்டு (நீர்ப் பாம்பு). இறைவனின் திருமேனியில் பின்னிக்கிடக்கும் பாம்புகள்போல என்றும், இறைவிக்கு இச்சொல், பாம்பு போன்று பின்னப்படும் கூந்தலையும் குறித்தது. அரவம் என்றால் வாய்மொழியால் வரும் ஒலி. சாத்திர தீட்சையும், வாசக தீட்சையும் வாயால் செய்யும் உபதேசத்தினால் மலம் நீங்குவதைக் குறிக்கும். இந்த இரண்டு தீட்சைகளும் இங்கே ‘அரவம்’ என்ற சொல்லால் உணர்த்தப் படுகின்றன.

தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்: பொய்கையில் நீராடுவோர் தங்களிடமுள்ள அழுக்கை நீக்கிக் கொள்ள வந்து அடைவதால், என்பது பொய்கைக்கு பொருந்தும். பொய்கையை இறைவிக்கு ஒப்பிடும்போது, தங்கள் ஆணவ மலத்தைக் கழுவிக்கொள்ள, முதலில் இறைவன் திருவருள் வடிவமாகிய அம்மையை அணுகினர். திருவருளாகிய குணத்தை உடைய இறைவனை அடைவர் என்று இறைவனுக்கு ஒப்பிடும்போதும் கூறப்பட்டது. இவ்வாறு பொய்கையை ஒப்பிட்டுக் குறிக்கப் பட்டது.

எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த: பிராட்டியும் கோனும் போன்று இசைந்த என்னும் சிறப்பால் உமையொருபாகனாக திருமேனியைக் காண அருள் புரிந்தார்.

பொங்கு மடுவில்: பொங்குதல் – நீர்மட்டம் மேலோங்குதல், மடு – படித்துறை கட்டப்படாத நீர்நிலை, குளம்,

புகப்பாய்ந்து பாய்ந்து: நீர் விளையாட்டில் கொண்ட ஆர்வத்தினால் பலமுறை நீரில் குதித்து, மூழ்கி, நீந்துவர். இதையே “பாய்ந்து பாய்ந்து” என்றார் மாணிக்கவாசகப் பெருமான். புக – நீரினுள் மூழ்க, ‘பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்து நம்’ என்பது ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு சிவனருளால் மும்மலத்தையும் நீங்கப் பெறவேண்டும் என்ற குறிப்பு.

நம் சங்கம் சிலம்ப: சங்கிலிருந்து அறுத்தெடுத்த வளையல்கள், சிலம்ப – ஒலிக்க. நீராடும்போது,

சிலம்பு கலந்தார்ப்ப: நீர் விளையாட்டின் காரணமாக, கால்களில் அணிந்துள்ள சிலம்புகள் குலுங்கி, உள்ளே உள்ள பரல்கள் ஓசை செய்ய. கைகளில் அணிந்த சங்கு வளையல்களின் ஒலியோடு காலில் அணிந்த சிலம்புகளின் ஒலியும் கலந்து ஒலித்தன.

கொங்கைகள் பொங்க: பொங்க – பூரிக்க மகிழ்ச்சியால், உடல்கள் பூரித்தன, அதனால் கொங்கைகளும் பூரித்தன.

குடையும் புனல்பொங்கப்: குடையும் – மூழ்கி நீராட, அனைவரும் மூழ்கி நீராடுவதால், நீரின் மட்டம் மேலும் உயர்ந்தது.

பங்கயப் பூம்புனல்பாய்ந்து: பங்கயம் தாமரை மலரைக் குறித்தது. காரணப் பெயர், பூம்புனல் – தாமரை மலர்களால் அழகுபட நிற்கும். பாய்ந்து – நீரில் மூழ்கி, முன் அம்மையப்பராகக் காட்சி அளித்த அதே பொய்கை ஆழ்ந்து மூழ்கும்போது சிவம் முற்பட்டுத் தோன்றுகிறது என்பது தேசிகரின் கருத்து ஆகும்.

இப்பாடல் பல சைவசித்தாந்தக் கருத்துகளை நமக்குப் பட்டியலிட்டு காண்பிக்கிறது. திருவெம்பாவை பதிகப் பாடல்களில் இப்பாடல் சிறப்பு பெற்றது.

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்……………..14

இப்பாடல் மகளிரின் நீராடுவதைத் தொடர்ந்து விளக்குகிறது. அத்துடன் இறைவனுடைய திருக்கூத்தின் மகிமையையும் புகழ்ந்து உரைக்கின்றது. முதல் இரண்டு அடிகளில் மகளிர் நீராடும்போது நிகழ்வதைத் தொகுத்துக் கூறினார்.

காதார் குழையாட: நீரில் குதித்து விளையாடும்போது அனைத்து உடல் உறுப்புகளும் அசைகின்றன. காதில் அணிந்துள்ள குழை முதலியனவும் ஆடுவதை இங்கே பதிவு செய்கிறார். குழை என்பது வட்ட வடிவத்தில் காதில் அணியும் ஒரு அணிகலன். காது ஆர் – காதில் பொருந்திய,

பைம்பூண் கலனாட: ‘பூண் பைங்கலன் ஆட’ என்று மாற்றிப் பொருள் காணவும். அணிகலன்கள் பசும் பொன்னால் செய்யப்பட்டதால் ‘பைங்கலன்’ என்றார்.

கோதை குழலாட: மாலையும் கூந்தலும் ஆடவும், குழல் கோதையாட என்று மாற்றி, கூந்தலில் அணிந்த மாலை அசைய’ என்றும் பொருள் கொள்வர்.

“கையார் வளை சிலம்பக் காதார் குழையாட
மையார் குழல்புரளத் தேபாய வண்டொலிப்ப”

என்ற அம்மானைப் பாடலுடன் ஒப்பிடுக.

வண்டின் குழாமாட: நீராடும்போது, கூந்தலிலும், மாலையிலும், தேன் உண்ணும் பொருட்டு அமர்ந்திருந்த வண்டுகள் எழுந்து பறக்கும் என்று இவ்வாறு கூறினார்.

மேலே சொல்லப்பட்டவைகளில், குழை, கலன், குழல் என்பவை உயிரற்ற பொருள்களாகும். அவை சேர்ந்த உறுப்புகள் ஆடுவதால் இவை ஆடுகின்றன ‘ஆட’ என்றார். வண்டு பாடும் இயல்புடையது. ஆனால் வண்டுகள் குழல் மேல் உள்ள பூவில் பாடுவதை மறந்து இருந்தன. கூந்தல் நீரில் மூழ்கும்போது அவை எழுந்து ஆடுகின்றன. இந்த மலர்களில் அமர்ந்துவிட்ட காரணத்தால் வண்டுகள் பாடுவதை மறந்தன. அதேபோல் ஆன்மாக்களாகிய நாமும் உலக இன்பத்தில் ஆழ்ந்துவிட்டதால் இறைவன் புகழைப்பாட மறந்தோம். வண்டுகள் நீரில் மூழ்கும்போதும், எழுந்து வெளி வரும்போதும் மறுபடியும் பூவில் அமரலாம் என்று அங்கேயே சுற்றுகின்றன. இதேபோல் நாம் அனுபவிக்கும் உலக இன்பங்கள் நம்மைவிட்டு போய்விட்டாலும், அவை நமக்கு மீண்டும் கிடைக்கும் என்று அதைச் சுற்றி வருகின்றோம். கூந்தலிலும் மலரிலும் நாட்டம் கொண்ட வண்டுகள் அடுத்துள்ள சீதப்புனலில் குளிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாது கூந்தலை எதிர்பார்த்து நிற்பதுபோல, இறைவன் திருவருள் சீதப்புனல் போல் நம்மைச் சுற்றியிருந்தாலும், அதில் மூழ்காமல் நிலையற்ற இன்பத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறோம் என்ற மறைபொருளை இங்கே உணர்த்துகிறார். (அ . ச . ஞ – திருவாசகம் சில சிந்தனைகள்) .

சீதப் புனலாடி: குளிர்ந்த நீர், சிற்றம் பலம்பாடி: ஞானப் பரவெளி, தில்லையில் கூத்தப் பெருமான் எழுந்தருளியுள்ள அரங்கம். சொல், பொருள் கடந்து நிற்கும் அப்பரவெளியைப் பாடுக என்கிறார். ‘சீதப் புனலாடி சிற்றம்பலம் பாடி’ என்று இணைந்த எண்ணம் அடிகளுக்கு உண்டான காரணம் என்ன? திருப்பெருந்துறையில் நீத்தல் விண்ணப்பம் செய்து அமர்ந்திருந்த இடம் சீதப்புனலின் கரை, ‘தில்லைக்கு வருக’ என்று பெருமானின் ஆணை பிறந்ததும் அங்குதான். ஆகையால் அடிகளுக்கு இணைந்த சிந்தனை எழுந்தது.

வேதப் பொருள்பாடி: மறைகளில் கண்ட இறைவனின் பொருள்சேர் புகழைப் பாடி, வேதங்கள் ஒலிகளுடைய தொகுப்பு,

அப்பொருளா மாபாடி: அப்பொருளாய் நிற்கும் இறைவனை பாடி, பல்வேறு ஒலிகளும், பொருள்களும் வேதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தாலும், அவை அனைத்தும் அவன் ஒருவனே என்பது தோன்ற இவ்வாறு பதிவு செய்தார். ஆமாறு – உபாயம், ஆகும் முறை, கடைகுறைந்து ‘ஆமா’ என்று வந்தது, வேதத்தில் சொல்லப்பட்ட பொருளாகிய சிவம் ஆன்மாக்களின் அநுபவத்திற்கு வழி காட்டுவதை வியந்து பாடுகிறார். மலபரிபாகம் பெற்ற ஆன்மாக்கள் சிவானந்தத்தில் அடங்கி தன்முனைப்பு அற்று, சிவமாகவே நின்று இன்பம் நுகர்வதான அநுபவத்தைக் கொடுப்பதை பாடினார்.

சோதி திறம்பாடி: சோதி – ஒளி, சோதி அருஉருவத்தையும், வேதப்பொருள்
அருவத்தையும் குறித்து நின்றன. திறம் – வழிபடும் ஆன்மாக்களின் பக்குவநிலைக்கேற்ற வகையில் திருமேனி தாங்குதல். சோதியில் பௌதிகச் சோதி, (சூரியன், சந்திரன், அக்கினி) தற்சோதி என்று இரு வகை உண்டு, இங்கு குறிப்பிடுவது தற்சோதியாகிய, எல்லா ஒளிப் பொருள்களுக்கும் ஒளி தருவதாய், புற அக இருளாகிய ஆணவத்தையும் அகற்ற வல்லதான ஞான சொரூபமான சிவச்சோதியைக் குறித்தது.

சூழ்கொன்றைத் தார்பாடி: சோதி உருவைக் காணமுடியாத ஆன்மாக்களுக்கு, உரு எடுத்து மாலை முதலியவற்றை அணிந்து தோன்றுவான் என்று அவன் அடையாள மாலையாகிய கொன்றை மாலையைச் சொல்லும் பொருட்டு, ‘சூழ் கொன்றைத் தார் பாடி’ என்றார். தார் – மார்பில் அணியப் பெறும் மாலை வகைகளில் ஒன்று. சூழ் – திருமுடியிலும், மார்பிலும் அணிதல்,

‘வேதப் பொருள் பாடி’ என்று இறைவனது ஞான மயமான அருவ நிலையையும், ‘சோதி’ என்று அரு உருவ நிலையையும், ‘கொன்றைத் தார் பாடி’ என்று உருவ நிலையையும் இங்கே நமக்கு உணர்த்தினார்.

நம்முடைய இறைவழிபாடு என்பது உருவ வழிபாட்டில் தொடங்கி. மேன் நிலை அடைந்து, அருவ நிலையில் உள்ள இறைவனை சிந்திப்பது ஆகும். ஆனால் இங்கே அடிகளார் இதனைத் தலைகீழாக மாற்றுகிறார். ‘சிற்றம்பலம் பாடி’ என்று சொல், பொருள் ஆகியவற்றைக் கடந்து நிற்கும் பர வெளியைப் பாடி, ‘ சூழ் கொன்றைத் தார் பாடி’ என்று சாதாரண மக்களின் கட்புலன்களுக்கு எளிதில் அறியக் கூடிய கொன்றை மாலையைக் கூறுகிறார்.

ஆதி திறம்பாடி: புனருற்பவ காலத்தில் அனைத்தையும் தோற்றிவிப்பவன் ஆகையால் ஆதி என்றார். இறைவன் எப்பொருளுக்கும் முதல்வனாய் இருப்பவன். அநாதியான பரசிவம் உயிர்களோடு ஒன்றியிருந்து பிறவியால் வரும் இன்பமும் துன்பமும் கெட, பேரின்பத்தை வரையாது கொடுக்கும் அருள் திறத்தை குறிக்கும்பொருட்டு, ‘ ஆதித் திறம் பாடி’ என்றார். “அடங்கற்களி யாவர்க்கும் அன்பர்க்களிப்பவன் துன்ப இன்பம் பட” (கோவை – 297) என்று பின்னர் கூறுவதையும் காணலாம்.

அந்தம் ஆமா(று) பாடி; தான் எல்லாவற்றிற்கும் முடிவாய் விளங்குபவன் என்பதை இவ்வாறு உரைத்தார்.“அந்தமும் ஆதியுமாகிய அண்ணலார்”(1-39-1), “ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்” (6-23-9) என்ற தேவாரச் சொல் தொடர்களை இங்கே ஒப்பிட்டு நோக்கலாம்.

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்: பேதித்தல் – நம்மை மறைப்புச் சத்தியாய் வினைப் போகங்களில் அழுத்துதல், வளர்த்தல் – நம் வினைக்கு ஏற்ப இன்ப துன்பங்களை நுகரச் செய்தல், எடுத்தல் – வினைச் சுழலில் ஆழ்ந்து போகாதவாறு கைகொடுத்து தூக்குதல், பெய்வளை – வளையலணிந்த பெண், உமையம்மையை உணர்த்திற்று.

முத்தி அடைய வேண்டும் என்ற எண்ணம் பெருகும்போது, ஞானம் கைகூடும். இருவினை ஒப்பு ஏற்பட்டு, மலபரிபாக நிலை ஏற்படும். இந்த நிலை எய்திய பின் சத்திநிபாதம் (இறையருள் வீழ்ச்சி) உயிருக்கு நிகழும். சத்திநிபாதம் நான்கு வகைப்படும் – மந்ததரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என்று.
மந்ததரம் – அரக்கு வெய்யிலில் உருகுவதுபோல

மந்தம் – மெழுகு வெய்யிலில் உருகுவதுபோல

தீவிரம் – நெய் சூட்டினால் இளகுவதுபோல

தீவிரதரம் – நெய் நெருப்பிலிட்டதும் உருகி ஒன்றாவதுபோல

பேதித்து என்பது சத்திநிபாதத்தைக் குறிக்கிறது. உயிரின் தன்மைக்கேற்ப நான்கு வகைகளாக நிகழும் சத்திநிபாதம் இறைவியின் பெருங் கருணையின் வெளிப்பாடு. மேலே குறிப்பிட்ட அரக்கு, மெழுகு போன்றவை ஆன்மாக்களின் பக்குவ நிலைகளுக்கு ஒப்பிடப்படுகிறது. அவரவர் பக்குவ நிலைக்கு ஏற்ப இன்ப துன்பங்களைத் தந்து அவர்களை உயர்த்துவது இறைவி. இவ்வாறு உயிர்களுக்கு தக்கவாறு அருள் புரிவதையே ‘நம்மை வளர்த்தெடுத்து’ என்றார்.

பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்: இவ்வாறு நம்மை காக்கும் சத்தியின் திருவருளாகிய பாதங்கள் நம்மை ஆட்கொள்ளும் திறனைப் புகழ்ந்தவாறு. திறம் – ஆன்மாக்களை உய்விக்கும் பெருமை, இறைவன் அருட் திறத்தையே பாடி வந்தவர் திருவருட் சத்தியின் அருட்திறமும் நினைவில் தோன்ற, சத்தியின் பாதத் திறம் பாடி ஆடுக என்றார்.

சீதப்புனல் ஆடி, சிற்றம்பலம் பாடி, வேதப் பொருள்பாடி, அப்பொருள் ஆமா பாடி, சோதியும் பாடி, கொன்றைத் தார் பாடி, ஆதித் திறம் பாடி, அந்தம் ஆமாறு பாடி, பெய்வளைதன் பாதத் திறம்பாடி நீராடுவோமாக என்றதனால், நீராடும் மகளிர் முதலில் ஒருமுறை மூழ்கி தம்மைத் தூய்மை செய்துக் கொண்டு, பின்னர் இறையைப் புகழ்ந்து பாடி, மீண்டும் மூழ்கி எழுந்தனர் என்பது தெரிய வரும்.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான்பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்……………15

இம்மகளிர் சிவபெருமானது பேரின்ப நிலையை வியந்து பாடி ஆடியதைக் குறித்தது. ‘வாருருவப் பூண்முலையீர்’ என்பதை முதலில் வைத்து அமைத்தால் பொருள் விளங்கும்.

தலைவனிடம் அன்பு பூண்டு அதனால் அரற்றலும், பிதற்றலும் ஆகிய செயல்கள், முதிர்ந்த மங்கையர்களுக்கு உள்ள இயல்பாகும். ஒத்த வயதுடைய மங்கையரிடம் அவற்றை பகிர்ந்துக் கொள்வதற்காக, ‘வாருருவப் பூண்முலையீர்’ என்று அவர்களை அழைக்கிறாள்.

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே: ஓரொருகால் – ஒரு சில சமயங்களில், ஒவ்வொரு சமயம் எம்பெருமான் எம்பெருமான் என்று நம் பெருமானின் புகழை வாய் ஓயாமல் சொல்கிறாள். முத்திய காதலால் மூர்ச்சித்து, நினைவு வந்த போதெல்லாம் எம்பெருமான் எம்பெருமான் என்று அவன் புகழை ஓதுவதும் உணர்த்தப் படுகிறது. இது மயங்கி அரற்றும் நிலை என்பதாம்.

நம்பெருமான் சீரொருகால் வாயோவாள்: வாய் ஓவாள் – வாய்க்கு ஓய்வு தராமல் இறைவன் புகழைச் சொல்லிக் கொண்டே இருப்பள். ஓவாமை – ஒழியாமை, சிவானுபவ நிலையிலுள்ள பெண் அடிக்கடி எம்பெருமான் என்று பலகாலும் கூறுவதால் இவ்வாறு கூறினார். “வாக்கு” முழுமையும் இறைவனோடு ஒன்றுதல்,

சித்தங் களிகூர நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்ப: இடைவிடாது சொல்லுவதால் ஓர் இன்பம் பிறக்கிறது. அதனால் சித்தம் களிப்படைகிறது. ஆனந்தக் கண்ணீர் இரண்டு கண்களிலிருந்தும் வழிகின்றது. நாமம் கூறக் கூற, மனம் சிறிது சிறிதாக அடங்கத் தொடங்குகிறது. எண்ணங்கள் மெல்ல மெல்ல அடங்கி தியான நிலை கைகூடுகிறது. சிதாகாசத்தில் இறைவனோடு மனம் முழுமையும் ஒன்றுகிறது. ஆனந்த நிலையின் அநுபவம் கிட்டுகிறது. ஒருகால் – காலத்தைக் குறித்து, ஒருகாலும் என்று விரித்துக் கொள்க. ஓவா – நீங்காத, இடையீடு இல்லாமல், நெடுமை – ஆழம், மிகுதி, பனிப்ப – அரும்ப, “நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும், நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி” (புணர்ச்சிப் பத்து ) என்று பின்னர் கூறுவதைக் காண்க.

பாரொருகால் வந்தனையாள்: ஒருகால் பார் வந்தனையாள் என்று மாற்றுக. இப்போது நிலத்தில் ஒரு முறை வணங்கி எழாது கிடக்கின்றாள். பார் – பூமி, ஒருகால் வந்தனை – ஒரே மாதிரியாகச் செய்யப் படும் வணக்கம், இறைவனை உடலால் எந்நேரமும் தொழுது வணங்கும் நிலை. இது “காயம்” என்ற உடலால் வணங்கும் நிலை. பெண்களுக்கே உரித்தான ஐந்துறுப்பு வணக்கம் என்பர்.

‘வாயோவாள்’ சித்தம் களி கூற, வந்தனையாள், என்ற மூன்றினாலும், முறையே மனம், மொழி, மெய்களால் சிவனை சிந்தித்து நின்றது உணர்த்தப் பட்டது.

நெக்கு நெக்குள் உருகி உருகி
நின்றும் இருந்துங் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதுந் தொழுதும் வாழ்த்தி
நானா விதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர் போலுந் திருமேனி
திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல் லோஎன்
பொல்லா மணியைப் புணர்ந்தே. (27- புணர்ச்சிப் பத்து – 8)

என்ற பின்வரும் பாடல் இந்நிலையை நன்கு உணர்த்துகிறது.

விண்ணோரைத் தான்பணியாள்: ஆனந்தக் கண்ணீர் பொழிந்து, சிவனே தன் ஆன்ம நாயகன் என்ற உறைப்பு மனதிலே தோன்றுவதால், பிற தெய்வங்களைப் பணிந்து தொழுவதில்லை என்றார். “தொழுவனோ பிறரைத் துதிப்பனோ, எனக்கோர் துணையென நினைவனோ சொல்லாய்” (வாழாப்பத்து – 10) என்ற அடிகளாரின் வாக்கை இங்கே நோக்கவும்.

பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்: திருமால், பிரமன் முதலிய தேவர்களின் தலைவர்களுக்கும் இறைவனாவதால் இங்கே ‘பேரரையன்’ என்றார். அரையன் – அரசன், பேரரையன் – மாமன்னன், பித்து ஒருவர் – இவ்வாறான பேரரையனான இறைவனிடம் மானிடச் சிறுமி ஒருத்தி மையல் கொள்வது வியப்புக்குரியது என்று ‘இங்ஙனே’ என்றார்.

ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்: இவ்வாறு மனம் மொழி மெய்களால், சிவன்பால் ஈடுபட, ஆட்கொண்டு அருள் செய்யும் தேவர் யாரொருவர் உளர், ஒருவரும் இல்லை, தாள் = ஆகையால் இவ்வாறு ஆட்கொள்ளும் நம் சிவபெருமானது திருவடிகளை, வீடுபேறு,

சிவபெருமானின் திருவடிகளை முதலில் பொதுவாகச் சொல்லியவள், அதன் பயனாகத் தன்னை மறந்த பேரன்பு உடையவள் ஆயினாள். இவ்வாறு தன்னை வந்து அடைந்தவர்களை ஈர்த்து பேரருள் புரியும் தேவர் வேறு எவர் உளர் என்றாள் வியந்தபடி. வித்தகர் – மேலோர், பெரியோர், சதுரப்பாடு உள்ளவர். (ஆற்றல் மிக உடைமை),

வாயார நாம்பாடி: பாடுவதால் ஓர் இன்பம் தோன்றுதலை ’வாயார நாம் பாடி’ என்றார். நாம் என்றது நோன்பு நோற்கும் கன்னியர்கள், வாயார – வாய் நிரம்ப, “வாயாரத் தன்னடியே பாடும் தொண்டர்” (6-8-5), தாள் வாயார நாம் பாடி என்று, நம்மையும் ஆண்டருளுமாறு இறைவன் திருவடிகளைப் பாடி நீராடுவோமாக என்றனர்.

ஏருருவப் பூம்புனல்பாய்ந்து: ஏர் – அழகு, எழுச்சி, ஏர் உருவப் புனல் – எழுந்து தோன்றுகின்ற உருவத்தையுடைய நீர் என்றது அருவி நீரை, பூம்புனல் - அழகிய நீர், பூக்களை உடைய நீர், பாய்ந்து ஆடு – நீரில் விழுந்து ஆடுவோமாக, அழகே வடிவான இத்தாமரைப் பொய்கையில் தாவி மூழ்கி நீராடுவோம் என்றார்கள்.

அழகிய தோற்றமுடைய மலர்கள் நிறைந்துள்ள உள்ளமாகிய பொய்கையில் ஆழ்ந்து நீராடி (தியானித்து) வித்தகர் தாள் போற்றுமாறு கூறுகின்றார். இங்கே மலர்கள் மணம் வீசும் என்று சொல்லாது ‘அழகிய தோற்றமுடைய’ என்று வருகிறது. யோக நெறியின் ஒவ்வொரு படியிலும் பெருமானின் தரிசனம் வெவ்வேறு முறையில் கிட்டும். இங்கே அழகிய தோற்றமுடைய மலர்கள் சிவ தரிசனத்தை மறைபொருளாக குறித்தது.

முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்…………….16

இத்திருப்பாட்டு, இம்மகளிர் உலக நலத்தின் பொருட்டு மழையை நோக்கி வேண்டியது. அவ்வாறு வேண்டும்போது தம் பெண்மைக்கேற்ப, இறைவியின் சிறப்பு தோன்றக் கூறுவர். அம்மையின் அருளைப் போல மழை பொழிக என்று வேண்டப் படுகிறது. நாடு வளம் சுரக்க மழை வேண்டிய பொதுப்பயனும், திருவடிப்பேறாகிய சிறப்புப் பயனும் தோன்றுமாறு பாடியதைக் காணலாம். ‘மழை’ என்ற சொல்லை பாட்டின் ஆரம்பச் சொல்லாகச் சேர்த்து பொருள் கொள்ள வேண்டும். இறைவன் அம்பிகையின் மூலமாகவே உயிர்களுக்கு அருளுவான் என்பதை பதிவு செய்கிறது இப்பாடல்.

மழை முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து: முன்னி – அடைந்து, சுருக்கி – குறைத்து, முன் இக்கடலைச் சுருக்கி – முதற்கண் மேகம் கடல் நீரை முகந்து நீரை குறையச் செய்து, கார் மேகமாக மேலே எழும்பி, மழை என்றது காரணப் பெயராக மேகத்திற்கு ஆயிற்று.

‘நெடுங்கடலும் தன்னீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான் நல்காதாகி விடின் ‘ (குறள் 16)

ஏன்ற திருக்குறள் இங்கே காணத்தக்கது.

உடையாள் என்னத் திகழ்ந்து: மேகம் விண்ணில் எழுந்தவுடன் நீல நிறம் பெற்று, எம்மையெல்லாம் அடிமைகளாக கொண்டவளாகிய உமாதேவியாரின் நிறம் கொண்டு விளங்கியது என்றார்.

எம்மை ஆளுடையாள்: எம்மை ஆளுதல் உடையவள் என்றது, உலகியலை நீக்கி தன் வழி ஒழுகச் செய்பவள் என்று பொருள் கொள்ளலாம். “உடையாள் உந்தன் நடுவிருக்கும்’ என்று மணிவாசகரின் பதம் இங்கு நினைவுக்கு வருகிறது.

இட்டிடையின் மின்னிப் பொலிந்து: விண்ணில் பரந்து கிடந்த மேகம், உமாதேவியாரின் சிறிய இடையைப் போல மின்னி விளங்கி, தோன்றி மறைந்து,

‘சிற்றிடை உமையொரு பங்கன்’ (3-23-2)
‘மின்னிலங்கு நுண்ணிடையாள் பாகத்தாரும்’ (6-59-10)

ஏன்ற தேவார வரிகள் ஒப்பு நோக்க வல்லது. பொலிந்து – பொலிவு பெற்று, சிற்றிடை என்பது இளம் பருவத்தை குறிப்பது. உமையம்மை கால தத்துவத்தைக் கடந்து என்றும் மாறாத இளம் பருவத்தினள் என்ற குறிப்பு தோன்ற உரைத்தார்.

எம் பிராட்டி திருவடிமேல் பொன்னம் சிலம்பில்: மின்னலுடன் வரும் இடி ஓசை, பெருமாட்டியின் திருவடியில் அணிந்துள்ள சிலம்பின் ஓசை போன்று உள்ளது. சிலம்புதல் – ஒலித்தல், “சிலம்பும் செறி பாடகமும் செழுங்கின் கிணித் திரளும், அலம்புந் திருவடி காண்க’ (1-92-12) என்ற நாவுக்கரசர் வாக்கை இங்கே ஒப்ப நோக்கலாம்.

திருப்புருவம் என்னச் சிலைகுலவி: சூரிய ஒளியில் மழை பெய்யும்போது, எதிர்த்திசையில், வானவில் தோன்றும். வானவில்லின் ஒளி மற்ற மேகங்களுள் நுழைந்து மற்றொரு வானவில்லைத் தோற்றுவிக்கும், இந்த இரண்டு வானவில்களும் உமையம்மையின் இரண்டு புருவங்களுக்கு ஒப்பிடப் பட்டது. சிலை – வில், குலவி – வளைத்து, நீர் முகந்த மேகம் எம்பிராட்டியின் திருப்புருவம்போல் வில்லை வளைக்கின்றது. புருவத்திற்கு வில் உவமை. ‘விற்பகைத்து ஓங்கும் புருவத்திவள்’ (கோவை – 168) என்ற வாசகம் காண்க.

தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு: பூவின் மணம் போலவும், அங்கியின் சூடு போலவும் திருவருட்சத்தியான அம்மை இறைவனை விட்டு பிரியாது இருக்கின்றவள் என்று, ‘தன்னில் பிரிவிலா எங்கோமான்’ என்றார். இறைவன் அம்மையைப் பிரியாதுபோல, அடியார்களும் இறைவனை இடைவிடாது எண்ணிக் கொண்டிருக்கின்றனர் என்பதை’ எங்கோமான் அன்பர்க்கு’ என்றார். அன்பர் என்பது சீவன் முத்தராய்த் திகழும் மெய்யன்பர்களைக் குறித்தது. நமக்கு என்றது கன்னியர்களைக் குறித்தது. அன்பர்க்கும், நமாகும் என்ற உம்மைகள் தொக்கி நின்றன.

“தெய்வ நாயகன் நீறணி மேனிபோல் சென்று
பௌவ மேய்ந்து உமை மேனிபோல் பசந்து பல்லுயிர்க்கும்
எவ்வ மாற்றுவான் சுரந்திடும் இன்னருள் என்னக்
கௌவை நீர் சுரந்து எழுந்தன கனைகுரல் மேகம்.” (தி.வி.புரா. நாட்டு – 2)

என்று பரஞ்சோதி முனிவர் பாடலும் இங்கே காணலாம்.

முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே: முன்னி – முற்பட்டு, முன் – முதன் முதலாக, சுரக்கும் – சுரந்துக் கொண்டிருக்கும், அடியார்கள் மீதும், நம்மீதும் கருணை வைத்து, சத்தி, தானே வந்து முற்பட்டு, முதன் முதலாகச் சுரக்கின்ற, ஆன்மாக்களுக்கு இன்பம் தரக்கூடிய, இன்னருள் போல, (சத்தி நிபாதம்) வளர்மதியின் ஒளி வளர்ந்து முழுநிலவு காலத்து, இருள் தேய்ந்து மறைவதுபோல திருவருள் சக்தி நம் மேல் பதிந்து மலத்தை முற்றிலும் நீக்கி உயிர்களை இறைவன் திருவடியில் சேர்த்து உய்விக்கும். வேனில் கால வெப்பத்தில், மழை எற்படுமானால் வெப்பம் தணிந்து தழைத்துப் பொலிதலைப் போல நாமும் தளிர்க்கலாம் என்று ‘முன் சுரக்கும்’ என்றார்.

என்னப் பொழியாய்: என்ன – போல, மழை போதிய அளவு பொழிய வேண்டும் என்ற வேண்டுதல், உலகம் செழிப்படைந்து எல்லா வளங்களையும் பெற்று, தானம் தவம் இரண்டும் ஓங்க, இந்நெறிகளை உயிர்கள் கடைப் பிடிக்க இன்னருளுக்கு உட்பட்டு மேற்கதி அடையும் என்றார்.

இப்பாடலில் இறைவி ஐந்து முறையாகக் குறிக்கப் படுகிறார்.

உடையாள் – கிரியா சக்தியாக இருந்து உயிர்களை இருவினைக்கு ஏற்ப உடலோடு கூட்டிச் செயல் படுத்துவது, கருவினுள் மயங்கிக் கிடக்கும் குழந்தைபோல, அநாதி நித்தியமான உயிர் ஒடுங்கும் காலத்து, மாயையில் அழுந்தி, ஒன்றும் அறியாமல் கிடக்கும்போது இறைவி அவ்வுயிரை தன் உடைமையாகக் கொள்கிறாள்.

எம்மை ஆளுடையாள் – உயிர் தோன்றிய காலத்தில் இருந்து, ஊழிக்காலம் வரை, உயிர்களாகிய நமக்கு தனு கரண புவன போகங்களைத் தந்து, சிறிது அறிவு விளங்கச் செய்து, அவளுக்கு அடிமையாவதற்கு தகுதியை உண்டாக்கும் நிலை. உலக இன்பத்தை விட்டு பேரின்ப நிலை பெறுவதே சிறந்தது என்ற எண்ணத்தை உண்டாக்கி நிற்பவள்.

எம்பிராட்டி – பிறந்த உயிர்கள் இவ்வுஉலகில் உழன்று நிற்கும் போது, இருவினை ஒப்பும், மலபரிபாகமும் குருவருளும் தந்து திருவருளில் திளைக்கச் செய்வதனால்.

நந்தம்மை ஆளுடையாள் – இந்த மூவகை வடிவாக கலந்து நின்று திரோதான சத்தியாய், நமக்கு பரிபாகம் கிடைக்கச் செய்யும் ஆதிசத்தியாய் நிற்பதை இவ்வாறு கூறினார்.

அவள் – இருவினை ஒப்பு நிலை அடைந்து, பரிபாகமுற்று சிவாநுபவத்தில் திளைக்கச் செய்யும் நிலையை அடைமொழி ஏதும் இன்றி ‘அவள்’ என்றார்.

உடையாள், எம்மை ஆளுடையாள், நந்தம்மை ஆளுடையாள் என்று குறிக்கப் படுகிறாள் இறைவி. உலக ஆன்மாக்களுக்கு அம்பிகை அருள் செய்யும் பான்மை விளக்கப் படுகிறது.

இச்செயல்கள் அனைத்தும் பரிபாகம் பெற்ற ஆன்மாவின் கூற்றாகவே கருதி, உடையாள் அவள் என்றபோது ஒன்றிய நிலையிலும், ஆளுடையாள் எம்பிராட்டி என்றபோது அநுபவ நிலையிலும், ஒன்றாயும் வேறாயும் இருந்து திருவருளைத் துய்க்கும் நிலை கூறப்பட்டது.

திருப்பாவையில் ‘ஆழிமழைக் கண்ணா’ என்னும் திருப்பாடல் இக்கருத்தைத் தாங்கி நிற்கின்றது.

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்……………17

பேரானந்த நிலையில் இறைவனோடு ஒன்றுதலாகிய இன்பம், நம் போன்ற இவ்வுலக ஆன்மாக்களுக்கே கிட்டும். தேவர்கள் நினைத்தாலும் அடைய முடியாத இன்பம் இது. யோக நெறியைப் பற்றி ஆழமாக அறிந்தவர்கள் மட்டுமே இதை உணரமுடியும். ஆகையாலே மானிடப் பிறவி அறிது என்றனர்.

திருவருள் மழையால் உலகமும் உயிரும் எய்தும் இன்பத்தைப் பாராட்டுகிறார். கன்னியர் பலர் நீராட, ஒருத்தி மட்டும் குளிருக்கு அஞ்சி கரையில் நிற்க, அவளை நோக்கிக் கூறியதாக அமைந்துள்ளது. எல்லோரும் பொய்கையில் மூழ்கி சிவபோகத்தில் ஆழ்ந்திருக்கும்போது நீ மட்டும் தனித்து இருக்கலாகாது, உனக்கும் அத்தகுதி உண்டு என்பதாக ‘கொங்குண் கருங்குழலி’ என்றார்கள். சிவமணம் பூத்த சிந்தையும், பரிபாகச் சிறப்பும் உடையவள் என்பதை உணர்த்த இவ்வாறு அவள் விளிக்கப் பட்டாள்.இதை பாட்டின் முதலில் வைத்து விளியாகக் கொள்ளலாம்.

கொங்குண் கருங்குழலி – இயல்பாகவே நறுமணமுடைய கரிய கூந்தலை உடைய உமையம்மையாரைக் குறிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். கொங்கு – வாசனை, மணம், கொங்குண் குழல் – மணம் தங்கியுள்ள கூந்தல், கொங்கு என்றால் தேன் என்னும் பொருள் உண்டு. ஆகையால் தேனை உண்ண வந்த வண்டுகள் நிறைந்த குழல் என்றும் பொருள் கொள்ளலாம். கருங்குழலி என்றதால், என்றும் இளமையாக, கால தத்துவத்தைக் கடந்து நிற்கும் அம்மை என்றார்.

நந்தம்மைக் கோதாட்டி – நம்மை கோது ஆட்டி – குற்றங்களைக் களைந்து, செம்மைப் படுத்தி, மலபரிபாகம் பெறுவதற்கும், சத்திநிபாதம் நிகழ்வதற்கும் நம்மைத் தயார் படுத்துவதாக,

செங்கண வன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் - திருமால், பிரமன் மற்றும் பிற தேவர்கள், இவர்களிடமெல்லாம்

எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் - விண்ணுலக தேவர்கள் மட்டுமின்றி, மற்ற சுத்தமாயா புவன வாசிகளிடத்தும், பிற இடங்களில் உள்ள முனிவர்கள் முதலானோரிடத்தும் காணக்கிடைக்காத பேரின்பத்தை, நம்மை வந்து அடையுமாறு செய்ய, வரம்பிலின்பம், திருமாலும் பிரமனும் அதிகாரச் செருக்குடையவர்களானதால் இன்பம் பெற முடியவில்லை. திருமால் முதலிய தேவர் தலைவர்களாலும் பெற முடியாத இன்பத்தை, கன்னியர்களாகிய நமக்கு அளிக்க வந்தருளி என்றார்.

…..கொங்கு லாம்பொழிற் கோடிகா வாவென
எங்கி லாததோ ரின்பம்வந் தெய்துமே . (5-78-1)

என்ற நாவுக்கரசர் வாக்கு இங்கே குறிப்பிடத் தக்கது.

இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி – நம் வீடுகள்தோறும் எழுந்தருளி, இல்லங்கள் என்பது இருதய கமலங்களான வீடுகளை,

‘இந்திரனும் மாலயனும் ஏனோரும் வானோரும்
அந்தரமே நிற்கச் சிவன்அவனி வந்தருளி’ (8-8-3)

‘பந்தணை விரலியும் நீயும்நின் அடியார்
பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே’ (தி.எழுச்சி -8)

என்ற மணிவாசகரின் பின் வரும் பாடல்களால் இறைவன் இவ்வுலகில் எழுந்தருளியது உணர்த்தப் பட்டது.

செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகனை – செந்தாமரை போன்ற அழகிய திருவடிகளைத் தந்து அருள் செய்ய வலிய எழுந்தருளி வரும் வீரனை. பாதம் தந்தருளல் வீடு பேற்றினைத் தந்தருளுவதைக் குறிக்கும். அவனுடைய பொற்பாதங்களைப் பெற்றால் எங்கும் இலாததோர் இன்பம் எய்துவோம் என்று கூறியவாறு.

அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை – அங்கண் – அருட்கண், அழகிய கண், அங்கண் அரசு – அருளால் அழகு பெற்ற கண்களை உடைய தலைவன். அடியோங்களாகிய எங்களுக்கு சாவா மருந்து போலப் பயன் அளித்ததால் ஆரமுதை என்றார். அடியார்களுக்கு அமுதம் போன்றவன்.

நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் – எங்கள் தலைவனாகிய இறைவனை புகழ்ந்து பாடிக்கொண்டு இன்பம் விளங்கும்படி, திகழ்தல் – சிறந்து விளங்குதல், இறைவன் தாமே கன்னியர்களைத் தேடி வந்ததால், நங்கள் பெருமான் என்று உரிமை பாராட்டியதாக பதிவு செய்கிறார்.

பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் – தாமரைப் பூக்களை உடைய நீரில் பாய்ந்து முழுகுவோமாக.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்……18

இத்திருப்பாட்டில் இறைவன் எல்லாமாய், அல்லதுமாய் நிற்கும் இயல்பினை விளக்குகிறார். இவ்வாறு நிலை பெற்று நிற்கும் இறைவனை புகழ்ந்து இசையால் துதித்து, பெண்களே இந்த அழகிய பொய்கையில் தாவி மூழ்கி நீராடுங்கள் என்று அழைப்பதாகக் கூறுகின்றார்.

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் - திரு அண்ணாமலையின் வடிவத்தைப் பெற்று நிற்கும் இறைவனின் திருவடித் தாமரை மலர்களை சார்ந்து வணங்குகின்ற, அண்ணா – இடத்தின் பெயர், அங்குள்ள மலை, மலையான் – மலை உருவமெடுத்த இறைவன். மாலும் அயனும் தேட, இறைவன் பேரொளிப் பிழம்பாக நின்ற வரலாறு இங்கே நினைவு கூறத்தக்கது. “கடல் வண்ணனும் வேதக், கிளர் தாமரை மலர்மே லுரை கேடில் புகழோனும் அளவா வண்ணம் அழலாகிய அண்ணாமலை அண்ணல்” (1-10-9) என்ற ஞானசம்பந்தர் வாக்கு இங்கே காணத் தக்கது.

விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற்போல் – முடியின் மணித்தொகை – தேவர்களின் மணிமுடியில் உள்ள பலவகை மணிகள்

வீறு – பொலிவு, வேறு ஒன்றிற்கும் இல்லாத பெருமை, அற்றாற்போல் – பொலிவை இழந்தாற்போல், இழந்து மறைவதுபோல, அண்ணாமலையின் பேரொளிப் பிழம்பின் முன் தேவர்கள் அணிந்த பலவகை மணிகளின் ஒளி தம் சிறப்பொளியை இழந்து மழுங்கின என்றார்.

கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் - கண்ணார் இரவி - பெருமை பொருந்திய சூரியன், உயிர்களின் கண்ணுக்குள் நிறைந்து பொருள்களைப் புலப்படுத்தும் சூரியன், இரவி கதிர் – சூரியனின் ஒளிக்கதிர்கள், கார் – கருமை, ஆகுபெயராக இருளை உணர்த்தியது. வைகறையில் பொருந்திய கரிய இருளை உணர்த்தியது. கார் கரப்ப – இருள் மறைய, அகல,

தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப் - தாரகைகள் – கோள்களும், விண்மீன்களும், பேரொளியும் வெம்மையும் உடைய இரவி கதிர் முன், மிக நெடுந்தொலைவில் உள்ள மென்மையான தாரகைகள் ஒளி மழுங்கி மறைந்தன.

பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் – உலகம் சித்தும்(அறிவுப் பொருள்) சடமும் (அறிவற்ற பொருள்) ஆகிய இரு கூறுகள் கொண்டது. சித்துப் பொருள், ஆண், பெண், அலி என்னும் மூன்று பிரிவினை உடையது. சடம், விண்ணிலும், மண்ணிலும் ஆகிய இரண்டு இடங்களிலும் உள்ள மற்ற பொருள்கள். இறைவன் இவற்றினிடையே ஒன்றாயும் வேறாயும் நின்று அருளுகிறான். பெண்ணை முதலில் வைத்தது, இங்கே பெண்கள் பாடுகிறார்கள் என்று தாய்மையை முன்னிருத்தினார்.’அன்னையும் அத்தனும் ஆவாய்’, ‘ பெண் ஆண் அலி எனும் பெற்றியன்’,’அம்மையே அப்பா’ என்ற தொடர்களில் பெண்மையை முன் வைத்துள்ளதை கண்டு உணரலாம்.

“..பெருநலமும் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறர் உருவும் தம் உருவும் தாமேயாகி
நெருநலையாய் இன்றாகி நாளையாகி
நிமிர்புன் சடையடிகள் நின்றவாறே” (6-94-1)

“விரிகதிர் ஞாயி றல்லர் மதியல்லர் வேத விதியல்லர் விண்ணும் நிலனும்
திரிதரு வாயு வல்லர் செறிதீயு மல்லர் தெளிநீரு மல்லர் தெரியில்
அரிதரு கண்ணி யாளை யொருபாக மாக அருள்கார ணத்தில் வருவார்
எரியர வார மார்பர் இமையாரு மல்லர் இமைப்பாரு மல்லர் இவரே.” (4-8-2)

என்ற அப்பர் பெருமானின் பாடல்கள் இக்கருத்தையே உரைக்கின்றன.

பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி -இறைவனின் சர்வ வியாகபத் தன்மையைக் குறிக்கிறது. பிறங்கு – உயர்ந்து, விளங்கி, ஒளிசேர் – ஒளி என்பது அதனையுடைய பொருள்களைக் குறித்தது. (சூரியன், சந்திரன், தாரகைகள் முதலியன) ஒளி மண்டலங்களாகிய இரு சுடர்களும் (சூரியன் சந்திரன்) விண்ணில் இயங்குவதால் விண்ணிற்கு அடைமொழியாக பிறங்கொளிசேர் விண் என்றார்.“விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறைந்து எல்லை இலாதானே நின் பெருஞ்சீர்” என்று அடிகளார் சிவபுராணத்தில் கூறியதைக் கண்டு உணர்க. விண்ணையும் மண்ணையும் குறித்ததால் இடை நின்ற காற்று, நீர், தீ முதலியனவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். எல்லா உலகங்களையும் கொண்டு என்று பொருள்.

இத்தனையும் வேறாகிக் – இவ்வுலகப் பொருள்கள் அனைத்திலும் நிறைந்தும், அப்பொருள்களிடமிருந்து நீங்கியும் நிற்பவன் பரம்பொருள் என்கிறார்.

கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் – கண்ணால் பருகும் அமுதம், இது தேவர்கள் பெற்ற அமுதத்தினின்று வேறுபட்டது. “கண்ணாரமுதக் கடலே போற்றி’ என்று முன் மணிவாசகப் பெருமான் கூறியதை இங்கே ஒப்பிடலாம். இங்கே கண் என்பது அகக் கண்ணைக் குறிக்கும். நம் உள்ளத்தில் உறையும் இறைவனை அகக் கண்ணால் காண இயலும். அவ்வாறு காண்பதற்கும் அவன் கருணை வேண்டும். அந்தக் கருணையை பெற அவன் திருவடிகளை பற்றிப் பாட வேண்டும் என்றார். இவ்வாறு அகக் கண்ணால் அவனைக் காணும் பேறு பெற்றால் அமுதாகிய பிறவாப் பெருநிலை கிடைக்கும் என்பது இங்கே உணர்த்தப் படுகிறது. கீழ்க்கண்ட திருமந்திரப்பாடல் இக்கருத்தை விளக்கும்.

புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே . (10-9-16-10) – 2812

பெண்ணேயிப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய் – பெண்ணே என்ற ஒருமைச் சொல் பன்மைப் பொருளில் வந்துள்ளது. இந்தத் தாமரை முதலிய பூக்களை உடைய நீரில் பாய்ந்து ஆடுவோமாக. எம்பாவாய் – எங்கள் வழிபாட்டிற்குறிய பார்வதி தேவியே நீயும் நீராடி அருள்வாயாக என்றனர்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்……………19

இத்திருப்பாட்டில் அத்துவித நிலையை (பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்றாகிய நிலை) அடைந்த பெண்கள் இறைவனிடம் எங்கள் உடல் பொருள் ஆவி அத்தனையும் உன் பணிக்காகவே ஆக வேண்டும் என்ற வரம் கொடு. இந்த வரம் எங்களுக்குக் கிடைத்தால் சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கு என்ன என்று அது ஒன்றே எங்கள் குறிக்கோள் என்று கூறுகின்றனர்.

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று - இது ஒரு பழமொழி. திருமணத்தில் மணப்பெண்ணின் கையை வைத்து மணமகனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கும்போது சொல்லப்படுவது என்று சிலர் பொருள் கூறுவர். உன்கை என்பது உங்கை என்று எதுகை நோக்கித் திரிந்தது. உன் கையில் உள்ள பிள்ளை உனக்கே அடைக்கலமாகும் என்ற பழமையான பழமொழியை உன்னிடம் சொல்வதற்கு,

அங்கு அப்பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால் - ஒரு தாயிடம் அவள் குழந்தையை நன்றாகப் பார்த்துக் கொள் என்று சொல்லத் தேவையில்லை. அதை அவளே நன்றாக அறிவாள். இவ்வாறு இறைவனிடம் சென்று இம்மகளிர் நாங்கள் உன்னையே அடைக்கலமாகக் கொண்டுள்ளோம் என்று சொல்வதும் பொருளற்றது. இறைவன் மகளிர் அனைவரும் தன் மேல் வைத்துள்ள பக்தியை நன்கு அறிவான். அவர்களின் வேண்டுகோள்களும் அவன் அறிவான். அவனிடம் மறுபடியும் சென்று நாங்கள் உனக்கே அடைக்கலம் என்று கூறுவது தவறு என்ற அச்சம் அவர்களிடையே நிகழ்கிறது. இருப்பினும் அவா மிகுதியால் துணிந்து ‘ எம் அறியாமை நோக்கி கோபம் கொள்ளாமல் எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டு அருள் செய் என்கிறார்கள். புதுக்குதல் – புதுப்பித்தல், இங்கு தங்கள் வேண்டுகோளை மறுபடியும் இறைவனிடம் வைத்தல்.

எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் – எங்கள் பெருமான் – பாடலின் முதலில் வைத்து, இறைவனை எங்களுக்கு சிறப்பாக உரிமை உள்ளவனே என்று அழைப்பதுபோல் கொள்ளவேண்டும். உரிமைப் பொருளைக் காட்டிலும் அடைக்கலமாகப் பெற்ற பொருளை பாதுகாக்க வேண்டியது முக்கியம். ஆகவே எங்கள் அன்பைப் பற்றி ஒன்று விண்ணப்பித்துக் கொள்கிறோம் என்றாள். பல வரங்களை கேட்கின்ற இவள், இறைவன் எளிதில் செவி சாய்க்க வேண்டும் என்பதால் ஒன்று கேட்கிறோம் என்று கூறுகிறாள். கன்னியர் பலர் உள்ளதால் இங்கே பன்மையில் கூறுகிறாள்.

பின் வரும் மூன்று வரிகளில் மகளிர் சிவபெருமானிடம் அன்பு இல்லாதவர்கள் தமக்கு கணவனாக வரக் கூடாது என்பதையே தங்கள் வேண்டுகோளாக இறைவனிடம் கூறுகின்றனர். “பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல் சிறந்து தன் சேவடியே சிறந்திருக்கும்” மகளிரை இறைவன் அவர்களுடைய இயல்பிற்கு மாறான ஆடவரை கணவனாக கொடுக்க மாட்டார் என்றாலும், தம் வினை காரணமாக ஒருகால் அவ்வாறு நிகழுமோ என்ற அச்சத்தில் கூறுகின்றனர்.

எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க - இறை நெறியில் நிற்கும் ஒருவரே எமக்குக் கணவராக வர வேண்டும் என்பது முதல் வேண்டுகோள் ஆயிற்று. எங்களுக்கு வாய்க்கும் கணவர் சிவனடியாராக அமையாவிட்டால் வாழ்க்கை இன்பமில்லாத ஒன்றாக ஆகிவிடும் என்று எண்ணி மெய்யடியார்கள் கணவராக வர வேண்டும் என்று வேண்டுகின்றனர். ஒன்பதாம் திருப்பாட்டில், ‘அன்னவரே எம் கணவர் ஆவார், அவர் உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்’ என்று நேர்மறையில் கூறினர். இங்கு எதிர்மறையில் , அன்னவரல்லாதவர்கள் கணவராக வரக் கூடாது என்று பதிவு.

எம்கை உனக்கல்லாது எப்பணியுஞ் செய்யற்க - சிவனடியார் எங்களுக்கு கணவராக வாய்க்கப் பெற்றால், நாங்கள் சிவனுக்கே எப்பொழுதும் தொண்டு செய்துக் கொண்டிருக்கலாம் என்ற எண்ணத்தினால் இவ்வாறு கூறுகிறாள். ‘இறைவனுக்கு மட்டுமே பணி என்றால் இல்லறக் கடமைகள் இருக்காதா, என்ற வினா எழுகிறது. இறை நெறியில் நிற்பவரே கணவர் என்றால் அவர் செய்யும் எந்தச் செயலும் இறைப் பூசனையாகவே திகழும். அவர் செயல்களுக்கு உதவுதல் இறைவனுக்கான பணி என்று எண்ணப்படும். முன் பாடலில் இறைவனின் சர்வ வியாபகத் தன்மையைப் பற்றி பாடினர். ஆகவே இல்லறமும் இறைவனின் இருப்பிடமே என்று கொள்வதில் தவறில்லை. இல்லறக் கடமைகளை இறைவனுக்கு செய்யும் தொண்டாக எண்ணிப் பணிவது இறைத் தொண்டாகும்.

கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க – கங்குல் – இரவு, இருள், நனவிலும், கனவிலும், இரவிலும், பகலிலும் எம் கண்கள் நின்னையே கண்டு களித்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறார்கள். இறைபணியாகக் கருதி ஒவ்வொரு செயலையும் செய்யும்போது, எங்கும் எதுவும் இறைவனாகவே தோற்றமளிக்கக் கூடிய நிலை ஏற்படும். உன்னையல்லாது என்று முன் பாட்டில் உள்ளதையும், மற்றொன்றும் என்பதையும் இணைத்துப் பொருள் கொள்ளவும்.

தோள் சேரற்க என்று ஒத்த கருத்துடைய தன்மையைக் கூறி – மனத்தாலும், எப்பணியும் செய்யற்க என்று செயலைக் கூறி – மெய்யாலும், மற்றொன்றும் காணற்க என்று கண்ணாலும் புறஞ்சொல்லாமையை வேண்டினர்.

பாவையர் தம் கோரிக்கைகளை “வேண்டும்” என்ற நேர்நிலையில் கேட்காமல், செய்யற்க, சேரற்க என்ற எதிர்நிலை தோன்றக் கேட்டது தங்களுடைய நிலையான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதற்காக.

இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல் – உயிர் சிவச் சார்பிலிருந்து நீங்கி, உலகப் பற்றைச் சார்ந்தால், மீண்டும் பாசத்தில் அழுந்தி பதைக்கும் என்பதை எண்ணி இவ்வாரு கூறுகின்றனர். இப்பரிசே – இவ்வாறே, நாங்கள் வேண்டிக் கொண்டவை, எம்கோன் – எங்களை ஆட்கொண்ட தலைவன், அரசன், நல்குதியேல் – அருள் செய்வாயாகில் எங்கள் பிறவித்துயர் ஒழிந்து, சாயுச்சிய நிலை பெறுவோம்.

எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய் - மேற்சொன்ன நிலை வந்ததும் ஞாயிறு எங்கு உதித்தால் எங்களுக்கு என்ன என்று உரைப்பதாக பதிவு செய்துள்ளார் மணிவாசகப் பெருமான். ‘கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் என்ன’ என்பது ஓர் பழமொழி. ஞாயிறு காலத்தை அளப்பவன். நாங்கள் வேண்டும் வரங்கள் எமக்குக் கிடைத்துவிட்டால், நாங்கள் காலத்தை வென்றவர்கள் ஆவோம் என்று உணர்த்துகின்றனர்.

மற்றும் இது கவலையற்றோர் கூறும் சொற்றொடர். சீவன் முத்த நிலையை அடைந்துவிடுவதால் காலத்திற்கு உட்பட்டவர்களாக ஆகமாட்டோம் என்றனர்.

வானந் துளங்கிலென் மண்கம்ப மாகிலென் மால்வரையும்
தானந் துளங்கித் தலைதடு மாறிலென் தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென் வேலைநஞ்சுண்
டூனமொன் றில்லா வொருவனுக் காட்பட்ட வுத்தமர்க்கே. (4-112-8)

…”எண்ணுமிக லோகத்தே முத்திபெறும் இவன்றான்
எங்கெழிலென் ஞாயிறெமக் கென்றுகுறை வின்றிக்
கண்ணுதல்தன் நிறைவதனிற் கலந்து காயம்
கழிந்தக்கால் எங்குமாய்க் கருதரன்போல் நிற்பன்”
                                                                             (சி.சித்தியார் சூ.8. 31)

அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். (அற்புதத் திருவந்தாதி – 3)

என்ற பாடல்கள் இக்கருத்தை விளக்கும்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள்
போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனுங் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்………………..20

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் சோதியாகிய இறைவனின் திருவடிகளைப் போற்றுவது மானிடப் பிறவி எடுத்ததின் மிக உயர்ந்த பயனாகச் சொல்லப் படுகிறது. ஆகவே இத்திருப்பாட்டில் இறைவன் திருவடிகளே எல்லாமாக இருப்பதை உணர்ந்து, அவற்றைப் பலவகையாலும் போற்றிப் புகழ்வது எடுத்துரைக்கப் பட்டுள்ளது. கன்னியர்கள் அனைவரும் மார்கழி நீராடி, இறைவனுடைய திருவடிகளை தளிராகவும், பொற் பூக்களாகவும் போற்றித் தம்மைக் காத்தருளுக என்று வேண்டுகிறார்கள்.

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் – முதல் இரண்டு அடிகளில் உள்ள ‘போற்றி அருளுக’ என்பதை அடிகளின் இறுதியில் வைத்து பொருள் கண்டால் நலம். எல்லாப் பொருள்களுக்கும் முதலாகிய நின் திருவடி மலர்கள் எம்மை பாதுகாத்து அருளுக. இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவனே அனைவருக்கும் ஆதி ஆயினான். எல்லாப் பொருள்களுக்கும் முதல் ஆவது இறைவன் திருவடிகளே,

போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் – இறைவனது திருவடிகள் முடிவாக எல்லாப் பொருள்களும் சென்று சேரும் இடமாக இருக்கின்றது. ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு நிறம் அடையாளப் படுத்தப் படுகிறது. இவ்வாறு பஞ்சபூதங்களில் நெருப்புக்கு உரிய நிறம் சிவப்பு. அழிவைக் கொடுக்கும் அனலை தம் கையில் ஏந்திக் கொண்டு ஆடுபவன் தில்லை அம்பலவன். அந்த சிவப்பு நிறத்தைக் குறிப்பதாகவே ‘செந்தளிர்கள்’ என்றார். ஒரு செடியில் முதலில் தளிர்கள் தோன்றும்.பின்னர் மலர்கள் தோன்றும். இங்கே பேரூழியைச் செய்யும் திருவடிகளைத் தளிர்கள் என்றது அடுத்து புனருற்பவம் நிகழ்வதற்கான குறிப்பு தோன்றுமாறு கூறினார் என்று கொள்ளலாம். முடிந்த பொருளே தோன்றுவதற்கு வித்தாய் இருப்பது என்பதை கண்டு உணர்க. அடுத்து ‘தோற்றமாம் பொற்பாதம்’ என்பதும் இக்கருத்தை வலியுறுத்தும்.

போற்றிஎல் லாவுயிர்க்குந் தோற்றமாம் பொற்பாதம் - இறைவனது திருப்பாதம் பொற்பாதம். பொன்னை ஒத்த நிறமும், ஒளியும் உள்ள பாதம் என்றும் பொருள் கொள்ளலாம். தோற்றமாம் என்பதன் மூலம் படைப்புத் தொழில் விளக்கப் பட்டது. பஞ்சபூதங்களில் ஒன்றான பூமிக்கு உண்டான நிறம் பொன்னிறம். ஆகையால் பொற்பாதம் ஆகியது.

போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் – தோன்றிய உயிர்கள் தங்கள் வரையறுத்த கால அளவில், இன்பங்களை நுகர்ந்து, வினைக்கழிவு பெற்று பேரின்ப நிலையை அடைவதற்கு, போகப் பொருளாய் விளங்குவன பூங்கழல்கள் என்றார். பிராரத்த வினை முழுதும் நுகர்ந்து கழியும் வரை உயிர் உடலைவிட்டுப் பிரியாமல் காப்பது இறைவனின் அருட் சக்தி. ஆகையால் இங்கு போகம் காத்தல் தொழிலைக் குறித்து நின்றது.

போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள் – வினைக்கழிவு ஏற்பட்ட பின் எல்லா உயிர்களும் தம்மிடத்து ஒடுங்கப் பெறுவதால் ‘ஈறாம் இணையடிகள்’ என்றார்.

இத்திருப்பாட்டில் முதலில் கூறிய ஆதியும் அந்தமும் என்பன திருவடிகள் அநாதி நித்யமானவை என்பதை அறிவிக்கின்றது. பின்னற்கூறிய தோற்றமாம் என்பது படைப்பையும், போகமாம் என்பது காப்பையும், ஈறாம் என்பது அழிப்பதையும், காணாத புண்டரீகம் என்பது மறைப்பையும், ஆட்கொண்டு அருளும் பொன் மலர்கள் அன்பது அருளலையும் குறித்து இறைவன் திருவடியே ஐந்தொழில்களையும் செய்கின்றது என்பதை உணர்த்தினார். இறைவனும் அவன் திருவடியாகிய சத்தியும் வேறு இல்லையாகையால், இறைவன் செய்யும் திருவிளையாடல்கள் அவன் திருவடிமேல் ஏற்றிக் காட்டப் பட்டது.

உலகத்தை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழிலும் இங்கு கூறப்படுகிறது. திருமந்திரம் நீங்கலாக மற்ற திருமுறைகளுள் ஐந்தொழில்களையும் விளங்கக் கூறும் பாட்டு இது ஒன்றேயாகும். ஆகையால் இது, சிவ ஆகமங்களுள் ‘பஞ்சப்பிரம மந்திரம்’ எனக் கூறப்படும் மந்திரத்திற்கு ஒப்பானது.

                                                            திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக